உன்னியுளம் ஓகை புரிந்துவர ஓர்ந்தரசு செய்துவரின் வாகை வளர்ந்து வரும் - மாட்சி, தருமதீபிகை 794

நேரிசை வெண்பா

தன்னிலத்தில் வாழும் தனிக்குடிகள் என்றுமே
பொன்னிலத்தில் வாழும் புனிதர்போல் - உன்னியுளம்
ஓகை புரிந்துவர ஓர்ந்தரசு செய்துவரின்
வாகை வளர்ந்து வரும். 794

- மாட்சி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் நாட்டில் வாழும் குடிசனங்கள் யாவரும் பொன்நாட்டில் வாழும் தேவர்கள் போல் உள்ளம் உவந்து வாழ ஓர்ந்து வழிசெய்து வரின் அந்த அரசு எந்த வகையிலும் உயர்ந்து அதிசய வெற்றியை அடைந்து யாவரும் துதிசெய்ய வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். ஆட்சியிலுள்ள உன் நாட்டைப் பொன் நாடாகச் செய்து மாட்சி அடைக என மன்னனுக்கு இப்பாடல் உணர்த்துகின்றது.

தலைமையாய் ஆளும் உரிமையை அடைந்து வந்துள்ள அரசன் நிலைமையாய் வாழும் உரிமையை மருவி வந்துள்ள மனித சமுதாயத்தின் நலங்களை நாளும் நாடி நயமாய் வினைபுரிந்து வருவது வியனான விதி நியமமாய் அமைந்தது. அல்லல்கள் யாதும் அணுகாமல் நல்ல சுகவாழ்வு நாட்டில் தழைத்து வர உழைத்து வருபவனே உலகத் தலைவனாய் நிலைத்து வருகிறான்.

ஒருகுடியை ஓம்பி வருகிற குடும்பத் தலைவன் இடும்பைகள் பல அடைய நேர்ந்தாலும் உறுதி ஊக்கங்கள் குன்றாமல் அறிவோடு முயன்று நெறியே பேணி நெடும்புகழ் அடைகின்றான். தான் பிறந்த குடியைச் சிறந்த நிலையில் செம்மையாய் உயர்த்தியருள்பவனே உயர்ந்த ஆண் மகனாகின்றான். ஆண்மை என்னும் சொல் ஆளும் தன்மை என மேன்மையான பொருளை மருவியிருத்தலால் அதன் பான்மையை உணர்பவர் பலவும் தெளிந்து நலமான நிலையில் நன்கு உயர்ந்து கொள்ளுவர்.

பிறந்த குடியையும் பெற்ற நாட்டையும் பேணிக் காத்துச் சிறந்ததாகச் செய்து வருபவனே உயர்ந்த ஆண் மகனாய் ஒளி பெற்று நிற்கின்றான். ஆண்மையை மருவி வந்துள்ள தனது மேன்மையை உணர்ந்து கடமையைச் செய்துவரின் அவன் கரும வீரனாய்ப் பெருமை மிகப் பெறுகிறான். வினையாண்மையிலேயே எல்லா ஆண்மைகளும் ஒருங்கே விளைந்து வருகின்றன.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும். விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் ‘மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

வினைக்குஞ் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுர
நினைத்து நீங்குத லாண்கட னீங்கினாற்
கனைத்து வண்டுணுங் கோதையர் தங்கடன்
மனைக்கண் வைகுதன் மாண்பொ டெனச்சொனான். 235 பதுமையார் இலம்பகம், சீவகசிந்தாமணி

அரிய வினைகளைச் செய்து பெரிய பொருள்களை ஈட்டி உரியவரை ஆதரிப்பது ஆண் கடன்; மனையுள் வைகி மகிமையோடு இருப்பது பெண்கடன் எனச் சீவக மன்னன் தன் மனைவியிடம் இன்னவாறு இருபாலாரின் கடமைகளை இனிது கூறியிருக்கிறான்.

ஆளும் தன்மையை உரிமையாயமைந்து வந்துள்ள அரசன் மேன்பையான ஆண்மையாளனாதலால் அவன் நாளும் நன்று ஆற்றியருள்வது வென்றி வீரமாய் வந்தது. வறுமை, சிறுமை, மடமை, மடிமை, கொடுமை, பகைமை முதலிய துயரினங்கள் யாதும் காணாமல் கடிந்து உயிரினங்களை முறையோடு பேணி வருபவன் உயர்குல அரசனாய் ஓங்கி உலகம் புகழ நிலவி நிற்கின்றான் இதம் செய்பவன் எவ்வழியும் சிறந்து திகழ்கிறான்.

