சமுதாயமெனுங் காதலிக்கு

என் காதலி
சமுதாயத்துக்கு
உன் காதலன்
புரட்சி
எழுதுவது -

உன் கண்களில்
எண்ணுருவங்கண்டு
உலகம் கலங்குதல்
நானறிவேன்!

உன்
மனவானத்தில்
சுதந்திரமெனும்
சொர்கத்தின்
சமத்துவமெனும்
சிங்காசனத்தில்
மணமகனாய்
நான் வருவதாய்
சொப்பன சூரியன்
உதித்து மறைதல்
நானறிவேன்!

முற்போக்கெனுமுன்
தீர்த்தயாத்திரைகளில்
கண்டனப்புயல்கள்
தண்டனையலைகள்நிறை
ஜாதி, மத, இன
மஹாசமுத்திரங்களின்
கொந்தளிப்புகளும்
நானறிவேன்!அடிமைத்தனமெனும்
உன் வீட்டின்
குருட்டுச்சட்டங்களெனும்
இருட்டறைகளில்
திறமையெனுந்
தீரர்கள்
கைதிகளாய்க்கிடப்பதும்
நானறிவேன்!

பரம்பரைச்சுவரில்
பற்றியிருக்கும்
கவுரவப்பிரச்சினையெனும்
பல்லி செல்கிறதாம்
நம் காதல்
கூடாதென்று!

நம்
காதல் நட்சத்திரங்களின்
சந்திப்பில்
எதிர்காலமெனும்
வானமே
எரிகிறதாம்!
(புடமிடப்பட்ட
பொன்போல்
தூய்மையும்
பெறுகிறதாம்...!)

அதோ!
நம்பிக்கை ரோஜாவின்
கருவரை நுழையும்
மாற்றமெனும்
பனிப்பவழத்தின்
இத்தயாசனத்திலமர்ந்து
அழைக்கிறாள்
புதுயுகமெனுத்தேவி
கரங்கள் நீட்டி!
எனினுந்தயக்கம்...?
உடைப்போம்
கண்மூடித்தனமெனும்
கற்கதவுகளை!
கடப்போம்
ஜாதி, மத, இனச்
சாககடல்களை!
கல்யாணம் நடக்கும்
கடைசியில் நம்
கனவுகளுக்காகிலும்!!!

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 3:16 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 32

மேலே