ஓடி ஓடி உழைக்கணும்

ஓடி ஓடி உழைத்திடு –ஒரு
உண்மையோடு உழைத்திடு
தேடி தேடி உழைத்திடு –உன்
தேவை அறிந்து உழைத்திடு.

மூடி மறைக்கும் செயலினை –நீ
மனமுணர்ந்து வெறுத்திடு
கோடி கொட்டி கொடுப்பினும் –ஒரு
கொடுமை செய்ய மறுத்திடு.

நாடு வளர நினைத்திடு –பல
நன்மை பெருக உழைத்திடு
வீடும் செழிக்க வைத்திடு –உன்
வயலில் இறங்கி உழைத்திடு.

உறவு மகிழ முயன்றிடு –அவர்
உள்ளம் தன்னை அறிந்திடு
சிறகை விரித்து வானிலே –தினம்
பறந்து செல்ல உதவிடு.

செய்யும் தொழிலை வணங்கிடு –அதில்
பொய்மை தன்னை விலக்கிடு
வாய்மை நெஞ்சில் கொண்டிடு –வரும்
வறுமை தன்னை துரத்திடு........

மரங்கள் நட்டு வளர்த்திடு –நல்
மழைக்கும் வழியை வகுத்திடு
வரப்பை வயலில் உயர்த்திடு –புது
நெல் விளைய உழைத்திடு.

எழுதியவர் : பொதகை மு.செல்வராசன் (24-Mar-21, 8:25 pm)
பார்வை : 63

மேலே