ஈந்துவந்தார் இருமையிலும் பேரின்பம் சேர்ந்துவந்தார் ஆவர் சிறந்து - கொடை, தருமதீபிகை 818

நேரிசை வெண்பா
(‘ர்’ ஆசிடையிட்ட எதுகை)

வாரி கடந்து வருந்தித் தொகுத்தெவர்க்கும்
மாரியென நின்று மனமிரங்கிப் - பாரிலென்றும்
ஈந்துவந்தார் அன்றே இருமையிலும் பேரின்பம்
சே’ர்’ந்துவந்தார் ஆவர் சிறந்து! 818

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

கடல் கடந்து சென்று உடல் வருந்தி உழைத்துப் பொருளைத் தொகுத்து எவர்க்கும் உளமிரங்கி மாரிபோல் ஈந்து வந்தவரே உலகில் உயர்ந்து நின்றார்; இம்மை மறுமை என்னும் இருமையிலும் பேரின்பமுடையராய் அவர் பெருகியுள்ளார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அரிதின் முயன்று அரும்பொருள் ஈட்டிப் பெரிதும் ஈந்து பெரும்புகழ் நாட்டிப் பேரின்பம் காணுக என இப்பாடல் காட்டியுளது. சிறந்த பிறவி பெற்ற பயன் சீவர்களுக்கு இரங்குவதே;

உலக வாழ்வு பொருளால் நடந்து வருதலால் அதனை யாவரும் ஆவலோடு தேட நேர்ந்தனர். தேடுகின்ற வழிகளும் துறைகளும் பாடுகளும் பலவாய் விரிந்தன. பிறந்த நாட்டில் பெரும் பொருளை ஈட்ட இயலவில்லையானால் அயல் நாடுகளை நோக்கித் தேட்டாளர் திரண்டு செல்வது இயல்பாய் அமைந்தது.

அவ்வாறு செல்லுங்கால் இடையே தடையாயுள்ள காடு மலை கடல்களைக் கடந்து போக மூண்டார். கலம் ஏறிக் கடல் கடப்பது பொருள் நாட்டம் உடையார்க்குத் தலைமையாயுள்ளமையால் வாரி கடந்து என்பது முதன்மையாய் வந்தது.

பல நதிகளிலுமிருந்து வந்து பாய்கின்ற நீரையெல்லாம் வாரி வைத்துக் கொண்டு ஆழ்ந்து பரந்து நீண்டு நிறைந்துள்ளமையால் கடலுக்கு வாரி என்று ஒரு பெயரும் வந்தது. பொருள் வாரி வர இருள் வாரி ஏறினான் என ஈட்டம் கருதிக் கப்பலேறிப் போன ஒருவனைக் குறித்து இப்படி உரைத்திருக்கின்றார்.

இருள் வாரி - கருங்கடல். திரை வரை நீந்தல் பொருளை ஓர்ந்தே. 'திரை கடல் ஒடியும் திரவியம் தேடு' என்று ஒளவையார் இவ்வாறு வருவாய்க்குத் துறைவாய்க் கூறியிருத்தலால் பொருள் ஈட்டத்துக்கும் கடல் ஓட்டத்துக்கும் உள்ள உறவுரிமை உணரலாகும். செழித்த நாட்டை நோக்கிச் செல்வம் ஈட்டச் செல்கிறார்.

பிரிய முடியாத பிரிய மனைவியையும் பிரிந்து பொருளை நாடி மனிதன் அயலே போதலால் அதன் மேலுள்ள ஆசையும் பாசமும் அறிய வந்தன. பெண்ணினும் பொன் மேல் ஆவலாயது.

