பரிசல்

துடுப்பு கொண்டு
நீந்திய மீனினமே நீ
நிலத்தில் வாழ கற்றுக்கொண்டாயோ ....
நீர்நிலைகளில் உனை
காண முடிவதில்லையே .....


அகலப்பாலங்களில்லா
அன்றைய காலமதில்
ஆழங்கண்டு பதறாமல்
ஆற்றின் வேகங்கண்டு கலங்காமல்
கரை சேர்த்து விட்டாயாமே .....

அவ்வித்தைதனை கற்றுக்கொடு .....
சுழல்போல் சுழற்றும்
சுற்றங்கள் ....
வேகமாய் கடந்துசெல்லும்
ஆகாயத்தாமரையாய் நட்புறவுகள் .....
அவ்வப்போது கரைதாண்டும்
கோபங்கள் .....
வாழ்வுதனை
கையாள்வது பெரும்சிரமமாய் .....


மானுடர் சக்கரமேறிப்போனதால்
நீ அக்கரையேறிப்போனாயோ .....

பறந்து செல்லும் சாலைவந்ததால்
நதியதை துறந்து சென்றாயோ ......

கரைந்தோடும் காலமது சில
வைரங்களையும்
தொலைத்துசொல்கிறது ....
புரண்டோடும் நீரதில் புகுந்து
விளையாடும் உனை தொலைத்ததும்
அதிலொன்று ......

ஒன்று இரண்டானாலும்
ஐந்து பத்தென்றாலும்
மெல்ல அமுங்கி அமுங்கி
மிதந்து சென்று கரைசேர்ப்பாயே .....

அக்கரை பச்சையென
எக்கரைகண்டு மயங்கிசென்றாயோ.....
இக்கரை வறண்டதென
நீர்க்கரை தவிர்த்துச்சென்றாயோ ......
அக்கறையில்லா நிலைகண்டு
கொப்பறையென கவிழ்ந்தாயோ ......
இனிதேவை இராது என
சுயஓய்வு வாங்கி பிரிந்தாயோ .....

எங்கே படுத்துறங்குகிறாய்
பரிசலே .....

எழுந்து வா .....

எம் தலைமுறையது காணாமல்
எமக்கு காட்சிதனை தராமல்
எங்கே உறங்குகிறாய் .....

எழுதியவர் : என்.கே.ராஜ் (24-Apr-21, 8:58 pm)
சேர்த்தது : Raj NK
பார்வை : 103

மேலே