ஒற்றைப் படகின் நிலை

ஒற்றைப் படகின் நிலை
-----------------------------------------------
கொதிக்கும் உலையை
ஆற்றிட முடியும்
தகித்திடும் நெஞ்சை
தேற்றிட இயலுமா !

கைப்பிடித்த கணவன்
கைவிட்டுச் சென்றபின்
இணைந்து வாழ்ந்தவன்
இருந்துதான் என்ன பயன் !

கடுகளவு தவறையும்
மலையளவு நினைத்து
குற்றம் காண்பவர்கள்
நக்கீரர் வழிவந்தவர்கள் !

அணைத்தால் நெருப்பும்
அடங்கிடும் அடுப்பில்
அணைப்பவன் தீயானால்
அழிந்திடும் இல்லறமும் !

கட்டியவன் கைவிட்டால்
பட்டுவிடும் வாழ்க்கையும்
எட்டியுள்ளவன் கெட்டவனாகி
தொட்டிடவே நெருங்குவான் !

வாழ்வெனும் களத்தில்
போராடும் மகளிர் நிலை
ஓடுகின்ற நதியில்
ஒற்றைப் படகின் நிலை !

விழித்திடுவீர் மங்கையரே
ஒழித்திடுவீர் மடமைதனை
விரட்டிடுவீர் அச்சத்தை
வாழ்ந்திடுவீர் வீரமுடன் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (19-Mar-21, 10:07 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 315

மேலே