கோடி இருப்பினும் ஈவில்லார் இல்லாரே - கொடை, தருமதீபிகை 817

நேரிசை வெண்பா

பேடியரும் வீரர் பெயரா திறந்தக்கால்
ஓடினரேல் வீரருமோர் பேடியரே - கோடி
இருப்பினும் ஈவில்லார் இல்லாரே என்றும்
இருப்பவரே ஈவார் இவண்! 817

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மீண்டு திரும்பாமல் போரில் மூண்டு இறந்தால் பேடியரும் வீரராய் விளங்கி நிற்கின்றார், புறங்காட்டி ஓடினால் வீரரும் பேடிகளாயிழிந்து படுகின்றார்; கோடி பொருள் இருந்தாலும் ஈதல் இல்லார் யாதும் இல்லாதவரா யிழிகின்றார், ஈபவர் எல்லாம் உடையராய் யாண்டும் உயர்ந்து திகழ்கின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்!

செய்யும் செயல்களைக் கொண்டே மனிதனை வையம் அறிந்து வருகிறது. பேச்சும் செயலும் ஒருவனை நிறைதூக்கிக் காட்டுமாயினும் முன்னதினும் பின்னதே உண்மையான கருவியாம். சிலர் ஆரவாரமாய்ப் பேசுவர்; அவருடைய பேச்சைக் கேட்டபோது அவரைப் பெரிய கரும விரர் என்று பிறர் கருத நேர்வர்; காரியம் நேரும் போது யாதும் செய்யாமல் அயலே அவர் ஒதுங்கி விடுவர். காரியவாதிகள் வீரியம் பேசார்,

'பெரும் பேச்சு வெறும் வீச்சு” என்பது பழமொழி.

பகட்டான வார்த்தைகளைக் கொண்டு மனிதனை மதிப்பது மடமையாம் என இது காட்டியுள்ளது. அறிவுநலம் சுரந்து கருமமே கண்ணாயிருப்பவர் வீணாக எதையும் விரித்துப் பேச மாட்டார். செயல் விளைந்து வரச் சீர்த்தி விரிந்து வருகிறது.

சொல் சுருங்கிப் பயனோடு வரும்பொழுது அந்த மனிதன் நயனுடையனாய் உயர்ந்து வருகிறான். உள்ளப் பண்பை உரை உணர்த்தி வருகிறது. நீர்மையான மொழியாளன் சீர்மையாளனாய்ச் சிறந்து திகழ்கின்றான். வாய் வளர நோய் வளருகின்றது.

Men of few words are the best men. - Shakespeare

'சுருங்கிய சொல்லாளர் சிறந்த மனிதராகின்றார்’ என்னும் இது இங்கே அறிய வுரியது. வீண் வார்த்தை பேசாமல் சாரமாய்க் காரியம் செய்பவனே யாண்டும் சதுரன் ஆகின்றான்.

ஒரு ஊரில் வாலையன் என்று ஒரு சிறுவன் இருந்தான். யாரிடமும் அதிகம் பேசாமல் அமைதியாய் ஒதுங்கி வாழ்ந்தான். அவனை யாரும் மதிக்கவில்லை. அதே நகரில் காளிங்கன் என்னும் வாலிபன் மிகவும் ஆடம்பரமாய் வாழ்ந்து வந்தான்; சிலம்பம், கத்தி வீச்சு முதலிய படைக்கலங்களைப் பழகிப் பெரிய பலசாலியாய் விளங்கியிருந்தான். போர் வீரங்களைக் குறித்து ஆரவாரமாய் அவன் பேசுவது வழக்கமாதலால் யாவரும் அவனைப் பெரிய சுத்த வீரன் என்று புகழ்ந்த மிகவும் போற்றி வந்தார்.

நாட்டில் போர் மூண்டது. அரசனுக்கு உதவியாக ஊர்கள் தோறுமிருந்து வாலிபர்கள் போருக்குப் போனார்கள். அந்தப் படையில் மேலே குறித்த இருவரும் சேர்ந்து சென்றார். சமர் கடுமையாய் மூண்டது. இருதிறப் படைகளும் கைகலந்து பொருதின, அதில் வாலையன் முனைத்து பொருதி எதிரிகள் பலரை வென்று சில யானைகளையும் எறிந்து கொன்று முடிவில் இறந்தான்; காளிங்கன் சில காயங்களோடு உயிர் தப்பி வெளியே ஓடிப் போனான். செருமுகத்தில் மாண்டு மடிந்த அந்த வீர மகனைப் பெற்ற தாய் மிகவும் வயது முதிர்ந்த கிழவி; தன் மகன் போரில் இறந்து பட்டதை அறிந்ததும் அவள் கண்ணிர் சொரிந்து கரைந்து அழுதாள். தனது மகனுடைய போர் வீரத்தை வியந்து ஊரும் உலகமும் புகழ்ந்து பேசுவதைக் கேட்டு உள்ளம் உவந்தாள் ஆயினும் பிள்ளைப் பாசத்தால் பேதுற்று மறுகினாள். அரசன் அவளைத் தனது அரண்மனைக்கு அழைத்து ஆகாவு செய்து ஆற்றித் தேற்றினான். வீர மகனைப் பெற்றவள் வியன் பேர் பெற்றாள் சரித திகழ்ச்சியை அயலே காண வருகிறோம்.

