மாறுவரோ வீரருளம் ஏற்றதுணை இல்லெனினும் எய்த்து - வீரம், தருமதீபிகை 804

நேரிசை வெண்பா

வெற்றி அபிமன்முன் வில்இழந்தும் வாள்எடுத்துக்
கொற்றம் புரிந்து கொடுஞ்சமரில் - சுற்றிநின்ற
மாற்றலரை வீட்டினான் மாறுவரோ வீரருளம்
ஏற்றதுணை இல்லெனினும் எய்த்து. 804

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன் கையில் இருந்த வில்லை இழந்தும் விர அபிமன் யாதும் தளராமல் மூண்டு போராடி யாண்டும் அதிசய நிலையில் நீண்டு நின்றான்; உற்ற துணைகள் பக்கத்தே இல்லையெனினும் வெற்றி வீரர் எய்த்து மீளார்; வீறோடு பொருது விளங்கி நிற்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மானம், வீரம் என்னும் இந்த இரண்டு நீர்மைகளும் மானிட சாதிக்கு மேலான சீர்மைகளை அருளுகின்றன. ஈன நிலைகள் யாதும் அணுகாமல் தன்னை இனிது பேணி நிற்பதே மானம் என வந்தது. உயர்ந்த மனிதத் தன்மையை என்றும் நிலை நிறுத்தி வருவது என்னும் குறிப்பை இது குறிப்பாய்க் குறித்துள்ளது.

உயிரினும் மானம் பேணத்தக்கது என்றதனால் இதன் உயர்நிலை உணரலாம். விழுமிய மேன்மை யுடையது வியனாய் நின்றது.

மானமே என்னுயிர் மகிமை வாய்ந்தது
தானமும் ஞானமும் தவமும் அன்னதே.

அருச்சுனன் கண்ணனிடம் இன்னவாறு கூறியிருக்கிறான்.

நிலையான மகிமையை மனிதனுக்குத் தலைமையாய் அருளி வருதலால் மானம் உயிரினும் இனியது என மதியுடையார் மதித்து வந்துளார். ஆன்ம ஒளியின் மேன்மை வெளியாயது.

Honour is venerable to us because it is no ephemeris - Emerson

'மானம் என்றும் அழியாத மகிமையுடையது; ஆதலால் அது நாம் போற்றத்தக்கது’’ என அமெரிக்க மேதையான எமர்சன் மானத்தின் மாட்சியை இவ்வாறு கூறியிருக்கிறார்;

மானம் உடையவனைக் கவரிமான் கன்று என்று புகழ்கின்றார்; அஃது இல்லாதவனைக் கழுதை என்று இழிவாக எள்ளி இகழ்கின்றார். உயர்நிலையும் இழிபுலையும் ஒருங்கே உணர வந்தன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மானமுள் ளோர்க ளென்றும்
..மயிரறின் உயிர்வா ழாத
கானுறு கவரி மான்போல்
..கனம்பெறு புகழே பூண்பர்
மானமொன் றில்லார் தானே
..மழுங்கலாய்ச சவங்க ளாகி
யீனமாங் கழுதைக் கொப்பா
..யிருபபரென் றுரைக்க லாமே. 37 விவேக சிந்தாமணி

மானம் உடையவனது மேன்மையும் அது இல்லாதவனது கீழ்மையும் இதனால் தெளிவாய்த் தெரிய வந்தது. இழிநிலையில் யாதும் தாழாமல் எவ்வழியும் உயர் நிலையில் புனிதமாய் வாழுவதே மானமாம். அதனை இனிது பேணி வரும் உறுதி நிலை வீரமென நின்றது. எல்லாக் குண நலங்களும் நிலை குலையாமல் எவ்வழியும் தலைமையாய் நிலைத்து வருவது வீரத்தாலேயாம்.

அரிய இந்த வீரமுடையவர் யாண்டும் பெரிய மகிமைகளை அடைந்து வருகின்றார், சிங்கம் குட்டியாய் இருந்தாலும் அதனெதிரே கொடிய மிருகங்களும் குலை நடுங்குகின்றன; வீரமுடையவன் இளைஞனாய் இருந்தாலும் அவன் எதிரே எவரும் தலை வணங்குகின்றனர். மணிகளுள் வயிரம்போல் குணங்களுள் வீரம் உயர்தரமாய் யாண்டும் ஒளி வீசி நிற்கின்றது.

வீரம் எந்த உயிரில் மருவியுள்ளதோ அந்த மனிதன் இளையனாயினும், தனியனாயினும் அதிசய நிலையில் துதி கொண்டு விளங்குகின்றான். தன்னையுடையவனை வீரம் தனி மகிமையில் உயர்த்தி மன்னிய புகழை நன்னயமாய்.அருளுகின்றது.

