இரந்துவந்தார்க்கு ஏதேனும் இன்சொல்லோடு ஈக - கொடை, தருமதீபிகை 819

நேரிசை வெண்பா

இரந்துவந்தார்க்(கு) ஏதேனும் இன்சொல்லோ(டு) ஈக;
கரந்தொழிதல் அந்தோ கறையாம் - புரந்தருளும்
மாதவனும் மண்ணிரந்தான் மாவலியன்(று) எண்ணியதென்
ஈதலதைச் செய்க இனிது! 819

- கொடை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உன்பால் இரந்து வந்தவர்க்கு அன்போடு இன் சொல்ஆடி ஏதேனும் கொடுத்து அருளுக கொடாமல் மறுத்தால் அது கொடிய பழியாம்; எல்லா வுயிர்களையும் பாதுகாத்து வருகிற திருமாலும் மாவலியிடம் வந்து யாசித்து நின்றான்; அந்த நிலையை உணர்ந்து யாருக்கும் உவந்து உதவி உயர்ந்து கொள்ளுக. தருவது எதுவோ அது உயர்வாய் உன்பால் வருவது என்கிறார் கவிராஜ பண்டிதர். அந்தோ! என்றது கரத்தலின் கொடுமையை உணர்த்தியது.

இனிய போகங்களை நுகர்ந்து சுகமாய் வாழ வேண்டும் என்றே மனிதன் பொருளை ஈட்டுகிறான். அவ்வாறு ஈட்டிய பொருளைத் தன் அளவில் வைத்துக் கொள்பவன் சின்னவனாயிழிகின்றான்; உலோபி, வன்கண்ணன் என்று பிறரால் பழிக்கப் படுகின்றான். நல்ல வழியில் பயன்படாமையால் அவனுடைய செல்வமும் பொல்லாத பழியில் எள்ளி இகழப் படுகிறது.

அற்றார்க்கொன்(று) ஆற்றாதான் செல்வம் மிகுநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று! 1007 நன்றியில் செல்வம்

வறியவர்க்குக் கொடாதவனது செல்வம் அழகிய மங்கை மணமாகாமல் தனியே தவித்திருந்து வீணே மூத்து விளிந்தது போலாம் என வள்ளுவர் இங்ஙனம் குறித்துள்ளார். உலோபி பொருள் அனாதையான ஒரு குமரிக்கு உவமையாய் வந்தது. தருண மங்கையை உரிய பருவத்தில் ஒருவனுக்கு மணம் முடித்துத் தந்தால் இருவரும் ஒருங்கே இன்புறுகின்றனர்; மக்கட்பேறும் உண்டாகிறது; பெற்ற பொருளைப் பாத்திரம் அறிந்து வறியவருக்கு உரிமையோடு கொடுத்தால் அவர் மகிழ்ந்து கொள்கின்றார், பொருளும் மணமாய்ப் பயன் அடைகிறது; கொடுத்தவனுக்குப் புண்ணியமும் உண்டாகிறது. ஆகவே ஈகையின் இன்ப நலங்கள் இங்கே நன்கு தெளிவாகின்றன; ஈயாத உலோபி இவ்வளவு பலன்களையும் ஒருங்கே இழந்து விடுகிறான். பொருளை அழகிய குமரியோடு ஒப்புக் கூறி வைத்துள்ள இதில் மருமமாய் மருவியிருக்கும் அரிய நுட்பங்களை உய்த்துணர வேண்டும்.

பொருளால் அடையவுரிய பயன் இரண்டு; அவை எவை? அனுபவித்தல், ஈதல்; முன்னது உடலை வளர்த்து ஊனமாய் ஒழிகிறது; பின்னது உயிரை வளர்த்து ஒளி செய்து வருகிறது. தன்னலம் பேணித் தானே உண்ணுகிறவன் பேரும் சீரும் இழந்து விரைந்து மறைந்து போகிறான்; பிறர்க்கு உதவுகிற உபகாரி பெரும் புகழோடு உயர்ந்து சிறந்து விளங்குகிறான்.

கொடையினாலேயே மனிதனுடைய தரமும் மதிப்பும் நன்கு தெரிய வருகின்றன. தான் உண்ணுமுன் அயலுக்கு ஊட்ட விரும்புகிறவன் உயர்குல மனிதனாய் ஒளிபெற்று நிற்கிறான். செயல் இதமாய் வர சீர்மை நலமாய் வருகிறது.

பகுத்துண்ணும் இயல்பினால் காக்கையும் உயர்ந்தது; அங்ஙனம் உண்ணாத சிறுமையால் நாய் எள்ளி இகழப்பட்டது. பறவையும், விலங்கும் ஈகை, ஈயாமைகளின் உயர்வு, இழிவுகளை முறையே உணர்த்தி மனித இனத்துக்கு மதியூட்டியுள்ளன.

