6ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் - 6
6 ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்


மனிதன் தனக்கு வரும் துன்பங்களைக் கண்டு கவலையுடன் இருந்து விடக்கூடாது. உலகில் கவலையே இல்லாதவர்கள் யார் என்று சிந்தித்துப் பார்த்தால், ஒன்று குழந்தை மற்றொருவன் பைத்தியகாரன். மனிதனுடைய அமைதிக்கு முதல் எதிரி இந்தக் கவலைகள்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கவலைகள் மனிதனின் வாழ்வை சீரழித்து உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்து விடும். எனவே மனிதன் தனக்கு வந்த துன்பங்களைப் பற்றி சிந்தித்து, அந்த துன்பத்திற்கு காரணம் என்ன எப்படி என்பதைக் கண்டறிந்து அதன் வழியே சென்று தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும். துன்பங்களுக்குக் காரணம் ஆசை என்று புத்தர் கூறியுள்ளார்.

ஆனால் மனிதனுடைய துன்பங்களுக்கு காரணம் அவனது கர்மவினைகள்தான் என்று இந்து மதம் கூறுகிறது. இதனை ‘தீதும் நன்றும் பிறர் தரா வராது’ என்று கூறியுள்ளனர். மனிதன் தான் செய்த கர்ம வினைகள் தீர்ந்தவுடன் அவனது கவலைகளும் அவனை விட்டுப் போய்விடும் என்றும் கூறுகிறது. கர்மவினைகள் தீரும்வரை கவலையில் மூழ்கி விடாமல் நீ பொறுமையுடன் இருக்கும்படி, ஞானிகள் சித்தர்கள் கூறியுள்ளனர். உனது துன்பங்களுக்கு காரணம் நீ செய்த கர்ம வினைகள்தான் காரணம் என்று அறிந்து தெளிவு பெற்று விட்டால், துன்பங்களைக் கண்டு நீங்கள் துவண்டு விட மாட்டீர்கள். மேலும் இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என்று மனதை பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். மனபக்குவம் பெறுவதற்கும் கவலைகளை மறந்து நாம் அமைதியுடன் வாழ்வதற்கும் ஆன்மிகம் வழி காட்டுகிறது.

இந்தப் பிரபஞ்சம் முழுதும் மின்காந்த அலைகளால் நிறைந்துள்ளது. வானொலி, தொலைபேசி, தொலைக்காட்சி , பூமிக்கும் விண்வெளிக்கலத்துக்கும் ஏற்பட்டுள்ள தொடர்புகள் எல்லாம் ஆகாயம் முழுதும் பரவியுள்ள மின்காந்த அலைகளினால் அவைகள் இயங்குகிறது. தொடர்பு சாதனைகள் மூலம் நாம் வாழ்வில் பல பயன்களைப் பெற்று வருகிறோம். அதேபோல் நமது மனதில் தோன்றும் எண்ண அலைகளும் பிரபஞ்சம் முழுதும் சுற்றிக் கொண்டே இருக்கிறது. நம் மனதில் ஏற்படும் எண்ண அலைகள் பிரபஞ்ச சக்தியுடன் கலந்து மீண்டும் நம்மிடம் வந்து அதற்குரிய பலன்களை கொடுக்கும்.

எனவே நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் நல்லவைகளாக இருந்தால் அந்த எண்ண அலைகள் நமக்கு நல்லது நடக்கும்படி செய்கிறது. நமது எண்ணங்கள் தீயவைகளாக இருந்தால் அவை பிரபஞ்ச சக்தியுடன் கலந்து சுவரில் அடித்துவிட்ட பந்துபோல் மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வடிவில் வந்து தாக்கித் துன்புறுத்துகிறது. இதனை வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். வினை என்றால் செயல் என்பதாகும். மனிதன் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டுமெனில் மனதில் அந்த செயலைப் பற்றி எண்ண வேண்டும். எண்ணியபிறகுதான் அது செயல் வடிவம் பெறுகிறது. மனிதனுக்கு ஏற்படும் இன்பங்கள் துன்பங்களுக்கு எல்லாம் அவன்தான் காரணம் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும் சோகங்களும் சுகங்களும் இருக்கின்றன. மனிதன் அறிந்தும் அறியாமல் எண்ணக்கூடிய தீய எண்ணங்களும், எண்ணியபடி தீய செயல்களைச் செய்வதாலும் அவன் துன்பங்களை அனுபவிக்கிறான். அவ்வாறு அவன் அடைந்த துன்பங்களினால் பெறப்பட்ட அனுபவங்கள் மூலம் கிடைத்த பாடங்கள் அவனை நல்லவழியில் நடத்திச் செல்கிறது. சாதுக்கள் ,ஆன்மீக அன்பர்கள் கூறும் அனுபவங்களை அறிந்தும், தன்னுடைய கீழான எண்ணங்களை செயல்களையெல்லாம் நீக்க வேண்டும். தனக்கும் பிறருக்கும் நன்மை தரக்கூடிய நல்ல எண்ணங்களையும் ஆன்மீகச் சிந்தனைகளையும் தன்னோட மனதில் நிரப்பிக் கொள்ள வேண்டும். மனிதன் தன்னோட மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்து செயல்படும்போது, மனதில் அமைதி தானாக வருவதை உணர்ந்து கொள்ளலாம். மனிதன் தன்னை நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கும் செயல்படுவதற்கும் மனிதர்களுக்கு மட்டுமே அத்தகைய ஆற்றல் உள்ளது. இதனை நாம் அனுபவங்களின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவனையும் அறியாமல் ஏதாவது ஒரு இலட்சியம் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. உயர்வான இலட்சியங்களை நமது புராண இதிகாசங்கள் உபநிடதங்கள் மூலம் அறிந்து கொள்வதோடு, இராமகிருஷ்ணர், விவேகானந்தர், சாரதாதேவி, வள்ளலார் போன்ற அவதார புருஷர்களின் அமுதமொழிகளை நமது மனதில் பதிய வைத்துகொள்ள வேண்டும். அதன் மூலம் உயர்வான இலட்சியங்களை வளர்த்து, மனதை தெளிந்த நீரோடையாக்க வேண்டும். தெளிந்த மனதில் துன்பத்தின் ரேகைகள் படிவதில்லை. நாம் விரும்பும் தேடும் அமைதி அப்போது தானே வரும்.

