குடும்பம்

குடும்பம்
முன்னுரை:
இயல்பு, இதை நாம் உணரும் இடம் நம்‌ இல்லம்.பாட்டன்மார்களின் பக்குவமும் ,பாட்டிகளின் பாசத்தையும் உணரும் இடம், தந்தையின் கண்டிப்பும் அதனுடன் கலந்து அரவணைப்பும் உணரும் உன்னதமான இடம் நம் இல்லம்.

இல்லம்:
வாழ்க்கை சக்கரத்தில் நாம் உருண்டோடி, பொருள் ஈட்டி,பல பொறுப்புகளை ஏற்றுப் போராடிக்கொண்டிருக்கும் வேளையில் பாசமாய் நம் தலைவருடி,அக்கறையாய் நம் ஆரோக்கியம் பேணும் அழகான உறவுகளின் உன்னதமான இருப்பிடம் இல்லம்.

மனையாள்:
மனைவி தன் கணவன் குறிப்பு அறிகிறாள்,மாமனார்,மாமியார்,நாத்தனார்,கொழுந்தன் களின் குணம் அறிந்து நடக்கிறாள்,பல்கலைக்கழகங்கள் கற்றுத் தராத படிப்பினை அவள் அனுபவத்தில் கற்றுத் தெளிகிறாள்.பிள்ளைகளைப் பேணி,உயரிய நிலைக்கு வர உன்னதமாய் பாடுபடுகிறாள்.கல்வி கற்றவர்கள் மட்டுமா தன் பிள்ளைகளை பார்தூக்கி நிக்க வைக்கிறார் ? இல்லை தன் அன்பை புகட்டி அதில் அகிலத்தையே ஆளும் அளவிற்கு அவர்களின் நிலை உயர்த்துகிறாள்.
தந்தை ஈட்டிய பொருளின் ஒரு பகுதியை பெட்டிக்குள் வைத்துப் பூட்டி,நெருக்கடி நேரங்களிலும் சிறப்புடன் வாழ சேமிப்பை தரும் தாய்மார்கள் அனைவரும் நிதி மேலாண்மையில் பட்டம் பெறாதவரே ஆயினும் பட்டினியைத் தவிர்க்க வைக்கும் வழி அறிந்த வல்லுநர்களே.

தந்தை:

தந்தை என்ற மந்திரச்சொல் நம் சிந்தையில் நின்று சிறப்பான நிலையை அடையச்செய்கிறது.நம்பிக்கை,பொறுப்பு, பொருள் ஈட்டல்,கௌரவம்,உயர்வு இன்னும் எண்ணற்ற நற்பண்புகளை கற்றுத்தரும் நடமாடும் பல்கலைக்கழகம் தந்தை.
குடும்ப கௌரவத்தை காப்பதில் காவல்காரனாய்,தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தீவிரவாதியாய்,அன்புடன் அரவணைப்பதில் அன்னைத்தெரசவாய்,பொருள் ஈட்டி,கௌரவம் நாட்டி,தன் குடும்பத்தை பார் போற்ற சீர் தூக்கி நிறுத்தும் சிறந்த நிர்வாகி.எந்தக் கல்விச்சாலைகளாலும் கற்றுத்தர முடியாத பவித்ரமான நூல் தந்தை.

ரத்த உறவுகள்
குறும்புகளின் உச்சமாய் தங்கை,தம்பிகள் வீட்டின் சந்தோசத்தின் குத்தகைக்காரர்களாய்,மனதுக்கு உற்சாகத்தைத்தருவதே அவர்களின் குழந்தைத்தனங்களே. சந்தோசம் நல்கும் நோக்கத்தின் சாதனையாளர்கள்.
பாட்டியின் கதைகளும்,தாத்தாவின் கருத்துக்களும்,வீட்டின் ஒவ்வொரு இடமும் விளையாட்டிற்கு உபயோகமாய் கருதும் கள்ளம் கபடம் இல்லாத பிஞ்சு இதயத்திற்கு சொந்தக்காரர்களின் மூலதனமே மகிழ்ச்சி மட்டும்தான்.
பாசத்தின் ஊற்றாய் அண்ணன், அக்காக்கள்.இருப்பதை தந்து பொறுப்பாய் பார்த்துக்கொள்ளும் தாய்,தந்தையின் பிம்பங்கள்.போட்டி போட கற்றுத்தரும் கலைவல்லுநர்கள்.நிராயுதபாணியாய் நிற்க நேரும் தருவாயில் தன் கரம் கொடுத்து காக்கும் சக்திகள்.

இன்பம்:
உலகம் எனும் நாடக மேடையில்,தேசம் தேசமாய் சென்றும்,வேடங்கள் பல தரித்தும்,பெரும்பொருள்‌ ஈட்டி,பெரிய பெயர் பெற்ற போதிலும்,உணர முடியாத இயல்பு நிலையை தாயின் ஒரு கைப்பிடிச் சோறும், தந்தையின் தலைவருடலும் சொந்தங்களின் பாச மழையும் பொழியும் தருவாயில் சுற்றிய தேசங்களும்,ஈட்டிய பொருளும்,கண்ணை மறைத்து இயல்பை வெளிக்காட்டும் இடம் இன்பம் தரும் இல்லம் நம் குடும்பம்.

முடிவுரை:

பாசத்தை வற்றாமல் அள்ளித்தரும் ஜீவ நதியாய் தாய் அன்பு,
கடல் போல் பரந்து விரிந்த தந்தையின் கடமை உணர்வு,
மழையாய் மகிழ்ச்சியைப் பொழியும் மழலைகள்,ஊற்றாய் பெருகி வரும் பெருந்தன்மையை காட்டும் சொந்த பந்தங்கள் .இத்தனை ஆனந்த்தத்தை இல்லத்தில் உணரும் தருவாயில் உள்ளம் குளிர்ந்து கண்கள் குளமாய் நிறைந்து நம் நிலை உணர்த்தும் உன்னத சொர்க்கம் நம் குடும்பம்.

எழுதியவர் : நா.சந்தன கிருஷ்ணா (17-Apr-21, 11:45 pm)
சேர்த்தது : நா சந்தன கிருஷ்ணா
Tanglish : kudumbam
பார்வை : 277

மேலே