நாடிக் கொடுத்தான் மனுவின் குலதெய்வம் ஆகி எடுத்தான் பெரும்பேர் - கொடை, தருமதீபிகை 813

நேரிசை வெண்பா

கோடிக்(கு) ஒருவன் கொடைக்கென்ன ஒளவைமுன்
பாடி யிருக்கும் படியினால் - நாடிக்
கொடுத்தான் மனுவின் குலதெய்வம் ஆகி
எடுத்தான் பெரும்பேர் இவண்! 813

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கோடிக் கணக்கான மக்களுள் ஒருவனே கொடையாளியாய் வரமுடியும் என ஒளவையார் பாடியிருத்தலால் கொடையின் அருமை தெளிவாய் நின்றது; அத்தகைய கொடையை யுடையவன் மனிதருள் தெய்வமாய் மகிமை பெறுகிறான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஈகை இனியது; புகழ் புண்ணியங்களை யுடையது; அரிய மேன்மைகளையும் பெரிய இன்ப நலங்களையும் அருளுவது என இன்னவாறு உன்னத நிலையில் ஒளி செய்திருந்தாலும் கொடையை யாரும் எளிதாய் அடைய முடியாது. அதனை உரிமையாய்த் தழுவி வருபவர் மிகவும் அருமையாகவே உள்ளனர்.

உயிர் வாழ்க்கைக்குப் பொருள் அவசியம் தேவையாயிருத்தலால் மனிதன் எவ்வழியும் அதனை ஆவலோடு தேடுகிறான். அது பெருகி வரும்போது அதன்மேல் ஆசையும் மோகமும் கூடவே மருவி வரவே அதனை இறுகப் பற்றி யாதும் வெளிவிடாமல் பழியோடு படிந்து கிடக்கின்றான்,

பொருளாசையால் இவ்வாறு மருள் மண்டி உழலுகிற இருளுலகத்திலே அருள் கூர்ந்து தெருளோடு பிறர்க்குதவி செய்வார் மிகவும் அரியர். ஏதேனும் ஒர் உதவியை நாடி யாரேனும் தன்பால் வந்தால் எந்த மனிதனும் சிந்தை கவல நேர்கின்றான்; வந்தவனை அவமதிப்பாக நடத்துகிறான்; நிந்தை மொழிகளை நேரே கூறி வேறே குறிப்பால் இகழுகிறான்.

நூற்றுவரில் தோன்றும் தறுகண்ணர்; ஆயிரவர்
ஆற்றுளித் தொக்க அவையகத்து மாற்றமொன்(று)
ஆற்றக் கொடுக்கும் மகன்தோன்றும்; தேற்றப்
பரப்புநீர் வையகம் தேரினும் இல்லை
இரப்பாரை எள்ளா மகன். – தகடூர்

நூறு பேருள் ஒரு வீரனைக் காணலாம்; ஆயிரம் பேருள் ஒரு புலவனைக் காணலாம்; ஏழைகளை எள்ளி இகழாமல் உள்ளமுவந்து கொடுக்கும் கொடையாளியை உலக முழுவதும் தேடினாலும் காணமுடியாது என இது காட்டியுள்ளது.

இரவலரை எள்ளாமல் இனிய மொழி கூறி ஈயும் வள்ளல் எங்கும் இல்லை என்று முடிவு கூறிய இக்கவியை ஒளவையார் பார்த்தார்; மனித இனத்தை அடியோடு மடமைக் கொடுமையில் தள்ளிவிட அந்தக் கிழவிக்கு மனம் இசையவில்லை; ஆகவே இதனைத் தழுவி ஒரு பாட்டுப் பாடினாள். அது அயலே வருகிறது.

நேரிசை வெண்பா

ஆர்த்தசபை நூற்றொருவர்; ஆயிரத்தொன் றாம்புலவர்;
வார்த்தை பதினாயி ரத்தொருவர் - பூத்தமலர்த்
தண்டா மரைத்திருவே! தாதாகோ டிக்கொருவர்
உண்டாயின் உண்டென் றறு! - ஒளவையார்

கோடிமக்களுள் கொடையாளி ஒருவன் இருக்கலாம் என அருமை தோன்ற இங்ஙனம் ஐயமாய்க் குறித்திருக்கின்றார்.

சூரன் நூற்றில் ஒருவன்; பண்டிதன் ஆயிரத்தில் ஒருவன்; நல்ல பேச்சாளி நூறாயிரத்தில் ஒருவன்; கொடையாளி. இருக்கிறானோ இல்லையோ தெரியாது எனக் குறித்திருக்கிறது. தருகிறவன் தாதா எனத் தகுதியான பேர் பெற்றான். கொடுப்பது அரிய செயல்; கொடை மிகவும் அருமையானது; அதிசயமுடையது என்பது இங்கே நன்கு தெரிய வந்தது.

