வசந்த காலத்தை வரவேற்போம்

வசந்த காலமும் வந்தாச்சு –மன
வாட்டமும் மறைந்து போயாச்சு!
கசத்தலும் கரைந்து சென்றாச்சு –வரும்
காலமும் நமக்கென ஆயாச்சு !

மலர்கள் பூத்திட அழகாச்சு –அது
மனதுக்கு இனிமை என்றாச்சு !
நிழலாய் மரங்கள் படர்ந்தாச்சு –அது
வெம்மை தணிக்கும் நிலையாச்சு !

மலர்கள் மலர்ந்து சிரித்திடவே –புது
மணமது வீசியே வந்தாச்சு !
புலரும் பொழுதும் நன்றாச்சு –பல
புதுமைகள் பிறந்திட அழகாச்சு !

ஊரினில் திருவிழா வந்தாச்சு –அது
உறவுகள் மகிழும் நிகழ்வாச்சு
தேரில் அம்மன் ஊர்வலமாம் –மனத்
தெளிவுக் கதுவே துணையாச்சு !

ஆட்டம் பாட்டம் கண்டிடலாம் –அதில்
ஆனந்தம் கோடி கொண்டிடலாம்
கூட்டம் அங்கே குவிந்தாச்சு –ஒரு
கொட்டி மேளமும் ஒலிச்சாச்சு !

வாட்டும் வெயிலும் துணையாச்சு –வரும்
வியர்வை நீரும் இணையாச்சு !
தீட்டிய அருவா எடுத்தாச்சு – குளிர்
தென்னம் இளநீர் குடிச்சாச்சு.

கோடையில் கிடைக்கும் பதநீரை– பனைப்
பட்டையில் ஊற்றி குடிச்சாச்சு !
தேடிய நுங்கினைத் தின்னாச்சு –புதுத்
தெம்புடன் நடையினைப் போட்டாச்சு !

வசந்த காலத்தை வரவேற்போம் –அதில்
வந்திடும் மகிழ்வினை ஏற்றிடுவோம்
இசைந்த பொழுதாய் போற்றிடுவோம் –ஒரு
இனிய வாழ்வினை வாழ்ந்திடுவோம் !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-May-21, 5:47 pm)
பார்வை : 121

மேலே