நேரிசை வெண்பா

பகுந்துண்ணும் பான்மையால் காக்கையை ஞாலம்
மிகுந்த மகிழ்வோடு பேணும் – இகந்தயலை
எள்ளி விழுங்கும் இயல்பினால் நாய்எங்கும்
எள்ளல் அடைந்த(து) இழிந்து! - கவிராஜ பண்டிதர்

கரவாமல் கரைந்து உண்ணும் நீர்மையால் காக்கையை உவந்தழைத்து முன்னதாக அதற்கு உலகம் உணவு ஊட்டுகிறது; இதனை உணர்ந்தாவது பகுத்தறிவுடைய மனிதன் பகுத்துண்ண வேண்டும். அவ்வுணவு தெய்வ மணமாம்.

இன்னிசை வெண்பா

பண்புபல பெற்றுமினம் பேணாப் பரிசினாய்
புண்படூஉங் காக்கைபல பொல்லாக் குணம்பெற்றும்
உண்ப விளித்துதவும் ஆற்றின் உயர்வுறூஉம்
எண்பெறார் பாத்தூண் இலார்! 64 ஈகை, இன்னிசை இருநூறு, அரசஞ் சண்முகனார்

ஈயாதவர் இழிவுறுவர் என்பதை நாய் வாழ்வு நன்கு விளக்கியுள்ளது. தாம் உண்ணுவதை விடப் பிறர்க்கு ஊட்டுவதையே மேலாக எண்ணி மேலோர் பொருள் ஈட்ட முயல்வர்.

இல்என, இரந்தோர்க்(கு)ஒன்(று) ஈயாமை இழிவென,
கல்இறந்து செயல்சூழ்ந்த பொருள் - கலித்தொகை 2

காடு மலைகளைக் கடந்து போய் வருந்திப் பொருள் ஈட்டி வருவது எளியவர்க்கு ஈயவேயாம் என ஒரு குலமகன் கருதி யிருப்பதை இது காட்டியுள்ளது; பிறர்க்கு உதவி புரிய எண்ணுகிறவன் புண்ணிய நீரனாய்ப் பொலிந்து உயர்ந்து திகழ்கிறான்.

சிறந்த புகழையும் உயர்ந்த இன்பத்தையும் ஈகை தந்தருளுதலால் அதனை மேலோர் சாலவும் உவந்து புகழ்ந்து வருகின்றார்.

மாவலி பெரிய கொடை வள்ளல். பிரகலாதன் பேரன். உயர்ந்த சக்கரவர்த்தியாய் உலகம் முழுவதையும் ஒருங்கே ஆண்டு வந்தான்; இவனுடைய ஈகை நிலையை வியந்த திருமால் ஒரு வாமனனாய் வந்து இவனிடம் மூவடி மண் தானம் கேட்டான். இவன் உவந்து தந்தான்; அவ்வாறு தருங்கால் மந்திரியும் குருவுமாயிருந்த சுக்கிராச்சாரியார் தடுத்தார். அரசர் பெரும! வந்துள்ளவன் திருமால்; வானவர்க்காகத் தானம் கேட்க வந்திருக்கிறான்; தந்திரமாய் வஞ்சனை புரிய வந்திருத்தலால் நீ யாதும் தரவே கூடாது' என்று தடுத்து நிறுத்தினார். அடுத்து நின்ற அவர் தடுத்தபோது இவன்.அவரைக் கடுத்து மொழிந்து கருதியபடியே கொடுத்து மகிழ்ந்தான். உள்ளம் துணிந்து இவன். உரைத்த மொழிகளைக் கேட்டு மாலும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தார்.

கலிவிருத்தம்
(கூவிளம் தேமா கருவிளம் தேமா)

வெள்ளியை ஆதல் விளம்பினை மேலோர்
வள்ளியர் ஆகில் வழங்குவ(து) அல்லால்.
எள்ளுவ என்சி லயின்னுயி ரேனும்
கொள்ளுதல் தீது; கொடுப்பது நன்றால்! 29 வேள்விப் படலம், பால காண்டம், இராமாயணம்

கொடையில் மாவலி மன்னன் கொண்டுள்ள பிரியமும் உறுதியும் இவ்வுரைகளால் நன்கு தெரியலாம். இன்னுயிர் ஏனும் கொடுப்பது நன்று; கொள்ளுதல் தீது என்றதனால் இவனுடைய வண்மையும் திண்மையும் உண்மையும் உணர வந்தன. தன் கொடையால் என்றும் அழியாத புகழையும் அதிசய ஆனந்த நிலையையும் இவன் அடைந்து நின்றான். கொடையாளியிடம் தெய்வமும் நேரே வருகிறது; அவன் எதிரே தாழ்ந்து நிற்கிறது என்பதை இவன் சரிதம் ஒர்ந்துணர்ந்து கொள்ளச் செய்தது. ஈந்துயர்ந்து இருமையும் பெருமையாய் இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-May-21, 10:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 74

மேலே