நுண்மையாய் ஆராய்ந்தறியும் அமைதி அரசுக்குச் சீரேந்தி நிற்கும் - மாட்சி, தருமதீபிகை 792

நேரிசை வெண்பா

உண்மை உறுதி உயர்நோக்கம் எவ்வழியும் .
திண்மை தெளிவு திறலுடைமை - நுண்மையாய்
ஆராய்ந்(து) அறியும் அமைதி அரசுக்குச்
சீரேந்தி நிற்கும் சிறந்து. 792

- மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சத்தியம், மனவுறுதி, உயர்ந்த குறிக்கோள், சிறந்த திண்மை, தேர்ந்த தெளிவு, ஆர்ந்த திறல், ஆராய்ந்து உணரும்.அறிவு, அமைதி: ஆகிய இந்நீர்மைகள் அரசனுக்கு மிகுந்த சீர்மைகளை விளைத்து எவ்வழியும் உயர்ந்த நன்மைகளை அளித்தருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் மெய்யனாய் நின்று வையம் ஆளுக என்கின்றது.

விழுமிய தலைமையில் வழிமுறையே சிறந்து நின்று உயிர்களைப் புரந்துவரும் உரிமையை உயர்ந்த கடமையாக அரசன் அடைந்து வந்துள்ளான். இயல்பாகவே அதிபதியாய் வந்துள்ள அவனிடம் உயர்வான குணநலங்கள் ஒளிபெற்று வருகின்றன. இனிய பண்புகளை மருவியுள்ள அளவு அரிய பெரிய மகிமைகளில் பெருகி நின்று அதிசய காரியங்களை அவன் செய்கின்றான்.

உலகத்தை ஆளும் தலைமையும் உயர்ந்த ஆற்றலும் சிறந்த குணங்களால் திகழ்ந்து வருகின்றன. குணங்களுள் சத்தியம் மிகவும் சிறந்தது. புனித பாவனமாய் மனித சமுதாயம் தனிநிலையில் உயர்ந்து உய்யும்படி செய்ய வல்லது மெய்யே. இந்த ஒன்றை உரிமையோடு பேணிவரின் அந்த மனிதன் அதி பரிசுத்தனாய் ஓங்கி நின்று அரிய பல மகிமைகளை எதிரே காணுகிறான்.

உண்மை கடவுளின் உருவம். சத்து, சித்து, ஆனந்தம் எனக் கடவுளை வேதங்கள் வருணித்திருக்கின்றன. சத்தியமாய் இருப்பது எதுவோ அது சத்து என வந்தது. சத்தியத்தை உறுதியாகப் பற்றி நிற்பவன் பரம்பொருளின் உரிமையைப் பெற்றுச் சத்தனாய் நிற்கின்றான்.. சத்தன், சுத்தன் என்பன சத்தியவானுக்குப் பெயர்களாய் வந்துள்ளன. உடம்பு நீரால் சுத்தமாதல் போல் உள்ளம் சத்தியத்தால் சுத்தம் ஆகிறது. நீராலன்றி வேறு யாதாலும் உடல் சுத்தம் ஆகாது; சத்தியத்தாலன்றி மனித உள்ளம் புனிதமாகாது. அகத்தூய்மை அதிசய மகிமையாம்.

புறம்துாய்மை நீரான் அமையும்; அகந்துாய்மை
வாய்மையால் காணப் படும். 298 வாய்மை

அகத்தை வாய்மையால் தூய்மை செய்யுங்கள் என்று மனித சமுதாயத்துக்குத் தேவர் இவ்வாறு போதித்திருக்கிறார். மனம் புனிதமான போது மனிதன் மகானாய் விளங்குகிறான். சத்தியம் சித்தத்தைத் சுத்தி செய்கிறது; அந்தச் சித்த சுத்தி அதிசய சக்திகளாய் அரிய சித்திகளைச் செய்கிறது. உள்ளத்தில் மாசு நீங்க உயிர் தேசுற்று அந்த மனிதனிடம் அரிய ஆற்றல்கள் பெருகிப் பெரிய மகிமைகள் மருவி வருகின்றன.

My strength is as the strength of ten,
Because my heart is pure. - Tenneyson

'என் உள்ளம் சுத்தமாயிருத்தலால் எனது பலம் அதிக வலிமையடைந்துள்ளது' என ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் இவ்வாறு கூறியிருக்கிறார்.

உண்மை உள்ளத்தைப் புனிதமாக்கி உயர்ந்த திண்மையை அருளி மனிதனைப் புனிதமான ஒரு தெய்வமாய்த் திகழச் செய்யவே வைய மாந்தர் எவரினும் மெய்யன் மேலானவனாய் விளங்கி யாண்டும் மகிமையோடு நீண்டு நிற்கின்றான்.

A devotee of Truth may not do anything in deference to convention.

'சத்தியத்தை உரிமையோடு பேணி வருகிறவன் யாவருக்கும் அடங்கி ஏதும் செய்ய வேண்டியதில்லை’ எனக் காந்தியடிகள் இவ்வாறு உண்மையின் உயர்வை நன்கு குறித்திருக்கிறார்.

உள்ளத்தில் உண்மையுடையவன் எவ்வழியும் யாதும் பிழையிலனாய் விழுமிய நிலையில் விளங்கி நிற்பான், திண்மையும் தேசும் அவனிடம் செழித்து ஓங்கும்; தன் கடமையைக் கருதியுணர்ந்து உயிர்களை உரிமையோடு பேணி அருளவே பரம்பொருள் அருள் பெருகி வரும்; அதனால் எல்லா நலங்களையும் எளிதே அடைந்து ஒளிமிகுந்து அவ்வேந்தன் உயர்ந்து விளங்குகின்றான். வாய்மையாளன் வையம் யாவும் ஆளுகிறான்.

வாய்மையின் வழாஅது மன்னுயிர் ஒம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள். - சிலப்பதிகாரம்

சத்தியவானாய் உயிர்களைப் பேணி வருபவனுக்கு உளவாம் பலனை இது உணர்த்தியுளது. யாரும் அடைய முடியாத அரிய பொருள்கள் எல்லாம் வாய்மையும் கருணையும் உடையவரிடம் உரிமையாய் வந்து சேருகின்றன. இத்தகைய குண நீர்மைகளை எத்தகைய நிலையிலும் இனிது மருவி வருபவர் உத்தம அரசராய் ஒளிவீசி வருகின்றார். மெய்யனிடம் மேன்மைகள் மேவுகின்றன.

பொய்ப்பகையே! மெய்க்கு அணியே! புகழின் வாழ்வே! - இராமாயணம்

எனத் தசரதன் இப்படிக் துதி பெற்றுள்ளான். சத்தியத்தை அரசன் எப்படிப் பேணி வர வேண்டும் என்பதை இந்தச் சக்கரவர்த்தி நன்கு ஒழுகிக் காட்டியிருக்கிறான். மனித சமுதாயம் இனிது திருந்தி வருதற்கு மன்னனது புனிதநிலை இனிய வழி காட்டியாயுள்ளது. தலைவனை உலகம் தழுவி வருகிறது.

பெரிய எண்ணங்களையே பேணி ஒழுகி அரிய காரியங்களை ஆற்ற வேண்டும் என்பது உயர் நோக்கம் என்றதனால் உணர வந்தது. சிறியன சிந்தியாமல் பெரியனவே கருதி அரியன .செய்து உரியன ஓர்ந்து புரிந்து வருவதே அரச இயல்பாம்.

நல்லது என்று ஒரு காரியத்தை எண்ணித் துணிந்த பின் இடையே நேரும் அல்லல்களைக் கண்டு நெஞ்சம் தளராமல் நிலைத்து நிற்பது திண்மை என நின்றது. அஞ்சாத ஆண்மையோடு அமைந்த இந்த நெஞ்சத் திட்பம் அரசுக்கு அதிசய மேன்மைகளை அருளி யாண்டும் உறுதி நலங்களை உதவி வரும்.

அருச்சுனன் நாடிழந்து காடு புகுந்தான். மூண்டுள்ள பகையை வெல்ல வேண்டுமானால் ஆண்டவன் அருளை அடைய வேண்டும் என்று துணிந்தான். இமயமலையை அடைந்தான். சிவபெருமானை நினைந்து அருந்தவம் புரிந்தான். இவன் புரிந்த தவநிலையைக் கண்டு அருந்தவர் யாவரும் வியந்து புகழ்ந்தார்.

