புகலொல்லா நோலா உடம்பிற்கு அறிவு – நாலடியார் 258

இன்னிசை வெண்பா

பாலாற் கழீஇப் பலநாள் உணக்கினும்
வாலிதாம் பக்கம் இருந்தைக் கிருந்தன்று!
கோலாற் கடாஅய்க் குறினும் புகலொல்லா
நோலா உடம்பிற் கறிவு. 258

- அறிவின்மை, நாலடியார்

பொருளுரை:

பலநாள் பாலினாற் கழுவி உலர்த்தினாலும் கரிக்கு வெண்ணிறம் உடையதாகும் நிலைமை இல்லை; அவ்வாறே, கோலால் அதட்டிக் குத்திக் கூறினும் புண்ணியஞ் செய்யாத உடம்பில் அறிவு ஏறாது.

கருத்து: அறிவில்லார் புண்ணியமில்லாதவராதலின் அவர் திருந்துதல் அருமையாயிருக்கும்.

விளக்கம்: உவமையால் நன்முறையால் திருத்துதலும், பொருளால் அச்சுறுத்தித் திருத்தலும் பெறப்பட்டன.

இருந்தை என்பது கரி: இருமை கருமையாகலின் அப்பெயர் பெற்றது.

புகலொல்லா: ஒரு சொல், கல்வியறிவில்லாத மக்களின் இழிவு கருதி அவரை ‘நோலா உடம்பு' என்று விதந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-May-21, 3:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே