மாந்தர் தமைப்பேணிக் காத்தருளும் வேந்தர்க்கு உயர்குணங்கள் வேண்டும் - மாட்சி, தருமதீபிகை 791

நேரிசை வெண்பா

மாந்தர் தமைப்பேணி மாநிலத்தைக் காத்தருளும்
வேந்தர்க்(கு) உயர்குணங்கள் வேண்டுமே - நேர்ந்துள்ள
சீர்மை மரபில் செனித்து வரினுமே
நீர்மை அளவே நிலை. 791

- மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனித சமுதாயத்தை இனிது பேணி உலகத்தைப் பாதுகாக்க நேர்ந்த அரசர் உயர்ந்த குண நலங்களுடையராய்ச் சிறந்திருக்க வேண்டும்; பெரிய அரசகுடியில் பிறந்திருந்தாலும் இனிய நீர்மையளவே மகிமைகள் மருவி வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். குணநலமே உயர்நிலை என இது உணர்த்துகின்றது.

உலகில் காணும் உயிரினங்களுள் மனித மரபு உயர்ந்து நிற்கிறது. ஓர்ந்துணரும் திறம் நன்கு அமைந்திருத்தலால் மனிதன் எங்கும் உயர்ந்தவனாய்ச் சிறந்து திகழ்கின்றான். இந்த மனிதக் கூட்டத்துக்குத் தலைமை அதிபதியாய் நேர்ந்தவன் அரசன் என வந்தான். மாந்தர் வணங்கி வாழ்த்த மகிமை தோய்ந்து வந்துள்ளமையால் வேந்தன் யாண்டும் வியனிலையாளனாய் விளங்கி நின்றான். சிறப்பு நிலை பிறப்புரிமையாய் வந்துள்ளது. சிறந்த குடிப்பிறப்புக்கு உரிய குணநலங்கள் நன்கு அமைந்த போதுதான் அந்த அரசன் உயர்ந்த கோமகனாய் ஒளி பெற்று நிற்கின்றான். இனிய இயல்பு அரிய உயர்வாகின்றது.

இற்பிறந்தார் கண்ணல்ல(து) இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு! 951 குடிமை

செம்மையும் நாணமும் சீரிய குடியில் பிறந்தாரிடம் இயல்பாக அமைந்துள்ள நீர்மைகளாம் எனத் தேவர் இவ்வாறு குறித்துள்ளார். மேன்மையான நல்ல குடிப்பிறப்பிற்கு உரிய பான்மைகளை இது நன்கு வரைந்து காட்டி விளக்கியுள்ளது.

.செப்பம் - மனத்தின் செம்மை; மனமும் வாக்கும் செயலும் தம்முள் மாறுபடாமல் ஒருமையாய் மருவி நிற்கும் நேர்மை செப்பம் என வந்தது. இந்தச் செவ்விய தன்மை செங்கோன்மைக்கு மூல முதலாம். பழி பாவங்களுக்குக் கூசி விலகும் விழுமிய நீர்மை நாண் என நின்றது. செம்மையும் நாணமும் உடையவர் எவ்வழியும் சிறந்த நன்மைகளையே செய்து வருவர்; புன்மைகள் யாதும் எவ்வகையிலும் அவர்பால் அணுகா.

இத்தகைய தன்மைகள் அமைந்த மன்னர் உத்தம நிலைகளை உலகில் பரப்பி எத்திசையும் புகழ இதம் புரிந்து வருகின்றனர். உயர் நிலையில் வந்துள்ள அரசரிடம் உயர் குணங்கள் இயல்பாக அமைந்துள்ளன. நீர்மைகளால் வேந்து சீர்மை யுறுகிறது.

நயனும் வாய்மையும் நன்னர் நடுவும்
இவனில் தோன்றிய இவைஎன இரங்கப்
புரைதவ நாடிப் பொய்தபுத்(து) இனிதாண்ட அரசன்! - நெய்தல் கலி

சத்தியம் முதலிய உத்தம நீர்மைகளோடு உலகை ஆண்டவன் என ஓர் அரசனைக் குறித்துச் சங்கப் புலவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். நயன் முதலிய வியனான குணங்கள் அவனிடம் தோன்றின என்றதனால் அவனது தோற்றமும் ஏற்றமும் துலங்கி நின்றன. நல்ல இயல்புகள் மன்னனை மருவி வருகின்றன.

நயனும் நண்பும் நாணுநன் குடைமையும்
பயனும் பண்பும் பாடறிந்(து) ஒழுகலும்
நும்மினும் உடையேன்! 160 நற்றிணை

தனது நிலைமை நீர்மைகளைக் குறித்து ஒரு தலைவன் இவ்வாறு உரைத்துள்ளான். நயன் - ஈகை, இர க்கம், நீதி.

உலக மக்களுக்குக் தலைமையாளனாய் அரசன் உயர்ந்து வருதலால் குண நீர்மைகள் அவனிடம் இயல்பாய் அமைந்து வருகின்றன. உருவ அழகும் உள்ளப் பண்பும் விழுமிய மேன்மைகளும் அரச மரபோடு வழிமுறையே தழுவி மிளிர்கின்றன.

"வனப்பும் இளமையும் வரம்பில் கல்வியும்
தனக்கு நிகரில்லாத் தன்மையன்,
வென்றியும் விறலும் விழுத்தகு விஞ்சையும்
ஒன்றிய நண்பும் ஊக்கமும் முயற்சியும்
ஒழுக்கம் நுனித்த உயர்வும் இழுக்கா
அமைச்சின் அமைதியும் அளியும் அறனும்
சிறப்புழிச் சிறத்தலும் சிறந்த ஆற்றலும்
வெங்கோல் வெறுப்பும் செங்கோல் செல்வமும்
செருக்கிச் செல்லும் செலவினன்.” - பெருங்கதை

உதயண மன்னனுடைய குண மாண்புகள் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளன. குறிப்புகள் கூர்ந்து சிந்திக்க வுரியன.

இனிய பான்மைகள் அரிய மேன்மைகள் ஆகின்றன. மணத்தால் மலர் மாண்புறுகிறது; குணத்தால் மனிதன் மகிமையுறுகிறான். மனித சமுதாயத்தை இனிது பேணவந்த அரசன் குணங்களால் உயர்ந்த அளவு கோமுறையில் சிறந்து திகழ்கிறான்.

சத்தியம், கருணை, நேர்மை முதலிய உத்தம நீர்மைகள் உயர்ந்த ஆத்தும சக்திகளாய் ஒளி புரிந்துள்ளன. இத்தகைய குண நலங்களை மருவி வருபவர் அரிய பெரியராய் அற்புதங்களைச் செய்கின்றனர். தேவர் முதல் யாவரும் குணம் மருவிய வழியே மனம் பெருகி மகிமை மாண்புகள் ஓங்கி வருகின்றனர்.

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

உருளும் நேமியும், ஒண்கவர் எஃகமும்,
மருளில் வாணியும் வல்லவர் மூவர்க்கும்
தெருளும் நல்லற மும்,மனச் செம்மையும்,
அருளும் நீத்தபின் ஆவதுண் டாகுமோ? 11 மந்தரை சூழ்ச்சிப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

இதன் பொருள் நிலைகளை ஊன்றி உணர வேண்டும். அரச தருமங்களைப் போதித்து வரும்போது இராமனை நோக்கி வசிட்டர் இவ்வாறு கூறியிருக்கிறார், திருமால், சிவன், பிரம்மா மூவரும் தேவ தேவர்கள். சீவ கோடிகளைக் காத்தல், அழித்தல், படைத்தலைச் செய்து வருகின்றனர். முதல்வராயுள்ள அவரும் தரும நீதிகளைக் தழுவி நின்றே தம் கருமங்களைப் புரிகின்றனர். அறம், மனச்செம்மை, அருள் இம்மூன்றும் அம்மூர்த்திகளுக்கு ஊன்று கோல்களாயுள்ளன. இக் குணநீர்மைகளைச் சிறிது நீங்கினும் அவர் வலியிழந்து பெரிதும் பிழைபட நேர்வர் என முனிவர் மொழிந்துள்ளது நுணுகி உணர்ந்து கொள்ள வுரியது.

நல்ல குணங்களினாலேதான் கடவுளும் வல்லவராய் நிலைத்து மகிமையாய் நிற்கிறார், இந்த உண்மையை ஓர்ந்து மனிதன் குணவானாய் நன்மை அடைந்து கொள்ள வேண்டும். தருமநீதி, மன நேர்மை, சீவதயை ஆகிய இவை தெய்வீக சக்திகளாயுள்ளன; இந்தக் குண மாட்சிகளைத் தழுவி ஒழுகி ஆட்சி புரிகிற அரசன் என்றும் வென்றி நிலையில் விளங்கி நின்று விழுமிய மகிமைகளை அடைந்து கொள்கிறான். தன்மை உயரத் தலைமை உயர்கிறது. .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Mar-21, 9:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 98

சிறந்த கட்டுரைகள்

மேலே