புரவலன் என அரசனுக்கு உரிமையாயமைந்த பெயர் தேசத்தையும் சீவகோடிகளையும் அவன் புரந்துவரும் நீர்மையை விளக்கிச் சீர்மையாய் வந்துள்ளது. தான் புனிதனாய் நின்று மனித சமுதாயத்தை இனிது பேணி வருபவன் மகிமை மாண்புகள் பெருகி மன்னிய புகழோடு யாண்டும் மருவி வருகிறான்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

நாமவே னரபதி யுலகங் 3காத்தநாட்
காமவேள் கவர்கணை கலந்த தல்லது
தாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை
நாமநீர் வரைப்பக நலிவ தில்லையே. 18

ஆறிலொன் றறமென வருளி னல்லதொன்
றூறுசெய் 1துலகினி னுவப்ப தில்லையே
2மாறிநின் றவரையும் வணக்கி னல்லது
சீறிநின் 3றெவரையுஞ் செகுப்ப தில்லையே. 19:

மன்னிய பகைக்குழா 1மாறும் வையகம்
துன்னிய வரும்பகைத் தொகையு மின்மையால்
தன்னையுந் 2தரையையுங் காக்கு மென்பதம்
மன்னவன் றிறத்தினி 3மருள வேண்டுமோ. 21 நகரச் சருக்கம், சூளாமணி

பிரசாபதி என்னும் அரசன் குடிகளை உரிமையோடு ஆதரித்து வந்த நிலைகளை இவை உணர்த்தியுள்ளன. கவிகளில் மருவியுள்ள பொருள்கள் கருதி யுணரவுரியன. சிறந்த குணசாலியாய் நின்று அரசை ஆண்டு வந்திருத்தலால் பல வகையான இன்ப வளங்கள் நாட்டில் நிறைந்து நலம் சுரந்து வந்துள்ளன.

நெறியுடைய நீதிமான் அரசனாயமையின் அந்த நாடு கல்வி, செல்வம், அறிவு, அழகு முதலிய நிலைகளில் தலைசிறந்து விளங்கும்; இனிய போக பூமிபோல் அது தனிமகிமையாய்த் தழைத்து நிற்கும் என உலக சரித்திரங்கள் உரைத்திருக்கின்றன.

கலித்துறை

உருவில் மைந்தரில் வேனில்வேட்(கு) உடைகுநர் இல்லை;
பொருளில் லார்களில் தனதனைப் பொருவிலார் இல்லை;
தெருளில் மாக்களில் சேடனில் தாழ்குநர் இல்லை;
அருளில் லார்களில் ஐந்தரு நிகர்க்கலார் இல்லை. 9 நகரப் படலம், நைடதம்

நள மன்னனது ஆட்சிக் காலத்தில் நிடத நாடு இருந்த நிலையை இது விளக்கியுள்ளது. மன்மதனிலும் பேரழகினர், குபேரனிலும் பெரு நிதியினர். ஆதிசேடனிலும் சிறந்த அறிவினர், ஐந்தருக்களினும் உயர்ந்த கொடையினர். அங்கே நிறைந்திருந்தனர் எனக் கவி வரைந்து குறித்திருப்பதை உவந்து நோக்கி வியந்து நிற்கிறோம். இன்பக் காட்சி ஆட்சியைக் காட்டியது.

கலிவிருத்தம்

வறியன் ஆவன் வடதிசை மன்னவன்;
அறிவி லாளன் அனந்தனும் ஆவன்;ஏர்
சிறியன் ஆவன் சிலைமதன், பூம்பொழில்
வெறியு லாவும் விளவலத்(து) எய்தினே. - பிரபுலிங்க லீலை

மமகாரன் என்னும் அரசனது ஆட்சிக் காலத்தில் அவனுடைய நாடு இருந்த நிலையை இது காட்டியுள்ளது. நீதி மன்னரது நெறி முறையில் நிலம் அதிசய நிலைகளை அடைந்து அரிய பல வளங்களோடு விளங்கும் என்பது நன்கு உணர்ந்து கொள்ள வந்தன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Mar-21, 3:19 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

மேலே