நீசம் அணுகாமல் ஆளும் அரசே மனுவின் மனுவாம் மதி - ஆட்சி, தருமதீபிகை 782

நேரிசை வெண்பா

தேசமக்கள் எவ்வழியும் சீரும் சிறப்புமாய்
வாசம் புரிய வழிவகுத்து - நீசம்
அணுவும் அணுகாமல் ஆளும் அரசே
மனுவின் மனுவாம் மதி. 782

- ஆட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னாட்டில் உள்ள மக்கள் எவ்வழியும் சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருதற்கு உரிய வழிகளைத் தகுதியாக ஆய்ந்து வகுத்து அல்லல் யாதுமணுகாமல் பாதுகாத்து வரும் அரசன் ஆதி மனுவினும் நீதி மனுவாய் நிலவி நிறைபுகழ் பெறுவன் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தாம் சுகமாகவும் உயர்வாகவும் வாழவேண்டும் என்றே யாவரும் இயல்பாய் யாண்டும் முயன்று வருகின்றனர். சீவர்கள் பலவகை நிலைகளில் மருவி வந்திருத்தலால் ஆவலும் தேவைகளும் அதிகரித்து நிற்கின்றன. அதனால் மாறுபாடான போராட்டங்கள் மீறி எழுகின்றன. மெலியரை வலியரும், வறியரைச் செல்வரும், அறிவிலிகளை அறிவாளரும் அடக்கி ஆள நேர்கின்றார். தன்னல விழைவு மனிதனிடம் மிகுதியாய் மன்னி இருத்தலால் வாழ்க்கையில் இன்னல்கள் பின்னி நிகழுகின்றன.

இன்னவாறான இடையூறுகளைத் தடைசெய்து நீக்கிக் குடிசனங்கள் நெறிமுறையே ஒழுகி இனிது வாழும்படி செய்வது அரசனுடைய கடமையாய் அமைந்தது. கடமையைக் கருதிச் செய்பவன் தனது உடைமைக்கு உரியவன் ஆகின்றான்.

ஆளப்பிறந்தவன் வாழப்பிறந்தவர் யாவருக்கும் வாழ்க்கையை வளம்படுத்தி நிலம் திருத்தி நீதி புரிந்து வர வேண்டும். அவ்வாறு வந்தபோதுதான் அவனுடைய பிறப்பு, இருப்பு, அறிவு, ஆற்றல், ஆட்சி மாட்சிமை அடைந்து மகிமைகள் பெறுகின்றன.

தனக்கு உரிமையாய் அமைந்த பரிபாலன முறையைச் சரியாகச் செய்துவரின் அந்த அரசன் அரிய பல மேன்மைகளை எளிதே அடைந்து கொள்ளுகிறான். அவ்வாறு கருமம் புரியாமல் நின்றால் தருமம் அவனை விலகி விடுமாதலால் சிறுமைகள் சேர நேர்கின்றன. உரிமையை உணராதவன் ஊனம் உறுகின்றான்.

தேசமக்கள் சிறந்து வாழ்வதும் இழிந்து தாழ்வதும் அரசனுடைய கருமக்காட்சியின் சிறப்பாலும் மறப்பாலும் வாய்ந்து வருகின்றன. இத்தகைய அரிய பொறுப்பு தன்மேல் அமைந்திருத்தலால் மன்னன் யாண்டும் அயராமல் மூண்டு வினை செய்ய வேண்டியது நீண்ட விதி நியமமாய் நின்றது. காவல் தெய்வமான திருமால் உறங்கும் போதும் உலக உயிர்களின் நிலைகளை நினைந்து உறங்குவார். அதனால் அவரது உறக்கம் அறிதுயில் என நின்றது. அத்துயில் அரசனுக்கும் உரிமையாம்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

அரிதுயில் அறிதுயில் ஆன வாறுபோல்
புரிதிநீ புரிதுயில் புவனம் யாவையும்
பரிதிவா னவன்ஒளி பரந்த தென்னவே
பெரிதுநேர் பேணுக பெருமை காணுக.

அரசே! நீ உறங்கும் போதும் காப்புக் கடவுள் போல் உலக மக்களுடைய சேமத்தைப் பேணி வருக என்று ஒரு வேந்தனை நோக்கிப் போதித்துள்ள இது ஊன்றி உணரவுரியது.

தனக்குப் பிறப்புரிமையாய் அமைந்த ஆட்சிப் பொறுப்பை உணர்ந்து நாட்டைப் பாதுகாத்து மக்களுக்கு நன்மை செய்துவரின் அவன் நீதி மன்னனாய் நிலவி நெடிய புகழை அடைகிறான். உரிய கருமம் அரிய பெருமைகளை அருளுகின்றது.

Justice is the having and doing what is one’s own. - Plato

'ஒருவனுடைய சொந்தமான கடமையைச் செய்து உடைமையை அனுபவிப்பதே நீதி நெறியாம்' எனப் பிளாட்டோ இவ்வாறு கூறியிருக்கிறார் மன்னன் ஆட்சி மன்னுயிர்க்கெல்லாம் இன்னுயிர்த் துணையாயிருத்தலால் அவன் என்ன வகையிலும் பின்னமுறாமல் பேணிவருவது காணியாய் வந்தது.

நேரிசை வெண்பா

பெரும்பூண் சிறுதகைப் பெய்ம்மலர்ப் பைந்தார்க்
கருங்கழல் வெண்குடையான் காவல் - விரும்பான்
ஒருநாள் மடியின் உலகின்மேல் நில்லா
திருநால் வகையார் இயல்பு. – வெண்பா மாலை

அரசன் காவல் ஒருநாள் மடியின் உலகம் பெருநோய் அடையும் என இது குறித்திருக்கிறது. குறிப்பைக் கூர்ந்து சிந்திப்பவர் அரசனது பொறுப்பையும் சிறப்பையும் ஓர்ந்துணர்ந்து ஆட்சி நிலையை நன்கு தேர்ந்து கொள்ளுவர்.

அருந்திறல் அரசர் முறைசெயின் அல்லது
பெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாது - சிலப்பதிகாரம், 28

மாதர் கற்பு மன்னர் முறையால் மன்னியுள்ளது என்னும் இது உன்னி யுணரவுரியது. ஆண்பாலும் பெண்பாலும் மாண்பாய் ஒழுகுவது விழுமிய ஆட்சியின் மாட்சியால் விளைவதாம்.

மனித சமுதாயம் புனித நிலையில் இனிது வாழ வேண்டுமானால் நீதிமுறை தழுவி அரசன் நெறியே ஆள வேண்டும். மாந்தர் மகிழ்ந்து வாழ்ந்து வரச்செய்யின் அவ்வேந்தன் மனுவின் மனுவாய் உயர்ந்து வானும் வியந்து புகழ விளங்கி மகிழ்வான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-21, 12:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

சிறந்த கட்டுரைகள்

மேலே