வாழ்வை வாழாத நான்

முயற்சியுடன் பத்தாம் வகுப்பில்
மென்மெத்த மதிப்பெண்கள் பெற்று
வெற்றிபெற்றுவிட்டேனெனின்
வாழ்வெனும் வகுப்பறையில்
முழு மகிழ்ச்சியைப் பெற்றிடுவேனென்றேன்.
முழுமையாய் எனினும் பெறவில்லை.

பனிரெண்டாம் வகுப்பல்லவோ
பிற்காலக் களிப்புகளைக் கணிக்கும் கணனி?
மெல்ல அதனை நான் வென்றுவிடின்
மகிழ்ச்சியே மகிழ்ச்சியென்றேன்.
மாடாய் உழைத்துக் களைத்து வென்றேன்.
முழு மகிழ்ச்சிக் கிடைக்கவில்லை.

கல்லூரி செல்லாது வாழ்வினைக்
களித்து சுவைத்த மாந்தருமுண்டோ...?
சென்றேன். பயின்றேன். பட்டம் பெற்றேன்.
சான்றோன் எனவும் போற்றப்பட்டேன்.
ஆழ்ந்த முழு மகிழ்ச்சி பெற்றேனோ...?
ஆய்ந்து பார்ப்பின் அதுதான் இல்லை.

படிப்போ-படிப்பென்றிருப்பின் பயன்தானென்ன?
பணிசெய்து கிடைப்பதன்றோ வாழ்வின் பலன்!
பணிசெய்வதெனினும் பயிற்சி வேண்டாமோ?
தொழிற்பயிற்சி பெறுவேன். மகிழ்வேனென்றேன்.
பட்டிக்காடு விட்டுப் பட்டணம் சென்றேன் - எனினும்
பரம மகிழ்ச்சிக் கிடைக்கவில்லை.

வேலைத் தேடும் படலமன்றோ
வானைத்தொடமுயலும் வாலிபனுக்கழகு!
தேடினேன். திரவியமாய்க் கிடைத்தது.
தேடாப் புகழும் தேடி வந்தது.
அருஞ்செல்வமும் மலையாய்க் குவிந்தது.
அகமகிழ்ந்தேனோ? அதுதான் இல்லை.



வீடுகட்டென்றார்கள் - வினோதமான
விகட கலைஞனல்ல நான் - எனினும்
விலைமதிப்பற்றவொன்றை மெதுவாய்
வெகுவாய்க் கட்டியழகுகண்டேன் - என்
வீட்டு மூலை முடுக்குகளில் தேடியும்
வேண்டிய மகிழ்ச்சி கிடைக்கவில்லை.

இல்லறமன்றோ நல்லறத்தின் அஸ்திவாரம்?
இளம் எழிலரசிதானே எனக்கும் கிடைத்தாள்!
இனித்தாள். இணைந்தாள். இன்பம் தந்தாள் - தன்
இதயத்தோடு என்னையும் ஈர்த்தணைத்தாள்.
இன்பமே-இன்பமல்லவோ...?
இல்லவேயில்லயே. ஏனோ?

பிள்ளைச்செல்வத்தினும் பெருஞ்செல்வமுண்டோ?
பெற்றேடுத்தோம். பேணி வளர்த்தோம்.
படிக்கவைத்தோம். பொறுப்பளித்தோம்.
படிப்படியாய் ஒளிர்ந்து மிளிரச்செய்தோம்.
பின்னென்ன? மகிழ்ச்சியது முழுமைதானே...!
பரிசோதித்தபோது அதுதானில்லை.

மணக்கவைத்தேன்; மக்கள்பல காணவைத்தேன்;
மக்களின் மக்களையும் நானுங் கண்டேன்.
மானிடனாய்ப்பிறந்ததின் முழுப்பயனையும்
மண்ணுலகிலேயே அடைந்து விட்டதாய்
மனதார பலருமெனை வாழ்த்தி நின்றார்கள் - ஆனால்
முழு மகிழ்ச்சிதான் எனது எங்கே...???

மரணத்துக்குப்பின் மறுவுலகிலாவது
முழுமகிழ்ச்சிவெள்ளத்தில் மூழ்குவேனெனும்
முற்றுப்பெறா நம்பிக்கையில் நான் இன்றும்
முன்னேறிக்கொண்டிருக்கின்றேன்
மேலும்... மேலும்... மேலும்...
மனதில் விசுவாச விதைகளை விதைத்து...

இங்கு கிடைக்காதது எப்படித்தான்
இனி அங்கு கிடைக்குமோ?
வாழ்க்கை அமையாதவனா நான்? இல்லை
வாழத்தெரியாதவனா? அல்லது
எண்ணிலடங்கா இன்றைய இவ்வகை மானிடரின்
எள்ளளவு எடுத்துக்காட்டுதானா நான்...?

எழுதியவர் : அமல்.சி.தேவ் (5-Mar-21, 4:38 pm)
சேர்த்தது : Christuraj Alex
பார்வை : 59

மேலே