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் காய் மா தேமா ஆஇயடிக்கு)

ஒருதாளின் மிசைநின்று நின்ற தாளி
..னூருவின்மே லொருதாளை யூன்றி யொன்றும்,
கருதாமன் மனமடக்கி விசும்பி னோடுங்
..கதிரவனைக் கவர்வான்போற் கரங்க ணீட்டி,
இருதாரை நெடுந்தடங்க ணிமையா தோரா
..யிரங்கதிருந் தாமரைப்போ தென்ன நோக்கி,
நிருதாதி பரின்மனுவாய்த் தவஞ்செய் வாரி
..னிகரிவனுக் கார்கொலென நிலைபெற் றானே. 38

கருந்துறுகல் லெனக்கருதிப் பிடியுங் கன்றுங்
..களிற்றினமு முடனுரிஞ்சக் கறையா னேறிப்,
பொருந்துமுழைப் புற்றதெனப் புயங்க மூரப்
..பூங்கொடிகண் மரனென்று பாங்கே சுற்றப்,
பரிந்துவெயி னாண்மழைநாள் பனிநா ளென்று
..பாராம னெடுங்காலம் பயின்றான் மண்ணில்,
அருந்தவமுன் புரிந்தோரி லிவனைப் போன்மற்
..றார்புரிந்தார் சிவசிவவென் றரிய வாறே. 41 அருச்சுனன் தவநிலைச் சருக்கம், இரண்டாம் பாகம், பாரதம்,

விசயன் புரிந்துள்ள தவநிலையை இதில் வியந்து நோக்கி உவந்து நிற்கிறோம். எவ்வளவு மனத்திண்மை யிருந்தால் இவ்வளவு உறுதியோடு ஒரு முகமாய் ஊன்றி நிற்க முடியும்? என்பதை ஓர்ந்துணர்ந்து கொள்ள வேண்டும். சத்திரிய வீறு வெற்றியான வினையாண்மைகளோடு ஈண்டு விளங்கி நிற்கிறது.

கலைகள் பல பயின்று உலக நிலைகளை ஓர்ந்து உண்மைகளை ஆராய்ந்து தேர்ந்து தெளிந்து கொள்வது தெளிவு என வந்தது. தலைமை அதிகாரமும் திருவின் போகமும் செல்வ வளங்களும் பெருகியுள்ளமையால் அமைதியும் பணிவும் அரசனிடம் அமைந்து வருதல் அரிதாம். உள்ளத் தூய்மையும் அறிவுத் தெளிவும் அமைதியும் அமையின் அவை பேரின்ப நிலையங்களாம்.

சிறந்த பெருந்தன்மைக்கு அடையாளம் சித்த சாந்தியே. எதையும் நிதானமாக ஆராய்ந்து நிலைமைகளை உணர்ந்து நீதிகளை ஓர்ந்து கொள்வது அரசனுக்கு உயர்ந்த பண்பாடாய் வந்தது.

அபிடேக பாண்டியன் என்னும் இனிய அரசன் மதுரையிலிருந்து அரசு புரிந்து வருங்கால் அங்கே ஒரு சித்தர் தோன்றிப் பல அற்புதங்களைச் செய்தார். நகர மாந்தர் யாவரும் அவரை வியந்து புகழ்ந்தார். மன்னன் அவரை நேரே காண விழைந்து மந்திரிகளை அனுப்பினான். தம்மை அரண்மனைக்கு அழைத்து வரும்படி வேந்தர் அனுப்பினாரென அமைச்சர் வந்து சித்தரிடம் உரைத்து வேண்டினார். அதற்குச் சித்தர் சிரித்தார். உங்கள் அரசனால் எனக்கு ஆக வேண்டிய காரியம் யாதும் இல்லை; போங்கள்! என்று அவர் போக்கி விடுத்தார். அவர் மறுத்த நிலையை மன்னன் அறிந்தான், வருத்தம் அடையவில்லை; இறைவன் திருவருளைப் பெற்றுள்ள ஞான யோகிகள் எவரையும் மதியார்; நித்திய முத்தியில் நிலைத்து நிற்கின்ற அவர் அநித்திய வாழ்வுகளை அவாவி உழலுகின்ற நம்மை மதியாமல் இகழ்ந்து விட்டதே அவரது மாட்சியை விளக்கியுள்ளது” என வியந்து புகழ்ந்தான். அன்று இக் குரிசில் கூறிய நீர்மைகளை அயலே காண வருகிறோம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மன்னன்முன் அமைச்சர் சித்தர் மறுத்துரை மாற்றங் கூற
முன்னவன் அருள்பெற் றிம்மை மறுமையும் முனிந்த யோகர்
இந்நில வேந்தர் மட்டோ இந்திர னயன்மா லேனோர்
தன்னையு மதிப்ப ரோவென் றிருந்தனன் தரும வேந்தன். 24

- எல்லாம் வல்ல சித்தர் திருவிளையாடற் படலம், கூடற் காண்டம், திருவிளையாடல் புராணம்

காண விழைந்து அழைத்த தன் ஆணையை மறுத்து அவமதித்த சித்தரை இவ்வேந்தன் இவ்வாறு உவந்து உரைத்துள்ளான். இவனது மனநிலையும் மதிநலனும் பெருந்தன்மையும் இதனால் தெரிய நேர்ந்தன. தரும வேந்தன் என்றது இவனுடைய புண்ணிய நீர்மைகளை எண்ணி யுணர வந்தது. சிறந்த பண்பாடுகள் நிறைந்துள்ள இடத்தில் செருக்கு, சினம் முதலிய சிறுமைகள் மறைந்து போய் அரிய பெரிய குணங்களும் அதிசய மகிமைகளும் வளர்ந்து வருகின்றன.

சிறிய புன்மைகள் மருவிய பொழுது மனிதன் சின்னவனாயிழிந்து இன்னலுழந்து படுகிறான். பெரிய நீர்மைகள் பெருகி வருங்கால் அவன் பெருந்தகையாளனாய் உயர்ந்து அரிய மேன்மைகளை அடைந்து அதிசய கதிகளில் துதிகொண்டு திகழ்கிறான். நல்ல எண்ணங்களால் தன்னை நன்கு உயர்த்திக் கொள்ளுகிறவன் எல்லா நன்மைகளையும் ஒருங்கே அடைந்து ஒளிமிகுந்து நிற்கின்றான். புல்லிய மாசுகளை நீக்கி நல்ல தேசுகளை வளர்த்து வருகிற அரசன் தன்னையும் நாட்டையும் தெய்வீக நிலையில் உயர்த்தி வருகிறான். உற்ற ஆட்சி உயர்வதே கொற்றவன் மாட்சியாம்.

உலகத்தை ஆளும் தலைமையோடு உதித்து வந்துள்ளமையால் அறிவு நலங்களையும் நீதி முறைகளையும் நெறியே பயின்று துறைதோறும் தெளிந்து வேந்தன் நேரே உயர்ந்து கொள்கிறான்.

The superior man raises himself continually in intelligence and in power of judgment. – Confucius

"நீதி முறையிலும் அறிவிலும் நாள்தோறும் தன்னை உயர்த்திக் கொள்ளுகிறவன் உயர்ந்த தலைவனாகின்றான்’ என்னும் இது இங்கே அறிய வுரியது. தலைமை தகுதியால் நிலைபெறுகிறது.

நெறியான நீதி மன்னனை எல்லாரும் பிரியமாய்ப் புகழ்நது போற்றுவர். சிறந்த கீர்த்திகள் உயர்ந்த தன்மைகளால் உளவாகின்றன. நீர்மையாளனை உலகம் உவந்து வாழ்த்தி வருகிறது.

குறிஞ்சிக் கோமான் கொய்தளிர்க் கண்ணிச்
செல்லிசை நிலைஇய பண்பின்
நல்லியக் கோடன். - சிறுபாண் ஆற்றுப் படை

பிறரிடம் நில்லாமல் செல்லுகின்ற புகழைத் தன்னிடம் நிலைத்து நிற்கும்படி செய்த பண்பினன் எனக் கோடன் என்னும் குறு நில மன்னனை இது குறித்துள்ளது. நல்ல பண்புகள் தோய்ந்து எல்லாரும் இன்புற ஆய்ந்து புரிந்து நலம் பல பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Mar-21, 1:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 82

சிறந்த கட்டுரைகள்

மேலே