அபிமன்னன் அருச்சுனனுடைய அருமைத் திருமகன். அழகும் வீரமும் விழுமிய நிலையில் இவனிடம் கெழுமி நின்றன. பெற்ற தந்தையைப் போலவே உற்ற இம்மைந்தனும் வில்லாண்மையில் அதிசயம் உடையனாய்த் துதி கொண்டு நின்றான். பாரதப் போர் மூண்டபோது சமர பூமியில் இவன் புரிந்த அமராடல்களைக் கண்டு அமரரும் அதிசயித்து வியந்தனர். எதிரிகள் நெடிய அரணாய் அமைத்திருந்த முரணான சக்கர வியூகத்தை உடைத்து உக்கிர வீரமாய்ப் போராடினான். துரியோதனன் மகன் முதலாக அரசகுமார்கள் பலர் மாண்டு மடிய கன்னன், கிருபன், துரோணன் முதலிய பெரிய வில்லாளிகள் மூண்டு பொருதார்; அவர் யாவரும் அஞ்சி அலமர இவன் வெஞ்சமராடினன்; முடிவில் வில் ஒடிந்து போகவே யாதும் தளராமல் வாளாடல் புரிந்து ஆளரி போல் அடலாண்மை புரிந்தான். ஏறியிருந்த தேரும், எடுத்து நின்ற வில்லும் இழந்து போனான் என்று கிளர்ந்து வந்து வளைந்த வீரர்கள் எல்லாரும் அழிந்து வீழ இவன் விரைந்து வென்றான்.

கலிவிருத்தம்
(கனி 3 / மா)

தேர்போனது பரிபோனது சிலைபோனது சிறுவன்
போர்போனதி னிச்சென்றமர் புரிவோமென நினையாக்
கார்போனனி யதிராவிதழ் மடியாவெறி கடல்வாய்
நீர்போலுடன் மொய்த்தார்வெரு வுற்றோடிய நிருபர். 107

துச்சாதனன் மகன்மன்னர்தொ ழுந்துச்சனி யென்னும்
நச்சாடர வனையானினி நானேபழி கொள்வே
னிச்சாயக மொன்றாலென வெய்தானவன் முடியோ
டச்சாயகம் வடிவாள்கொட றுத்தானட லபிமன். 108

துரியோதனன் மகனும்பொரு துச்சாதனன் மகனும்
புரியோதன முனைவென்றமை புரிவின்முனி கருதா
வரியோமெனு மறையாலட லம்பாயிர மெய்தான்
வரியோலிடு கழலானவை வாள்கொண்டுது ணித்தான். 109

சொரியுங்கணை மழையேவுது ரோணாரியன் வில்லும்
பரியுங்கட விரதத்தொடு பாகும்பல பலவாய்
முரியும்படி வடிவாள்கொடு மோதாவமர் காதா
விரியுஞ்சுட ரெனநின்றனன் விசயன்றிரு மகனே 110

ஒருக்காலழி தேரன்றியு முருளாழிகொ டேர்மேல்
இருக்கால்வர முக்கால்வர வெக்காலும ழித்தே
பெருக்காறணை செய்தொத்தவிர் பிள்ளைப்பிறை யனையான்
செருக்கானகை செய்தான்வரி சிலையாசிரி யனையே 111 பதின்மூன்றாம் போர்ச் சருக்கம், பாரதம்

துரோணாச்சாரியர் முதலிய பெரிய போர்வீரர்களோடு தனியே நின்று அபிமன்னன் போராடி வென்றிருக்கும் நிலைகளை இங்கே கண்டு நாம் வியந்து நிற்கின்றோம். யாதொரு துணையுமின்றி வாள் ஒன்றே துணையாய்க் கொண்டு உறுதியோடு ஊக்கி மூண்டு போராற்றி வந்தவன் இறுதியில் ஒரு தோள் இழந்து பரிதாபமாய் மடிந்து வீழ்ந்தான். இவன் இறந்ததை அறிந்ததும் இருதிறச் சேனைகளும் ஒருங்கே பரிந்து வருந்தின. தருமர் உருகியழுது மறுகிப் புலம்பியது பெரிய சோகமாய் நீண்டது.

தருமர் நொந்து தவித்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 மா தேமா)

பிறந்ததினம் முதலாகப் பெற்றெடுத்த விடலையினும்
..பீடும் தேசும்
சிறந்தனை"என்(று) உனைக்கொண்டே தெவ்வரைவென்(று) உலகாளச்
..சிந்தித் தேன்யான்;
மறந்தனையோ, எங்களையும்? மாலையினால் வளைப்புண்டு,
..மருவார் போரில்
இறந்தனையோ? என்கண்ணே! என்உயிரே! அபிமா!இன்(று)
..என்செய் தாயே! 138

தேனிருக்கும் நறுமலர்த்தார்ச் சிலைவிசயன் இருக்கவரைத்
..திண்தோள் வீமன்-
தானிருக்க, மாநகுல சாதேவர் தாமிருக்க,
..தமராய் வந்து
வானிருக்கின் முடிவான மரகதமா மலையிருக்க,
..வாழ்வான் எண்ணி
யானிருக்க, வினையறியா இளஞ்சிங்கம் இறப்பதே?
..என்னே! என்னே! 139