புதிதாய் மணம்புரிந்த ஒரு மணமகன் தனது அருமை மனைவியோடு உரிமையாய் உரையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது பொருளின் பெருமையைக் குறித்துப் புகழ்ந்து பேச நேர்ந்தது. வாரி கடந்து போபவர் பொருளை வாரி வருகின்றார் என்று உல்லாச வினோதமாய்க் கூறினான். அவ்வுரையைக் கேட்டதும் தனது நாயகன் தன்னைத் தனியே விட்டுப் பிரிந்து போய் விடுவாரோ? என்று அவள் மறுகி மயங்கினாள். அவளது மயக்கத்தை நீக்கி அவன் ஆற்றித் தேற்றினான். அந்த இனிய நிகழ்ச்சியை அயலே வரும் கவி சுவையாய்க் காட்டியுள்ளது.

கட்டளைக் கலித்துறை

திரைகடல் ஓடித் திரவியம் தேடென்று செப்புமௌவை
உரைபழு தன்றெனச் சோர்ந்தாள் கழுக்குன்றத்(து) ஓர்மடமான்
அரைபனி நீர்ச்சந் தனம்கொண்டு பாங்கியர் ஆற்றியபின்
இரைகடல் போய்வர எத்தனை நாளென்(று) எழுந்தனளே. - திருக்கழுக்குன்றக் கோவை
189
கடல் கடந்து போயேனும் திரவியம் தேடுவது நல்லது என்று காதலன் சொல்லவே ’இவரும் பிரிந்து போவாரோ?' என்று காதலி பரிந்து வீழ்ந்தாள், தோழியர் தேற்றவே எழுந்தாள்; கடல் போய் மீண்டுவர இத்தனை நாளா? என்று பேராவலோடு கணவனைத் தழுவிக் கொண்டாள். உழுவலன்பை விழுமிய நிலையில் விளக்கியுள்ள இது பொருள் நிலையையும் நயமாய் உணர்த்தியுளது. மனித வாழ்வின் மருமங்கள் தெரிய வந்தன.

அறமும் புகழும் இன்பமும் அதனால் அடையலாம் என்று கருதியே இனிய மனைவியையும் பிரிந்துபோய் வருந்தி நின்று பொருளைத் தேடுவது ஆகும். வளங்கொளப் போவது உளங்கொள வந்தது.

தாங்கள் மாத்திரம் சுகமாய் அனுபவிக்க வேண்டும் என்று மேலோர் கருதார்; பிறர்க்கு உபகரிப்பதையே முதன்மையாய் எண்ணுவர். உபகார நீர்மை உயர் பெருந்தகைமையாய் ஒளி மிகுந்து மிளிர்கிறது. சுயநலம் இயல்பாகவே மனிதனோடு மருவியுளது; அதனைக் கடத்து அயலார்க்கு உதவி செய்ய நேர்ந்தபோது அவன் உயர்ந்தவனாய் விளங்கி ஒளிமிகப் பெறுகின்றான்.

தன்னைச் சூழ்ந்துள்ள மன்னுயிர்களிடம் எவன் அன்பும் ஆதரவும் புரிந்து வருகிறானோ அந்த மனிதனுடைய வாழ்வு பண்பும் பயனும் சுரந்து உயர்ந்து வருகிறது. பிறர் இன்புற அன்பு புரிவது பெருமேன்மையாப்ப் பெருகி எழுகிறது. உள்ளம் கனிந்த உபகார நிலை உம்பரையும் இம்பரையும் ஒருங்கே இன்புறச் செய்கிறது அந்தப் பெருந்தகையால் உலகம் உயர்கிறது.