தனது சுகத்தையே கருதித் தன்னலமே எவ்வழியும் பெரிதும் எண்ணி வருவது மனித இயல்பாய் மருவியுள்ளது. இத்தகைய மனித இனத்தில் பிறர்க்கு இதமாய் இரங்கி ஈபவன் உத்தம நிலையனாய் உயர்ந்து ஒளிமிகுந்து விளங்குகின்றான்.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே உள! 228 ஈகை

இல்லை என்னும் இளிவைச் சொல்லாமல் உள்ளம் உவந்து கொடுக்கும் தன்மை உயர்ந்த குலமகனிடத்தேதான் உண்டு என இது உணர்த்தியுளது. ஈகை இருக்கும் நிலையையும் ஈயாமை உள்ள புலையையும் இங்கே ஒருங்கே உணர்ந்து கொள்கிறோம். கொடுப்பவன் குலமகனாய் உயர்ந்தான்; கொடாதவன் இழிமகனாய்த் தாழ்ந்தான். இழிவு நேராமல் ஈந்த அளவு அவன் விழுமியோனாய் உயர்ந்து மேலே விளங்கி வருகிறான்.

இல்லது நோக்கி இளிவரவு கூறாமுன்
நல்லது வெஃகி வினைசெய்வார்! பரிபாடல் 10

வறியவர் வாய் திறந்து கேளா முன்னமே அவரது நிலைமையை உணர்ந்து விரைந்து விழைந்து உதவி புரிவார் என உயர்ந்த மேன்மக்களுடைய நீர்மையை இது உணர்த்தியுள்ளது. இவ்வாறு உதவுகின்றவரை உலகம் எவ்வாறு உவந்து புகழ்ந்து வரும்? இதனை ஈண்டு உணர்ந்து கொள்ள வேண்டும். எளியவர்க்கு இரங்கி ஈபவர் விழுமிய மேலோராய் ஒளிமிகுந்து வருகிறார். உபகார நீர்மை உயர் மகிமையாய் மிளிர்கிறது.

தான் ஈட்டிய பொருளை நீட்டி உதவுகிறவன் நீண்ட புகழை அடைந்து கொள்கிறான்; நிலையான அக்கீர்த்தி தலையானவரையே சார்ந்து நிலவுகிறது. இட்டு வாழ்வதே இனிய வாழ்வாம்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கருங்கடல் பிறப்பின் அல்லால் வலம்புரி காணும் காலைப்
பெருங்குளத்(து) என்றும் தோன்றா பிறைநுதல் பிணைய னீரே
அருங்கொடைத் தானம் ஆய்ந்த அருந்தவம் தெரியின் மண்மேல்
மருங்குடை யவர்கட்(கு) அல்லால் மற்றையர்க்(கு) ஆவது உண்டே? 326

விட்டுநீர் வினவிக் கேண்மின் விழுத்தகை யவர்க ளல்லாற்
பட்டது பகுத்துண் பாரிப் பார்மிசை யில்லை கண்டீர்.
அட்டுநீ ரருவிக் குன்றத் தல்லது வைரந் தோன்றா
குட்டநீர்க் குளத்தி னல்லாற் குப்பைமேற் குவளை பூவா 327 முத்தி இலம்பகம், சீவக சிந்தாமணி

பகுத்து உண்டலும், கொடையும் தோன்றுகின்ற இடங்களை இவை நயமாய்க் காட்டியுள்ளன. கவிகளைக் கருதியுணர்ந்து சுவைகளை நுகர்ந்து கொள்ள வேண்டும். அருவி பாய்கிற பெரிய மலைகளிலேதான் அரிய வயிரங்கள் தோன்றும், நீர் நிறைந்த ஏரியிலேதான் சீரிய குவளை மலர்கள் பூக்கும்; கருங்கடலிலேதான் வலம்புரிச் சங்குகள் பிறக்கும்; அதுபோல் கொடையும் தவமும் உயர்ந்த குல மக்களிடையேதான் நலமான நிலையில் உளவாம் எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறியுள்ளான்.

Generosity is the part of a soul - Goldsmith

’உதாரமான கொடை மேலான உயிரின் பாகமாயுள்ளது’ என்னும் இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணரவுரியது. ஈகை விழுமியோரிடமே கெழுமியுளது என்பதை இதுவும் தெளிவாக்கி நின்றது. கொடையாளி உயர்ந்த மலையாய் ஒங்கி நிற்கிறான்; கொடாத உலோபி இழிந்த குப்பையாய்த் தாழ்ந்து கிடக்கிறான். கழிகுப்பையாய் ஒழியாமல் ஒளிபெற்று உயருக.

’கொடுத்தவன் அப்பன்; கொடாதவன் சுப்பன்’ என்பது இந்நாட்டில் வழங்கி வரும் பழமொழி. கொடையாளியின் உயர்வையும், கொடாத உலோபியின் இழிவையும் இது விளக்கித் தெளிவாய்க் காட்டியுளது.

கொடையால் மனிதன் தேவனாய் மகிமை பெறுகிறான். அந்த அதிசய நீர்மையோடு ஆனவரையும் பழகி மேன்மை அடைக. எளியவர்க்கு இரங்கியருள்; ஒளியும் இன்பமும் வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Apr-21, 9:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 110

மேலே