சில மனிதர்கள் ஏதோ ஒரு பொருளைத் தொலைத்துவிட்டு, என்ன பொருளைத் தொலைத்து விட்டோம் என்பதுகூடத் தெரியாமலே தேடிக் கொண்டே இருப்பார்கள். அவர்களிடம் கேட்டால் ‘என்ன தேடிக்கொண்டு இருக்கிறீர்கள்’ என்று கேட்டால். ‘ஏதோ என்னிடம் உள்ள ஒரு பொருளை மறந்து ஏதோ ஓரிடத்தில் வைத்து விட்டேன் அதனைத்தான் இப்போது தேடிக்கொண்டு இருக்கிறேன்’ என்று கூறுவார்கள். அவர்கள் கூறுவது வேண்டுமானால் பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் உலகில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் ஏதோ ஒரு பொருளை இலட்சியத்தை அவர்களையும் அறியாமலே தொலைத்துவிட்டு, அவர்களது மனமானது அறிந்தும் அறியாமல் உலகில் அதனைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் மனமும் இயல்பாகவே அமைதியைத் தேடிக் கொண்டுதான் இருக்கிறது. தேடுவது கிடைத்து விட்டால் அவர்கள் மனது அமைதி அடைந்து விடுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனக்குள் தன்னை அறியாமல் தன்னிடம் இருக்கும் உயர்ந்த இலட்சியத்தை அறிந்து கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். அந்த முயற்சி ஆன்மீக சொற்பொழிவு, ஆன்மீக நூல்கள் படித்தல், தியானம், ஜபம் தவமாகவும் இருக்கலாம். மனிதன் தன்னோட இலட்சியத்தை மனம், வாக்கு செயல் போன்றவைகளில் ஆன்மீக வழியின் மூலம் முழு ஈடுபாட்டுடன் மனதை செலுத்த வேண்டும். அவ்வாறு மனதை செலுத்தும்போது எவ்விதத்திலாவது ஆன்மிகம் அவனையும் அறியாமல் அவனுக்கு அமைதிக்கான வாழ்வைக் காட்டிவிடும். இதனை உனது வாழ்வின் ஆரம்ப காலத்தில் அதாவது உடலும் உள்ளமும் நல்ல ஆரோக்கியமான நிலையில் இருக்கும்போது, அதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். மனிதன் காலம் கடந்து ஆன்மீக வழியில் அமைதியைத் தேட முயற்சி செய்வது அதற்குள் அவனது வாழ்வே வீணாகி விடும். இதனை உணர்ந்து கொண்டு நாம் தேடும் உயர்ந்த இலட்சியத்தை அடைய மனம், வாக்கு, செயல் இவற்றின் மூலம் தீவிரமாக ஆன்மீக வழியில் விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

இலட்சியம் என்றால் என்ன?. மனிதனுக்கு மனிதன் அவனுடைய இலட்சியங்கள் மாறும். இலட்சியங்கள் காலத்துக்கு காலம் மாறும். ஆனால் உலகில் அடிப்படையான ஆன்மீகக் கருத்துக்களான அன்பு, உண்மை, சத்தியம் தர்மம் நியாயம், மனிதநேயம் மட்டும் மாறுவதில்லை. ஒவ்வொரு மனிதனின் இலட்சியம் என்ன என்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், தர்மம் , அர்த்தக, காமஹ மற்றும் மோட்சம் என்ற நான்கு நிலைகளுக்குள்தான் அவனுடைய இலட்சியம் அடங்கும். அதாவது அறம், பொருள், இன்பம் வீடு என்ற நான்கு நிலைகளில்தான் அவனுடைய இலட்சியங்கள் என்பது அடங்கும். உன்னுடைய இலட்சியம் உயர்ந்ததாக இருக்கும்பட்சத்தில் அதன்படி நீ செயல்படும்போது ஆன்மீக வழியில் அமைதி கிடைக்கும். ( அமைதி தொடரும்)



எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (4-Jun-21, 10:34 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 66

சிறந்த கட்டுரைகள்

மேலே