மீனுண் கொக்கின் தூவி அன்ன
வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறெறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே - புறநானூறு

கொக்கின் தூவிபோல் வெள்ளையாய் நரைத்த கூந்தலையுடைய அக்கிழவி தன்மகன் இறந்தமைக்கு மறுகி அழுத வகையும், அவன் போரில் வீர வெற்றியோடு மாண்டதை நினைந்து மகிழ்ந்த நிலையும், அரிய வீரமும் இதனால் நேரே தெரிய வந்தன.

வீரன் போல் ஆரவாரமாய்ப் பிலுக்கி நின்றவன் போரில் ஓடிப் போனமையால் பேடி என்.று இகழப்பட்டான்; யாதொரு ஆடம்பரமுமின்றி அமைதியாயிருந்தவன் அமரில் அதிசயமாய் மாண்டமையால் வெற்றி வீரன் என வியன் பெயர் பெற்றான். வீர வாலையன் என ஒருகல்லில் எழுதி நல்ல ஒரு இடத்தில் நட்டு ஊரார் யாவரும் அவனை உரிமையோடு வழிபட்டு வரலாயினர்.

ஒருவனிடம் பெரும் பொருள் நிறைந்திருந்தாலும் அவன் ஈயாத உலோபியாயின் யாதுமில்லாத ஏழையினும் இழிவாய் எள்ளி இகழப்படுகின்றான். ஈகையாளனை எவ்வழியும் உலகம் ஏத்தி வருகிறது. உபகாரி உயர் மகிமையாய் ஒளிபெறுகின்றான்.

இன்னிசை வெண்பா

எறிநீர்ப் பெருங்கடல் எய்தி யிருந்தும்
அறுநீர்ச் சிறுகிணற் றூறல்பார்த் துண்பர்
மறுமை யறியாதா ராக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை! 275 ஈயாமை,.நாலடியார்

கடல்நீர் போல் செல்வம் பெருகியிருந்தாலும் உலோபி யாதும் உதவானாதலால் அவன் கடையாயிழிந்து படுவன்; ஈகையாளன் வறுமையுறினும் ஊற்றுநீர் போல் எவர்க்கும் இனிது உதவுவன்; ஆகவே அவனை உலகம் போற்றி வாழ்த்தி வரும் என இது உணர்த்தியுளது. ஈகையுடையான் சீவ கோடிகளுக்கு இனிய அமுதமாய் இதம் புரிகிறான், ஈயாதவன் ஈனமாயிழித்து கழிகிறான் என்பது இங்கே தெளிய நேர்ந்தது.

‘ஈவாரே என்றும் இருப்பவர்’ என்றது கொடையாளிகள் சிரஞ்சீவிகளாய்ப் புகழோங்கி நிலைத்து நிற்கும் நிலை தெரிய வந்தது.

இன்னிசை வெண்பா

பாரி ததீசி பலிகன்ன னாதியோர்
ஓரி னிணையில் வணிகம் உஞற்றினார்
நீரி னெழுத்தேர் நிலையாப் பொருள்கொடீஇப்
பேரா நிலைப்புகழ் பெற்று. 65

- ஈகை, இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார்

மாவலி, கன்னன், ததீசி, பாரி முதலாயினோர் கொடையால் நிலைபெற்ற புகழோடு நிலவி நிற்கும் நிலையை இது சுவையாய் விளக்கியுள்ளது. நிலையாத பொருளைக் கொடுத்து என்றும் நிலையான புகழைப் பெற்றுக் கொண்டாராதலால் யாரும் இணையில்லாத அதிசய வணிகர் என இவ்வாறு கவி துதிசெய்து கூறினார். தந்தவன் தரணி ஆள வந்தவன் எனப்படுகிறது.

பிறர்க்கு உரிமையோடு உதவிபுரிவதால் உனக்குப் புகழும் புண்ணியமும் வருகின்றன; இம்மையும் மறுமையும் பெருமை ஆகின்றன; ஆதலால் ஈதலை இனிது பேணி இசையும் இன்பமும் பெறுக. மன்னுயிர்க்கு இதம் செய்து வாழ்வதே மகிமையாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-May-21, 12:22 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே