தென்பொதிகை

தென்மேற்குப் பருவக் காற்று
தென்றலென வீசு தன்றோ !
தென்பொதிகை மலையும் தாண்டி
தெம்மாங்கு பாடு தன்றோ !
இன்பசுகம் மொண்டு வந்து
இதயத்திலே ஊற்று தன்றோ !
பொன்வண்டாய் பறந்து செல்ல
புதுவழிகள் காட்டு தன்றோ !

வெண்மேகக் கூட்டம் வந்து
விண்முற்ற நிற்கு தன்றோ !
கண்டுவிட்ட மயிலின் கூட்டம்
கானகத்தில் ஆடு தன்றோ !
தண்ணென்று அருவி அங்கே
தாவிவந்து கொட்டு தன்றோ !
எண்ணமெல்லாம் மகிழ்ச்சி வெள்ளம்
எழுந்துவந்து நிறைக்கு தன்றோ !

விட்டுவிட்டு மழையும் அங்கே
விளையாடி பெய்யு தன்றோ !
பட்டுவிட்டால் மேனி எங்கும்
பனிப்பொழிவாய் குளிரு தன்றோ !
தொட்டசுகம் என்றும் நெஞ்சில்
தொடர்கதைபோல் நீளு மன்றோ !
மொட்டவிழும் மலரு மங்கே
மணம்பரப்பி மகிழு மன்றோ !

பசிபோக்க அணிலின் கூட்டம்
பழமரத்தைத் தேடு தன்றோ !
கசிந்துவிழும் தேனின் கூட்டை
குரங்குகளும் நாடு தன்றோ !
அசைந்தாடும் மூங்கில் எல்லாம்
இனியஇசை இசைக்கு தன்றோ !
வசியமென மனதை யெல்லாம்
வசமாக்கிக் கொள்ளு தன்றோ! ***********

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (17-May-21, 5:50 pm)
பார்வை : 88

மேலே