புகைப்படம்

தேவைப்படும் ரசீதொன்றை
தேடிக்கொண்டிருந்தேன் ....

பெரும்பாலும்
வைத்ததை மறந்துவிடும் பழக்கம் ....

வயதாகி விட்டதால் அல்ல
மனைவி எடுத்துகொடுத்து பழகியதால் ....

அன்றவள் ஊரிலில்லை ...
ஆதலால் வெகுநேரம் தேடல் ....
களைத்துப்போகும் தருவாயில்
கண்ணில் அகப்பட்டதந்த
புகைப்படம் .....

ஓரமெல்லாம் செல்லரித்து
சற்றே தரம் குன்றி .....
ஆனாலும் சின்ன புன்முறுவல் ...

நானில்லாத நான் ரசிக்கும்
புகைப்படம் .....
மெல்ல அதன் நினைவில் .....

உடம்பு நன்றாகவே இருந்தது ....
இருந்தும்
நலமில்லை யென விடுப்பு ....

செல்ல ஆசைதான் ....
கவுரவம் அறியா வயதில்
அழுகைதான் மிச்சமாகும் ....

பலமுறை அப்படி நடந்திருந்ததால்
இம்முறை விடுப்பே
சிறந்ததென இம்முடிவு ....

வாத்தியார்
கூட்டியாரச்சொன்னதாய்
வீடு தேடிவந்த நண்பன் .....

வாசலில் குரல்கேட்டதும்
போர்வைமறைத்து விழுந்தேன் ....
விட்டுவிட்டு வேகவேகமாய்
சுவாசம் இழுத்தேன் .....
அதிதீவிர பிரிவு நோயாளியும்
தோத்திருப்பான் .....

உள்ளே வந்தவன்
உடல்தொட்டு என்னாயிற்று என்க

எனக்கு காய்ச்சல்
அதான் இன்னைக்கு வரல.
வாத்தியாரிடம் சொல்லிடு ....

சரி யென நம்பிச்சென்றான்....
கண்டுபிடிக்க அவன்
மருத்துவரில்லை அல்லவா .....

ஐந்துரூபாய் கொடுக்கமுடியா
குடும்பச்சூழல் .....
எனை தேர்ந்த நடிகனாக்கியது ....

இந்த நாடகம் மறுமுறையும்
அரங்கேற்றப்பட்டது .....
வகுப்பறையில் புகைப்படம்
விநியோகிக்கும் நாளன்று .....

பின்பலநாள் கழித்து
பார்த்துவிட்டு தருவதாய்
வாங்கி பதுக்கியது ....
இன்றுதான் வெளிவருகிறது .....

சிறிதுநேரம்
பார்த்து பார்த்துச்சிரித்தேன் .....

பின்தீர்க்கமாய்
முடிவெடுத்தேன் ....
திருப்பித்தந்து விடவேண்டும்
கைப்பேசியில் பிரதி
எடுத்துக்கொண்டு ......

மீண்டும் தொடங்கியது தேடல் ....
இம்முறை நண்பனை
நோக்கி ....

எழுதியவர் : (10-Apr-21, 2:11 pm)
சேர்த்தது : Raj NK
Tanglish : pukaipadam
பார்வை : 213

மேலே