நிலையாத இவ்வுலகில் கொடையை விழைந்து மேவாதார் பேரிழந்தார் - கொடை, தருமதீபிகை 812

நேரிசை வெண்பா

நீரலைபோல் தோன்றி நிலையாத இவ்வுலகில்
ஓரிரண்(டு) ஒண்குணமே ஓங்கிநிற்கும் - தேரிலவை
வீரம் கொடையாம்; விழைந்திவற்றை மேவாதார்
பேரிழந்தார் ஆவர் பிறழ்ந்து! 812

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடலில் எழுகின்ற அலைகள் போல் உடல்கள் தோன்றி யாவும் விரைந்து மறைந்து போகிற இந்த உலகத்தில் வீரம், கொடை என்னும் இரண்டு நீர்மைகள்தான் நிலைத்து நிற்கின்றன; இவற்றைத் தழுவி நின்றார் விழுமிய புகழோடு விளங்கி நிற்கின்றார்; தழுவாதவர் வழுவாய் ஒழிந்து போகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

என்றும் நிலையில்லாத இவ்வுலகத்தில் என்றும் நிலையாய் நிலைத்து நிற்பது புகழே. அது அரிய செயல்களாலும் பெரிய இயல்புகளாலும் உரியதாய் வருகிறது. கல்வி, சீலம், ஞானம், வீரம் முதலியவற்றால் புகழை அடையலாமாயினும் கொடையால் அடைவதே உயர்தரம் உடையதாய் ஒளிவீசி எழுகிறது.

புரிகின்ற கொடைவழியே புகழ்வெளியாய் எவ்வழியும்
விரிகின்ற ஒளிவீசி வியனோடு விளங்குமால்!

புகழ் விளையும் வழியை இது தெளிவாக விளக்கியுள்ளது.

ஈவார்மேல் நிற்கும் புகழ்! - குறள், 282 என்றார் தேவர்.

எளியவர்க்கு அளிசெய்து உதவும் ஈகையாளரிடமே புகழ் ஒளிசெய்து ஓங்கி நிற்கும் என்றதனால் கொடைக்கும் புகழுக்கும் உள்ள உறவுரிமை புலனாய் நின்றது. புகழின் தாயாயுள்ள இத்தகைய கொடையை உடையவரே எத்தகைய நிலையிலும் நிலைபெற்ற கீர்த்தியாளராய் உலகில் நிலவி நிற்கின்றார்,

ஆய் என்பவன் குறுநில மன்னன்; பாண்டி நாட்டின் தென் பகுதியில் இருந்தவன், சிறந்த கொடையாளி; இவனது ஈகை நிலையை வியந்து அக்காலத்திலிருந்த சங்கப் புலவர் பலரும் புகழ்ந்திருக்கின்றனர். அவருள் ஏணிச்சேரி முடமோசியார் என்பவர் இவனை நேரே காண வந்தார்; கண்டார்; வந்தவர் எவரையும் உவந்து உபசரித்து இவன் உதவி புரிகிற நிலைமையையும், நீர்மையையும் நோக்கி நெஞ்சம் மகிழ்ந்தார். ’தாயன்பு புரிகிற ஆயே! நீ உலக சோதியாய் விளங்குவாய்!” என்று இவனை விழைந்து புகழ்ந்தார். அப்பொழுது வானத்தை அண்ணாந்து நோக்கிச் சூரியனைப் பார்த்து இச் சீரியனை வார்த்து ஒருபாட்டுப் பாடினார். அதன் ஒரு பகுதி அயலே வருகிறது.

விருந்திறை நல்கும் நாடன் எங்கோன்
கழல்தொடி ஆஅய் அண்டிரன் போல
வண்மையும் உடையையோ ஞாயிறு!
கொன்விளங் குதியால் விசும்பி னானே - மோசியார்

'ஓ சூரியனே! நீ உயர்ந்த ஆகாயத்தில் வீணே ஒளிவீசி உலாவுகின்றாயே அன்றி எங்கள் ஆயைப்போல் தாயன்போடு விருந்தினரைப் புரந்தருளி வருந்தி வந்தவர்க்கு எதையும் வாரிக்கொடுக்கும் வண்மை உன்னிடம் இல்லையே! நீ வெயிலைப் பரப்பிச் சுடுகின்றாய்; இவன் கொடையைப் பரப்பி எல்லார் உள்ளங்களையும் குளிரச் செய்கின்றான்; நீ பகலில் மாத்திரம் ஒளி செய்கின்றாய்; இவன் இரவு பகல் என்றும் புகழொளி வீசிப் பொலிந்து விளங்குகிறான்’ எனப் புலவர் உள்ளம் கனிந்து கூறியுள்ளமையால் இவனது இனிய நீர்மைகளையும் ஈகையின் சீர்மைகளையும் நாம் நேரே உணர்ந்து உவந்து நெஞ்சம் தெளிந்து கொள்கின்றோம்.

பொருள் நிறைந்திருந்தாலும் ஈகை இல்லையானால் அந்தச் செல்வன் எள்ளி இகழப்படுகிறான்; இயன்ற அளவு கொடுத்து வருபவனை உலகம் உவந்து புகழ்ந்து வருகிறது; கொடையாளியைப் பகைவனும் மதித்துப் போற்றுகிறான்; கொடுப்பது அரிய செயலாதலால் அதனையுடையவன் அதிசய மேன்மையை அடைந்து கொள்கிறான். அருமை யாண்டும் பெருமை தரும்.

அயலார் வாழச் செயல் புரிபவன் உயர்மனிதன் ஆகின்றான். தன்னலமே கருதித் தன்பாடே நோக்கித் தன் வயிற்றையே நிரப்பித் தன்னையே நயந்து வியந்து எவ்வழியும் சுய நோக்கமாய் மயல் மண்டி யுழலுகிற மனித சமுதாயத்துள் பிறர்நலம் கருதிப் பிறர்க்கிரங்கி உதவுவது அரிய பெருமையாய் வந்தது.

பொருளில் பெருமோகம் கொண்டு மருள்மண்டி நிற்பவர் யாதும் ஈயாமல் இருள்மூடி இழிந்து கழிகின்றார்: பொருளின் நிலைமையை உணர்ந்தவர் அருள்புரிந்து உதவித் தெருள்நிறைந்து தேசு மிகுந்து திகழ்கின்றார். ஈகையால் இகமும் பரமும் இன்பமாகிறது. இருமையும் இனிமையாய் ஈதல் எய்துமே என்பதுமறிக.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(’ழ்’ ஆசிடையிட்ட எதுகை)

சாதல்வந் தடுத்த காலும் தனக்கொரு சாதல் இன்றிப்
பூதலம் இறக்கும் காறும் புகழுடம்(பு) இருக்கும்; அந்தக்
கோதறு புகழின் யாக்கை கொடையினால் செல்வம் கூர
வா’ழ்’தலை யுடையார் அன்றே வானமும் வணங்கு நீரார். - விநாயக புராணம்

கொடையினால் உளவாகும் மகிமை மாண்புகளை இதனால் உணர்ந்து கொள்கிறோம். தன்னுயிர்க்கு ஊதியமான உறுதி நலங்களைப் பருவம் உள்ள பொழுதே செய்து கொள்பவர் பிறந்த பிறவியின் பயனை விரைந்து பெற்றவராகின்றார், அங்ஙனம் பெறாதவர் பேதைகளாய் இழிந்து ஒழிந்து போகின்றார்,

பிறர்க்கு இதமாய் உதவுவது புண்ணியமாய் வந்து தன் உயிர்க்குறுதியாய் நன்மை புரிகிறது; அந்த உபகார நீர்மையை இழந்தவன் தனக்கே அபகாரம் செய்தவனாகிறான். ஈதல் உயிர்க்கு ஊதியம் எனத் தேவர் கூறியது பொருள் பொதிந்த அருள்மொழி. இரக்கமும் ஈகையும் இல்லையானால் அந்த மனித வாழ்க்கை அரக்கத் தன்மையாய் இழிந்து அவலமடைந்து கழிகிறது.

கட்டளைக் கலித்துறை

சாகைக்கும் மீண்டு பிறக்கைக்கும் அன்றித் தளர்ந்தவர்க்கொன்(று)
ஈகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே! 54 கந்தர் அலங்காரம்

தளர்ந்தவர்க்கு ஈவது உயர்ந்த பிறவிப்பேறு என்று அருணகிரிநாதர் ஆவலோடு மறுகியுருகி ஆண்டவனிடம் இவ்வாறு வேண்டியிருக்கிறார். கொடுப்பதால் புகழ் வருகிறது; புண்ணியம் விளைகிறது; உயிர் உயர்கதி அடைகிறது; ஆகையால் கொடை ஆவித்துணையாய் அதிசய இன்பமாய்க் கருத வந்தது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

இகத்தில் நன்கொடைப் பெருமையை அறிந்துளோர் இல்லென்(று)
அகத்தின் நாமமும் உரைசெயார்; அவரரி தாகத்
தொகுத்த ஒர்பொருள் நல்குவர் என்பதென் துணிந்து
மி'குத்த ஆவியும் கொடுப்பரால் வேண்டுமுன் விரும்பி! - திருக்கூவப் புராணம்

கொடை இருமையும் இன்பம் தரும் பெருமையுடையதாதலால் அதன் மகிமையை உணர்ந்தவர் இல்லை என்ற சொல்லை மறந்தும் சொல்லார்; ஈட்டிய பொருளை மாத்திரமா? இனிய உயிரையும் அவர் கொடுக்கத் துணிவர் என இது குறித்துள்ளது. வீட்டுக்கு இல் என்று ஒரு பெயர் உண்டு; நல்ல கொடையாளிகள் அந்தப் பேரைக் கூடச் சொல்ல அஞ்சுவர் என உரைத்திருப்பது ஓர்ந்து சிந்திக்கவுரியது. யாதும் இல்லை என்று வருவோர்க்கு எல்லாம் உண்டு என்று உள்ளம் உவந்து கொடுப்பது உயர்ந்த வள்ளல்களின் இயல்பு; பழகி வந்துள்ள அந்த நல்ல பழக்கத்தால் இல்லை என்னும் பொல்லாத சொல்லை அவரது இனிய வாய் சொல்லாது; யாண்டும் இதமே சொல்லும்.

எவ்வழியும் கொடுத்துப் பழகுக; அது உனக்குச் செவ்விய புகழைக் கொடுத்துத் திவ்விய பதவியையும் உதவியருளும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Apr-21, 12:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 160

சிறந்த கட்டுரைகள்

மேலே