நின்றனையே யெனைக்காத்து நீயேகென் றியானுரைப்ப
..நெடுந்தே ரூர்ந்து,
சென்றனையே யிமைப்பொழுதிற் றிகிரியையு முடைத்தனையே
..தெவ்வ ரோட,
வென்றனையே சுயோதனன்றன் மகவுடனே மகவனைத்தும்
..விடங்கா லம்பிற்,
கொன்றனையே நின்னாண்மை மீண்டுரைக்கக் கூசினையோ
..குமர ரேறே, 140

உனக்குதவி யொருவரற வொருதனிநின் றமருடற்றி
..யொழிந்த மாற்றந்,
தனக்குநிகர் தானான தனஞ்சயனுங் கேட்கினுயிர்
..தரிக்கு மோதா.
னெனக்கவனி தரவிருந்த தித்தனையோ மகனேயென்
..றென்று மாழ்கி,
மனக்கவலை யுடனழிந்து மணித்தேரின் மிசைவீழ்ந்தான்
..மன்னர் கோவே! 141 - பதின்மூன்றாம் போர்ச் சருக்கம், பாரதம்

போரில் மாண்ட அபிமன்னனை நினைந்து தருமர் இவ்வாறு மறுகிப் புலம்பியுருகி அழுதிருக்கிறார். இவனுடைய அருந்கிறலாண்மையும் வீர பராக்கிரமங்களும் வியப்புகளை விளைத்துள்ளன. உயிரழிய நேர்ந்தாலும் வீரர் உள்ளம் தளராமல் ஊக்கிப் பொருதுவர் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி நின்றான். சுத்த வீரரைக் குறித்துக் கூறுங்கால் இவனது வீரத்திறல் உத்தம உவமையாய் உரைக்க வருகின்றது.

கலிவிருத்தம்
(கூவிளங்காய் 3 தேமா)

ஆரமரு ளாண்டகையு மன்னவகை வீழும்
வீரரெறி வெம்படைகள் வீழவிமை யானாய்ப்
பேரமரு ளன்றுபெருந் தாதையொடும் பேராப்
போரமரு ணின்றவிளை யோனி(ற்)பொலி வுற்றான். 259 நாமகள் இலம்பகம், சீவகசிந்தாமணி

கன்னனேடு போராடிய அபிமன்னனைப் போல், எதிரிகள் ஏவிய அம்புகள் எதிரே விழித்த கண் இமையாமல் சச்சந்தன் பொருது விளங்கினான் என இது குறித்துளது. பருவம் நிரம்பாத இளைஞன் தன்னந் தனியே நின்று பெரிய போர் வீரர் பலரையும் முரிய வென்றது அரிய வென்றியாய்த் தெரிய வந்தது.

வீரத்திறல் அதிசய ஆண்மையாய் அமைந்து வருதலால் அது யாவராலும் துதி செய்யப் பெறுகிறது. தம் நாட்டைப் பாதுகாக்க, நீதியை நிலைநிறுத்த, அரசுக்கு ஆதரவாக, உரிமையை அடைந்து கொள்ள, இன்னவாறு தகுதியான காரணங்களால் ஆடவர் போராடப் போதலால் அவர் வீரக் குரிசில்களாய் விளங்கி மேலான புகழை அடைந்து கொள்கின்றனர்.

நேரிசை வெண்பா

தருமமும் ஈதேயாம் தானமும்ஈ தேயாம்
கருமமும் காணுங்கால் ஈதாம் - செருமுனையில்
கோள்வாள் மறவர் தலைதுமிய என்மகன்
வாள்வாய் முயங்கப் பெறின். - தகடூர்

எதிரிகளுடைய தலைகளைத் துமித்து என் மகன் வாள் வாயில் மாள நேரின் அதுவே தருமம்; தானம்; கருமம் என ஒரு வீரத்தாய் இவ்வாறு கூறியிருக்கிறாள். கொடிய படுகொலை நேர்கின்ற போரை இங்ஙனம் உரிமையாய்க் குறித்தது அதன் அருமையும் பெருமையும் மருமமாய்க் கருதி யுணர வந்தது.

One to destroy is murder by law;
And gibbets keep the lifted hand in awe;
To murder thousands, takes a specious name,
War's glorious art, and gives immortal fame. - Young

'ஒருவனைக் கொல்வது சட்டப்படி கொலை ஆகிறது; அங்ஙனம் கொன்றவன் தூக்கு மரத்தில் மரண தண்டனை அடைகிறான்; ஆயிரக் கணக்காய்க் கொல்லுகிறவன் வீரனென வியன் பெயர் பெறுகிறான்; போரின் மகிமை பொருவரு கலையாய் அழியாத புகழைக் கொடுக்கிறது' என வீரக்கலையை விளக்கியுள்ள இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி உணர வுரியது.

மனிதரிடம் மருவியுள்ள மேன்மைகள் சமயம் நேரும் போதுதான் வெளியே தெரிய வருகின்றன. வீரர் நிலைகளைப் போர்க்களங்கள் நேரே விளக்கிக் காட்டுகின்றன. செருமுகம் இல்லையேல் பொருமுகம் தெரியாது. மாந்தருள் மன்னன் போல் மாண்புகளுள் வீரம் மகிமை தோய்ந்து உயர்ந்துள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Apr-21, 8:22 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 61

மேலே