குலவீரர் வென்றி விழைவார் வினை - வீரம், தருமதீபிகை 808

நேரிசை வெண்பா

ஊனழிய நேர்ந்தாலும் உள்ளழியார் எவ்வழியும்
கோனலமே நாடிக் குறிக்கொள்வார் - மானநலம்
குன்ற வருவ குறியார் குலவீரர்
வென்றி விழைவார் வினை. 808

- வீரம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த குல வீரர் உடலழிய நேர்ந்தாலும் உள்ளம் கலங்கார்; எவ்வழியும் தம் அரசனுக்கு நன்மைகளையே நாடி நிற்பர்; மான நலங்களை மகிமையோடு பேணி வருவர்; ஈனங்களை எண்ணார்; என்றும் வெற்றியே விழைந்து விளங்குவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். புனித நிலைகள் தனி வீரங்கள் ஆகின்றன. .

உண்மையான வீரக்குடியில் பிறந்தவர் எவ்வழியும் திண்மையாளராய்ச் சிறந்து திகழ்கின்றார். நேர்மையும் மானமும் அவரிடம் சீர்மையாய் நிலைத்திருத்தலால் கீழ்மை யாதும் நேராமல் யாண்டும் மேன்மையாகவே விளங்கி நிற்கின்றார். உயர்நிலைகள் யாவும் உயர்ந்த நீர்மைகளால் அமைந்து வருகின்றன. நல்ல பண்புகளால் உள்ளம் உயர்ந்த போது அந்த மனிதனை எல்லாரும் உவந்து போற்றுகின்றார். அவனுடைய பெயரும் புகழும் உலகத்தில் ஓங்கி எங்கும் ஒளி விசி உலாவுகின்றன.

ஈன்ற தாய் தந்தையர் தனக்கு உரிமையாய் இட்ட பெயரை உலகம் உவந்து பேசும்படி எந்த மகன் செய்து வருகிறானோ அந்த மகனே மகான் ஆகின்றான்; அவன் தோற்றமே ஏற்றம் பெறுகின்றது; அவனே தோன்றல் என்னும் ஆன்ற மேன்மையை அடைந்து நிற்கின்றான். அங்ஙனம்.அடையாதவன் தோற்றம் கடையாகின்றது. தோன்றலாய்த் தோன்றாதவன் தோன்றாமல் தொலைவதே நல்லது என்று தேவர் உள்ளம் வருந்தி உரைத்திருத்தலால் பிறந்த மனிதன் பெரிய மகிமையோடு பெருகி வரவேண்டுமென அவர் உருகி விழைந்துள்ளமை தெரிய வந்தது.

வீரம், கொடை, ஞானங்களைத் தழுவி நின்றவரே விழுமிய மேலோராய் விளங்கியுள்ளனர். அவருடைய உருவங்கள் மறைந்து போனாலும் பெயர்களை விழைந்து கூறி மாந்தர் மகிழ்ந்து வருகின்றனர். வழி முறையே வழங்கி வருதலால் அவை யாதும் அழியாமல் ஒளி வீசி என்றும் விளங்கி நிற்கின்றன. தோன்றிய யாவும் நிலையின்றி அழிகின்ற உலகிலே ஆன்ற மேலோர் பெயர் யாண்டும் அழிவின்றி நிலைத்து நிற்பது அதிசய வியப்பை விளைத்து வருகிறது. சத்து நித்தியமாய் நிலவுகிறது.

Strong towers decay,
But a great name shall never pass away. - Benjamin

’வலிய நெடிய கோபுரங்கள் அழிந்து போகின்றன; பெரியோர் பெயர் என்றும் அழியாமல் உள்ளது’ என்னும் இது இங்கே அறியவுரியது. புகழ் பெற்ற பெயர் உயர்வுற்றுளது.

இவ்வாறு நிலையான பேராளரே தலையான சீராளராய் நிலவுகின்றனர். சிறந்த பேர் பிறந்த பேறாய் நின்றது. அரிய காரியங்களை ஆற்றுவோரே உரிய பேர்களையும் பெரிய சீர்களையும் அடைந்து உலகம் போற்ற ஒளி மிகுந்து நிற்கின்றனர்.

நாகன் என்பவன் சிறந்த போர் விரன். உயர்ந்த குண நலங்கள் அமைந்தவன். பாண்டிய மன்னனிடம் படைத்தலைவனாய் இருந்தான். அவ்வேந்தனிடம் பேரன்புடையவன்; எவ்வழியும் செவ்வியனாய் யாண்டும் மாறாமல் அம்மன்னனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான். இவனுடைய வீரம், நேர்மை, ஈகை முதலிய நீர்மைகளை வியந்து யாவரும் புகழ்ந்தனர். வடநெடுந் தத்தனார் என்னும் சங்கப் புலவர் இவனை உவந்து பாடினார். குணநலங்கள் மணந்த அப்பாடல் அயலே வருகிறது.

நேரிசை ஆசிரியப்பா

ஞால மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தவென் னிரவன் மண்டை
மலர்ப்போர் யாரென வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
5 திருவீழ் நுண்பூட் பாண்டியன் மறவன்
படைவேண்டுவழி வாளுதவியும்
வினைவேண்டுவழி யறிவுதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் றேஎத்
தசைநுகம் படாஅ வாண்டகை யுள்ளத்துத்
10 தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவே னாகற் கூறினர் பலரே. 179 புறநானூறு

இவனுடைய அறிவு, வீரம், கொடை, நடை முதலிய நிலைகளை இதனால் அறிந்து கொள்ளுகிறோம், தன் அரசனுக்கு நன்மையை நாடி யாண்டும் உண்மையாளனாய் ஒழுகி வன்மையான பகைவரைப் பொருது தொலைத்து யாவருக்கும் உதவி புரிந்து வந்தமையால் இவனுடைய பேரும் சீரும் பாரெங்கும் பரந்து நின்றன. இனிய உதவி நிலை பெரிய புகழாய் வருகிறது.

‘குன்ற வருவ குறியார்’ என்றது குல வீரர்களுடைய குறி தெரிய வந்தது. குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர்' (குறள் 954) என்றார் தேவர். சிறந்த குடியில் பிறந்து உயர்ந்த படிகளில் பழகி வருபவர் இழிந்த நிலைகளை நாணி ஒதுங்குவராதலால் அவர் யாண்டும் விழுமியோராய் விளங்கி வருகின்றார். ஈனங்களை நாணுவோரே மான வீரராய் மாண்புறுகின்றனர்.

The more things a man is ashamed of,
the more respectable he is. - Bernard Shaw

‘இழிந்த கருமங்களை எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவன் நாணுகின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு அவன் உயர்ந்த மதிப்பை அடைகிறான்’ என்னும் இது இங்கே சிந்திக்கத் தக்கது.

புனிதமான நல்ல பான்மைகள் மனிதனை மேன்மை ஆக்கித் தனி நிலையில் உயர்த்துகின்றன. இனிய குண நீர்மைகள் தோய்ந்த போது அந்த உள்ளத்தில் தீரமும் வீரமும் சேர்ந்து வளர்கின்றன. தூய்மை மருவிய அளவு மேன்மைகள் விரிகின்றன.

நெஞ்சம் சுத்தமுடையவன் யாருக்கும் அஞ்ச வேண்டியதில்லை; எல்லா ஆற்றல்களும் அவனிடம் தஞ்சமாய் வந்து சேர்கின்றன. இழிவு படியாமல் இருந்து வருபவன் விழுமிய வீரனாய் விளங்கி வருகிறான். உள்ளம் தெளிந்து உயர் வீரன் ஆகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-21, 9:20 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே