4 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 4
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்
கடவுள் இந்த உலகத்தினைப் படைத்து, அதில் பல்லாயிரம் கோடி உயிரினங்களைப் படைத்துள்ளார். கடவுள் மனிதர்களாகிய நம்மை படைக்கும்போது மட்டும் நமக்கென்று வாழ்க்கையில் விருப்பப்பட்டதை தேர்வு (choice) செய்யும்தன்மையில் படைத்து விட்டார். ஆனால் விலங்குகள், பறவைகள், ஊர்வன போன்ற உயிரினங்களை மனிதனைப்போல் விருப்பப்பட்டதை தேர்வுசெய்து (choice) செயல்படும்தன்மையில் படைக்கவில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனையும் அறியாமல் வாழ்க்கையில் ஒரு லட்சியம், விருப்பம் இருக்க வேண்டும். ‘இல்லை’ என்று மனிதர்கள் யாரும் மறுக்க முடியாது. கடவுள் மனிதனுக்கு மட்டும் விருப்பப்பட்டதை தேர்வு செய்வதற்கு (choice) வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார்.

எடுத்துக்காட்டாக ஒரு மனிதனுக்கு எதிரில் ஒரு தட்டில் ஆப்பிள், ஆரஞ்சு என பலவிதமான பழங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவனுக்கு பசி வந்துவிட்டால் தட்டில் உள்ள ஏதோ ஒரு பழத்தை எடுத்து சாப்பிடத்தான் வேண்டும். எதிரில் வைக்கப்பட்டுள்ள பழங்களைப் பார்த்துக் கொண்டே இருந்தால், பசி அடங்கப்போவது இல்லை. எனவே அவனுக்குப் பசி வரும்வரை வேண்டுமானால் அவைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அவனுக்கு விருப்பமான பழத்தினை தேர்ந்து எடுத்து உண்பதற்கு முடியும். நாம் இனிய பழங்களை நம் விருப்பம்போல் தேர்ந்தெடுத்து உண்பதுபோன்றுதான், கடவுள் நமக்கு விருப்பமான ஒன்றை நல்லதோ கெட்டதோ தேர்வு செய்வதற்கு (choice) வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். மற்ற உயிரினங்களுக்கு இதுபோன்று சாய்ஸ் இருக்கிறது. ஆனால் அவைகளுக்கு மனிதனைவிட சாய்ஸ் மிகவும் குறைவாகக் அளித்திருக்கிறார். நாம் விருப்பபட்டு தேர்வு செய்யும் செயலைப் பொறுத்து நமது வாழ்வு அமையும் என்பதை மனதில் நினைவு கொள்ள வேண்டும்.

இவ்வுலகில் வாழும் விலங்குகள் பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒரு இயல்பான குணத்துடன் இறைவன் படைத்துள்ளார். பசுக்களுக்கு சாதுவாக இருக்கும் பண்பினைக் கொடுத்துள்ளார். காக்கைக்கு உணவு கிடைத்து விட்டால் மற்ற காக்கைகளை ‘கா கா’ என்று கரைந்து ஒற்றுமையுடன் கூட்டமாக உண்ணும் குணத்தினை படைத்துள்ளார். மற்ற பறவைகளைவிட காக்கைகளுக்கு கூடி வாழும் குணத்தினை கொடுத்துள்ளார். நாய்களை தங்கள் எஜமான்களுக்கு வாலை ஆட்டிக்கொண்டு நன்றியுடன் இருக்கும் குணத்துடன் படைத்துள்ளார். காட்டில் வாழும் நரிகளை தந்திரம் செய்யும் குணத்துடன் படைத்துள்ளார்.

நாய் தன்னோட இனமான அடுத்த தெருவில் இருந்து வரக்கூடிய மற்ற நாய்களைக் கண்டாலே குரைத்து அவற்றினை விரட்ட ஆரம்பித்து விடுகிறது. அதுதான் நாய்களின் இயல்பான குணமாக இருக்கிறது. நாய்கள் ‘எனக்கு நன்றியுடன் இருப்பதற்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை, காட்டில் வாழும் நரி போன்று தந்திரமாக இருக்கவே விரும்புகிறேன். பசு போன்று சாதுவாக அமைதியாக இருக்க விரும்புகிறேன்’ என்று கூறி, அதன் இயல்பான குணங்களையும் செயல்களையும் விரும்பியபடி, நாய்களால் சுயமாக சிந்தித்து மாற்றிக்கொள்ள முடியாது.

உலகில் வாழும் விலங்குகள், பறவைகள் போன்ற அனைத்து உயிரினங்களுக்கும் அதன் இயல்பான குணங்களே இருக்கும். அவைகளுக்கு மனிதனைப்போல விரும்பியபடி தன்னோட குணங்களை செயல்பாடுகளை சுயமாக மாற்றுவதற்கு முடியாது. ஒரு பறவை உயிருடன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தப்பறவை தொடர்ந்து உயிருடன் இருக்கவேண்டுமெனில் அது பறந்து சென்றுதான் இரை தேட வேண்டும் என்பது அதன் இயல்பான குணம். நான் பறக்க மாட்டேன் யானையைப்போன்று, நாயைப்போன்று தரையில் நடந்து சென்றுதான் இரைதேடுவேன் என்று அவைகள் நினைக்கவோ செயல்படுத்தவோ தன்னோட விருப்பம்போல் இருக்க முடியாது. புலிகள் சிங்கங்கள் போன்ற கொடிய விலங்குகள் காட்டில் வேட்டையாடி தன்னோட இரையைத் தேடிக்கொள்ள வேண்டும். அதற்கு மாறாக நான் வானில் பறவைகளைப்போன்று பறந்து சென்றுதான் இரையைத் தேடிக் கொள்வேன் என்று அதன் இயல்பினை விரும்பியபடி சுயமாக மாற்றிக்கொள்வதற்கு முடியாது .மனிதனைப்போல் சுயமாக சிந்தித்து விரும்பியபடி வாழ்வதற்கு விலங்குகள், பறவைகள் போன்றவற்றை கடவுள் படைக்கவில்லை.

ஒரு மனிதன் மனது வைத்தால் விருப்பப்பட்டால் தன்னோட குணங்களை பண்புகளை செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள முடியும். அதாவது மனிதர்கள் தன்னிடம் உள்ள உயர்ந்த குணத்திலிருந்து தாழ்ந்த குணத்திற்கும், தாழ்ந்த குணத்திலிருந்து உயர்ந்த குணத்திற்கும் மாற்றிக்கொள்ள முடியும். மனிதர்களின் குணங்களை, மனிதனுடைய பண்புகளை செயல்பாடுகளை வைத்து மிருகத்தன்மை, மனிதத்தன்மை மற்றும் தெய்வத்தன்மை என ஆன்மிகம் பிரித்துக் கூறுகிறது. இந்த மூன்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன்படி வாழ்ந்து கொள்வதற்கு, அவனுக்கு வாய்ப்புகள் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மனிதர்களுக்கு தன்னோட குணங்களில் செயல்பாடுகளில் நல்லவைகள், தீயவைகள் எது என்று பகுத்தறிந்து, தங்களது குணங்களை பண்புகளை செயல்பாடுகளை மாற்றிக்கொள்வதற்கு மனிதனால் முடியும். மேலும் நமது குணங்களை, பண்புகளை மாற்றி செயல்படுத்துவதற்குத் தேவையான மனவலிமையையும் (willpower) கடவுளால் மனிதர்களுக்கு மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் பறவைகள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு பகுத்தறிந்து குணங்களை மாற்றிக்கொள்ளும் தன்மைகள் எதுவும் அவைகளுக்கு மனிதனைப்போல் இறைவனால் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

கடவுள் மனிதர்களுக்கு சிந்தித்து நல்லமுறையில் வாழ்வதற்கு வாய்ப்புகள் கொடுத்ததோடு, மனிதன் தன்னோட செயல்களில் எது தர்மம் எது அதர்மம் என்று தர்ம சாஸ்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய அறிவுத்திறனையும் அவனுக்கு அளித்துள்ளார். ஒரு மனிதன் முன்பாக ஒரு தட்டில் பலவிதமான வண்ண மலர்கள் பழங்கள் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். மனிதன் தனக்குத் தேவையான மிகவும் விருப்பமான மலர்களை பழங்களை தட்டிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும். அதேபோல் மனிதன் தன்னுடைய குணங்களை பண்புகளை விரும்பியபடி தேர்வு செய்து ((choice) செயல்பாடுகளை மாற்றிக்கொள்வதற்கு வாய்ப்புகள் இறைவன் அளித்துள்ளார்.

ஒருவனை சுட்டிக்காட்டி ‘இவன் முன்பெல்லாம் முரடனாக இரக்கமற்ற குணங்களுடன் யாருக்கும் அடங்காமல் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தான். இப்போது திடீரென்று எப்படியோ தலைகீழாக அவன் குணங்கள் செயல்பாடுகள் எல்லாம் மாறி விட்டது. அவன் பசுபோல் சாதுவாகவும் எல்லாரும் வணங்கும்படியான பண்புள்ளவனாக மாறிவிட்டான்’ என்று நமது பேச்சு வழக்கில் சிலரைப்பற்றி கூறுவதை நாம் கேட்டு இருக்கிறோம். மனிதன் நினைத்தால் மிருகத்தன்மை, மனிதத்தன்மை மற்றும் தெய்வத்தன்மை ஆகிய மூன்றில் ஒரு தன்மையுடன் உலகில் வாழ முடியும். காட்டில் வாழும் புலி மற்ற விலங்குகளை வேட்டையாடி தன்னோட பசியை ஆற்றிக்கொள்கிறது. புலியானது ‘‘எனக்கு மற்ற உயிரினங்களைக் கொன்று அதன் மூலம் எனது பசியை போக்குவதற்கு எனக்கு விருப்பமில்லை. நான் வீட்டில் சாதுவாக வாழும் பசுக்களைப் போன்று புல்லை மட்டும் மேய்ந்து கொள்கிறேன்’ என்று தன்னோட உணவுப் பழக்கத்தினை புலி மாற்றிக் கொள்வதற்கு முடியாது. ‘புலி பசித்தாலும் புல்லைத் திங்காது’ என்று பழமொழி உலக வழக்கில் கூறுவதை நாம் கேட்டு இருக்கிறோம்.

எண்ணற்ற துன்பங்களுக்கும் கஷ்டங்களுக்கும் மூலகாரணம் மனிதனுடைய ஆசைதான் என்று ஞானிகள் கூறியுள்ளனர். இதனைத்தான் ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் என்று திருமூலர் பாடியுள்ளார். மனிதன் விரும்பினால் தன்னிடம் இருக்கும் தீயபழக்கவழக்கங்களை நல்ல பழக்கவழக்கங்களாக மாற்றிக்கொள்வதற்கு முடியும். அதேபோல் மனிதன் விருப்பப்பட்டால் தன்னிடமுள்ள நல்லவிதமான பண்புகளை பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு தீயகுணங்களுடன் வாழ்வதற்கும் முடியும். நாம் வாழ்வில் மன அமைதியுடன் வாழ வேண்டுமெனில், ஆசை, கோபம், பொறாமை போன்ற துன்பம் தரக்கூடிய குணங்களை முற்றிலும் தவிர்த்து நமக்கும் மற்றவருக்கும் பயன்தரக்கூடிய நல்ல பழக்கவழக்கங்களை தவறாமல் கடைபிடித்து வரவேண்டும் .(அமைதி தொடரும்)


எழுத்தாளர் :பூ.சுப்ரமணியன்
வட்டாட்சியர் ( பணி நிறைவு)
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (5-Apr-21, 12:26 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 177

சிறந்த கட்டுரைகள்

மேலே