உண்டா லம்மவிவ் வுலக மிந்திரர்
அமிழ்த மியைவ தாயினு மினிதெனத்
தமிய ருண்டலு மிலரே முனிவிலர்
துஞ்சலு மிலர்பிற ரஞ்சுவ தஞ்சிப்
5 புகழெனி னுயிருங் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினுங் கொள்ளல ரயர்விலர்
அன்ன மாட்சி யனைய ராகித்
தமக்கென முயலா நோன்றாட்
பிறர்க்கென முயலுந ருண்மை யானே! 182 புறநானூறு


சிறந்த பண்பாடுகள் நிறைந்த உயர்ந்த மேலோர்களின் நிலையை இது உணர்த்தியுள்ளது. எவ்வழியும் செவ்வையான இனிய நீர்மைகளோடு வாழ வேண்டும் என மனித சமுதாயத்துக்கு ஒரு போதனையை இளம்பெருவழுதி என்னும் மன்னன் இன்னவாறு உளம் கனிந்து நன்னயமாய் வரைந்து மொழிந்துள்ளான்.

அரிய தெய்வ அமுதம் பெறினும் தனியே உண்ணாதே; பிறர்க்குப் பகிர்ந்து கொடு; முனிவின்றி இனியனாய் நில்; பிறரது துயரை நீக்க ஆனவரையும் அவர்க்கு உதவி செய்; புகழை விரைந்து தேடு; பழியை இகழ்ந்து விடு; அயர்வு நீங்கி உயர்வில் ஓங்குக; தனக்கென்று குறுகிய நோக்கோடு முயலாமல் பிறர் நலமுறப் பேணி முயன்று பெருகி வாழ்; இவ்வாறு வாழின் நீ புண்ணிய மூர்த்தியாய்ப் பொலிந்து விண்ணும் மண்ணும் வியந்து போற்ற விளங்குவாய்! என்று விளக்கியிருக்கும் இக்கவியின் சுவையைக் கருதியுணர்ந்து உளங்கொண்டு நுகர்ந்து உறுதியோடு ஒழுகிவரின் விழுமிய மேன்மைகள் கெழுமி வரும்.

வானம் கைம்மாறு கருதாமல் உலகிற்கு மழையைப் பொழிகிறது; அதுபோல் உதவி புரிபவர் வானவராய் உயர்ந்து திகழ்கின்றார். செய்யும் இதம் தெய்வ அமுதமாய் உய்தி புரிகிறது.

ஈகையால் உயிர்கள் உவகையுறுகின்றன; சீவர்களுடைய அந்த உள்ளக் களிப்பு கருமமாய்ப் பெருகி ஈந்தவனை நோக்கி வர இருமையினும் இன்பமூர்த்தியாய் அவன் மருவி மகிழ்கின்றான். அரிய சுகம் இனிய உதவியில் விளைகிறது.

ஈந்து வந்தார் பேரின்பம் சேர்ந்து உவந்தார் என்றது ஈகையால் விளையும் மகிமை மாண்புகளையும் இன்ப நிலைகளையும் ஒருங்கே ஓர்ந்துணர்ந்து கொள்ள வந்தது. பிறர் உவந்து வர ஓம்பி வருபவன் உயர்ந்த பதவியை விரைந்து அடைந்து கொள்கிறான். துயர் நீங்க உதவுதலால் உயிர் ஓங்கி உயர்கிறது

நேரிசை வெண்பா

இரங்கி உதவின் இமையோர் இறங்கி
வரம்பெற வைப்பர் வளமாய் - உரம்பெற்றும்
ஈயா தொழியின் இருமை எதிரிழந்து
பேயா யிழிவர் பிறழ்ந்து.

கருணையோடு உயிர்களைப் பேணிச் சாதுக்களுக்கு உண்டி கொடுத்துவரின் அந்த உபகாரியைத் தேவர்கள் கண்டு மகிழ்கின்றார்; சுவர்க்கக்கின் கதவு அவர்க்கு நன்கு திறந்திருக்கிறது.

உள்ளம் இரங்கி உயிர்களை ஓம்பி உதவி புரிந்து பெருந்தன்மையோடு வாழுக; அந்த வாழ்வு புகழும் புண்ணியமும் பொலிந்து உனக்குப் பேரின்ப வெள்ளமாய் விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (4-May-21, 10:55 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

சிறந்த கட்டுரைகள்

மேலே