வீரம் உடையான் எவையும் உடையான் - வீரம், தருமதீபிகை 801

நேரிசை வெண்பா

வீரம் அரசுக்கு மேலான நீர்மையாய்த்
தீரம் புரிந்து திகழ்தலால் - வீரம்
உடையான் எவையும் உடையான், இலனேல்
அடையான் மகிமை அவன்! 801

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய பல மேன்மைகளை வீரம் ஆற்றியருளுதலால் அரசனுக்கு அது மேலான பான்மையாய் அமைந்துள்ளது; அதனை உரிமையாக வுடையவன் எல்லா நலன்களும் ஒருங்கே யுடையனாய் உயர்ந்து விளங்கி அரிய மகிமைகள் பெறுகின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆளும் தலைமையில் வழிமுறையே தொடர்ந்து வருகிற அரச மரபிடம் அரிய பல பெரிய குணங்கள் மருமமாய் மருவி வருகின்றன. அந்நீர்மைகளுள் வீரம் பெருவரவாய்ப் பெருகியுளது. உறுதி ஊக்கங்கள் தழுவி உள்ளத்தில் எழுகின்ற உயர்ச்சியான உணர்ச்சி வீரம் என நின்றது. எவ்வழியும் யாண்டும் நிலைகுலையாத தலைமைத் தன்மையே வீரமாதலால் அதனையுடையவர் உயர் புகழாளராய் ஓங்கி ஒளிபெற்று நிற்கின்றார்.

உலகத்தை ஆள நேர்ந்த அரசர் எதிர்கின்ற இடையூறுகளை நீக்கி, எழுகின்ற கலகங்களை அடக்கி மனித சமுதாயத்தை இனிது பாதுகாக்க வேண்டியிருத்தலால் அவர்க்கு வீரம் இயலுரிமையாய் ஏய்ந்தள்ளது. நீதி முறையை நெறியே நடத்த வல்லது வீரமேயாதலால் அது அரசுக்குத் தலைமைத் தன்மையாய்ச் சார்ந்து சாதி நீர்மையாய்த் தோய்ந்து நின்றது.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

நீதியும் வீரமும் கொடையும் மன்னர்க்குச்
சாதியின் தருமமாய்ச் சார்ந்து நின்றன;
ஓதிய மூன்றினில் ஒன்று குன்றினும்
போதிய அரசியல் புகழ்பெ றாதரோ. 1

வீரமே பகைவரை அடக்கும்; மெய்க்கொடை
வாரமே புகழினை வளர்க்கும்; நீதியின்
சாரமே தரணியைத் தாங்கும்; இந்தமுச்
சீரமை அரசனே தேவன் ஆவனால். 2

வீரமில் வேந்தனும், விளைவில் பூமியும்,
நீரமில் குளமும்நல் நிறையில் பெண்மையும்,
தாரமில் வாழ்க்கையும், தகவில் நெஞ்சமும்,
நேரென லாயிழி நிலையில் ஆழுமே. 3

செயிருறு களைகளைச் செகுத்து நீக்கிநற்
பயிர்களைக் காத்தல்போல் படுவெம் பாதக
வயிரரைச் சுட்டற மடித்து மாண்புறும்
உயிர்களைக் காப்பதே உலகம் காப்பதே. 4 - வீரபாண்டியம்

இந்தப் பாசுரங்கள் இங்கே நன்கு சிந்திக்கத் தக்கன.

அரசியல் அமைதிகளும் அரசுக்கு வீரம் உறவுரிமையாய் யுறுதி புரிந்துள்ள தகைமையும் உணர வந்தன. ஆண்மை, உறுதி, ஊக்கம், தீரம், தைரியம், சூரம், செளரியம், பராக்கிரமம் என்னும் மொழிகளில் வீர ஒளி வீசியுள்ளது. தலைமையான உயர்வு எங்கே இருக்கிறதோ அங்கே வீரம் இயல்பாய் நிலவி மிளிர்கிறது.

கல்வி, ஞானம், தானம், தயை முதலிய நிலைகளில் சிறந்து நிற்பவரும் வீரத்தை மருவியே உயர்ந்து ஒளி மிகுந்து வருகின்றார். கல்வி வீரன், ஞான வீரன், தான வீரன், தயா வீரன் எனப் புகழ் பெற்று வந்துள்ளவர் வீரத்தின் வியனிலையை நயமாய் விளக்கி நிற்கின்றார். வினையாண்மையில் சதுரனாய் உயர்ந்து வருபவனைக் கரும வீரன் என உலகம் உவந்து கூறுகிறது. தருமத்தை யாண்டும் உறுதியாய்த் தழுவி வருபவனைத் தரும வீரன் என்கின்றார்! சத்திய வீரன் என அரிச்சந்திரன் உத்தமமான பேர் பெற்று உலக சோதியாய் ஒளி வீசி நிற்கின்றான்!

குண நலங்களுள் வீரம் எத்தகையது? உயர் நிலையிலுள்ள அரசர்க்கு அது எவ்வாறு உயிர் நிலையாயுள்ளது? என்பதை இங்கே உய்த்துணர்ந்து கொள்கிறோம். சத்திரியர்க்கு வீரம் வெற்றி நிலையமாய் விளங்கி வித்தக நலங்களை விளைத்து நிற்கிறது.

இராமன் இலங்கைமேல் படைஎழுச்சி செய்தபோது இடையே கடல் கடக்க நேர்ந்தது. கடலின் அதிதேவதையான வருணனை நேரே காண விரும்பினான்; வேத விதிமுறையே மந்திர செபம் செய்து அலைவாய்க் கரையில் தவம் புரிந்து இருந்தான். ஏழுநாள் ஆகியும் அவன் வரவில்லை; ஆகவே, கோசலைச் சிங்கத்துக்குக் கோபம் மூண்டது; ’எளிய பரதேசி என்று என்னை இகழ்வாய் எண்ணி யுள்ளான்: அவனது உள்ளச் செருக்கை அழித்து ஒழிக்க வேண்டும்” என உருத்து மூண்டான். அப்பொழுது இவ் வீரன் உரைத்த உரைகள் உக்கிர வீரங்களாய் ஒளி வீசி எழுந்தன. சில அயலே வருகின்றன.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

பாரம் நீங்கிய சிலையினன், இராவணன் பறிப்பத்
தாரம் நீங்கிய தன்மையன், ஆதலின், தகைசால்
வீரம் நீங்கிய மனிதனென் றிகழ்ச்சிமேல் விளைய,
ஈரம் நீங்கிய(து) எறிகடல் ஆமென இசைத்தான். 10

கானி டைப்புகுந்(து), இருங்கனி காயொடு நுகர்ந்த
ஊனு டைப்பொறை உடம்பினன் என்றுகொண்(டு) உணர்ந்த
மீனு டைக்கடல் பெருமையும், வில்லொடு நின்ற
மானு டச்சிறு தன்மையும், காண்பரால், வானோர். 12

- வருணனை வழிவேண்டு படலம், யுத்த காண்டம், ராமாயணம்

மான வீரன் கூறியுள்ள இவ்வுரைகளில் இயற்கையான வீர உணர்ச்சிகள் ஓங்கி நிற்கின்றன. உள்ளக் கண்களால் ஊன்றி நோக்கி உண்மைகளை உணர வேண்டும். மானச தத்துவங்கள் வித்தக விநயமாய் விளைந்துள்ளன. யூகமாயுணர்பவர் உயிரின் நீர்மைகளைக் கூர்மையாய் ஓர்ந்து உவந்து கொள்வர்.

வீரம் நீங்கிய மனிதன் எனத் தன்னை எளிதாக எண்ணியதனாலேயே வருணன் நேரே வரவில்லை என்று இவ்வீரமூர்த்தி வீறிட்டு வில்லால் வெல்ல முயன்றது சொல்லால் விளங்கி நின்றது; வீரம் இல்லையானால் அந்த மனிதன் சாரம் இல்லாதவனாய்த் தாழ்ந்துபடுவான் என்பது இங்கே ஓர்ந்து கொள்ள வந்தது. தகைசால் என வீரத்துக்குத் தந்துள்ள அடை கூர்ந்து சிந்திக்கத் தக்கது. தரும நீதிகளுக்கு உரிமையாய் வருகிற தறுகண்மையே வீரமாதலால் அதன் வியனான மேன்மை தெளியலாகும். சுத்த வீரம் உத்தம நீர்மையாய் ஒளி மிகுந்துள்ளது.

அறிவு, அருள், அமைதி முதலிய இனிய நீர்மைகள் பல இராமனிடம் பெருகியுள்ளன. அவற்றுள் எல்லாம் வீரமே இக்கோமகனை அதிமேன்மையாய் மகிமைப்படுத்தியுளது. தனது மனைவியைக் கவர்ந்து போன இராவணனை வென்று அவ்வுத்தமியை மீட்டியருளியது இவனது சுத்த வீரமே. இதனை உய்த்துணர்பவர் வீரத்தின் உன்னத நிலையை ஓர்ந்து தெளிந்து கொள்வர். வீரச் சேவகன், வீர வில்லாளன், வீரக் குரிசில், வீர நாயகன் என இந்த ஏந்தல் வீரப் பேரால் விளங்கி நிற்றலால் வீரத்தோடு வேந்தனுக்குள்ள உரிமை வெளிப்பட்டு நின்றது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-Apr-21, 4:06 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 112

சிறந்த கட்டுரைகள்

மேலே