அன்றரசன் கேட்பான் தெய்வமோ நின்றுதான் கேட்குமெனும் நீள்மொழி - நீதி, தருமதீபிகை 825

நேரிசை வெண்பா

அன்றரசன் கேட்பான் அயலமர்ந்து தெய்வமோ
நின்றுதான் கேட்குமெனும் நீள்மொழியை - ஒன்றி
உணரின் அரசன் உறுதி நிலையை
உணரும் உலகம் உவந்து! 825

- நீதி, தருமதீபிகை, கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும் என்னும் நெடிய முதுமொழியை உலகம் ஓர்ந்துணரின் அவனது மகிமை மாண்புகளைத் தேர்ந்து தெளிந்து கொள்ளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒரு தேசத்தை ஆளுகின்றவன் அரசன் என அமைந்தான். அகில வுலகங்களையும் அளவிடலரிய அண்ட கோடிகளையும் என்றும் நிலையாய் ஆண்டு வருபவன் ஆண்டவன் என நீண்ட பெயரோடு நிலவி நின்றான். உயிரினங்கள் இனிது வாழும்படி பாதுகாத்து ஆதரவு புரிவதால் தெய்வத்தோடு அரசன் நேர் என நேர்ந்தான். சீவாதாரங்கள் தெய்வீகங்களாய் நிலவின.

சூரியன், சந்திரன் என்னும் இருபேர் ஒளிகளும் அந்த இறைவனுக்கு விழிகளாய் அமைந்தன, இந்த இறைவனுக்கு அவை சக்கரமும் குடையுமாய் முறையே நேர்ந்தன. பெரிய மனித சமுதாயத்தை இனிது ஆளுகின்ற தேசத் தலைவனது பெருமை தெரிய உரிமையான சின்னங்கள் மருவி வந்தன.

படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும் களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க் குரிய - தொல்காப்பியம்

மன்னனுக்கு உரிய மரியாதை அடையாளங்கள் இன்னவாறு இசைந்து நின்றன. இந்த இராச சின்னங்கள் யாவும் காரணங்களோடு அமைந்துள்ளன. சீவர்களுக்கு இதமாய் வெண்ணிலவை விரித்துச் சந்திரன் தண்ணளி செய்தல் போல் தன் நாட்டில் வாழும் குடிகளுக்கு நலமாய் அருள்சுரந்து அரசன் யாண்டும் ஆதரவு புரிபவன் என்பதைக் குடை விளக்கி நின்றது.

உயர்ந்தோங்கு உச்சி உவாமதி போல
நிவந்தோங்கு வெண்குடை மண்அகம் நிழல்செய
வேலும் கோலும் அருள்கண் விழிக்க
தீதின்(று) உருள்கநீ ஏந்திய திகிரி
நினக்கென வரைந்த ஆண்டுகள் எல்லாம்
மனக்கினி தாக வாழிய வேந்தே! 22 சிறைசெய் காதை, மணிமேகலை

நெடுமுடிக்கிள்ளி என்னும் மன்னனை நோக்கி முனிவர் இன்னவாறு துதித்துள்ளார். வேந்தே! நின்குடை பூரண சந்திரன் போல் உலகம் மகிழ நிழல் செய்க என அவர் வாழ்த்தியிருப்பது குடையின் இனிய இயல்பை உணர்த்தி நின்றது.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்தார்ச் சென்னிகுளிர் வெண்குடைபோன்றிவ்
அங்கண் உலக ளித்தலான் - சிலப்பதிகாரம்

சோழ மன்னன் குடைபோல் உலகுக்கு இதம் செய்தலால் ’திங்களை யாம் போற்றுதும்’ என இளங்கோவடிகள் இங்ஙனம் பாடியிருக்கிறார். அரசின் தண்ணளி அறிய வந்தது.

உலகுஉடன் நிழற்றிய தொலையா வெண்குடை,
கடல் போல் தானை, கலிமா, வழுதி 204 அகநானூறு

வியன்குடை
20.வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ! 35 புறநானூறு

வெயிலழல் கவியாது வியலக வரைப்பின்
45 உயிரழல் கவிக்கு முயர்ச்சித் தாகிப்
பூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை 1 - 42 பெருங்கதை

அரசர் குடை வெயிலுக்காக அன்று; உயிர்கள் துயருறாவகை காத்தருளுவதற்கு அறிகுறியாகவே அமைந்தது என்பதை இங்கே அறிந்து கொள்கிறோம். அளிபுரிந்து ஆளும் அரசு ஒளி மிகுந்து வருமாதலால் அந்நிலை தெரிய விண்மதி நேர் வந்தது. மண்ணை மதியோடு ஆள்பவன் விண்மதியாய் நின்றான்.

கலிவிருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து தேய்வின்றி
தண்நிழல் பரப்பவும் இருளைத் தள்ளவும்
அண்ணல்தன் குடைமதி அமையும்; ஆதலான்
விண்ணிடை மதியினை மிகையி தென்பவே 9

- அரசியற் படலம், பால காண்டம், இராமாயணம்

தசரதனது வெண்கொற்றக் குடை மண்ணுலகில் துயர இருளை நீக்கி எவ்வழியும் உயிர்களை இனிது பேணி வருகிறது; ஆகவே விண்ணிலுள்ள வெண்மதி வீணே வேண்டியதில்லை என நயமாய் இது குறித்துள்ள அழகைக் கூர்ந்து நோக்க வேண்டும்.

வெண்கொடை, செங்கோல், அரியணை முதலிய அரச மாட்சிகள் உயிர்களை அவன் நீதியோடு பாதுகாத்து வரும் ஆட்சி நிலைகளைக் காட்சிப் படுத்தியுள்ளன. பொல்லாத புலைகளில் புகாமல் நல்ல வழிகளிலேயே பழகி மாந்தர் யாண்டும் சுகமாய் வாழ்ந்து வர நயமாய் ஆண்டு வருபவனே உயர் வேந்தன் ஆகின்றான். மன்னுயிர் புரப்பதே மன்னன் சிறப்பாம்.

நீதிமுறையான பரிபாலனத்துக்குச் சரியான சான்று நாட்டில் யாதொரு தீதும் நேராமல் செய்வதேயாம். எங்கே குற்றம் தோன்றினும் விரைந்து கண்டு அதனை உடனே கடிந்து ஒழிப்பது அரச தருமமாதலால் அரசன் அன்று கேட்பான் என்னும் முதுமொழியும் வந்தது. தெய்வம் அவ்வாறு தண்டியாது; குற்றவாளி பழியும் பாவமும் சுமந்தபின் இழி துயரிலும் அழி நரகிலும் தள்ளி அவனை வருத்திக் திருத்தும், ஆகவே தெய்வம் நின்று கேட்கும் என நேர்ந்தது. அரச நீதியின் அரிய தண்டனையும், தெய்வ நீதியின் பெரிய தண்டனையும் இங்கு ஒருங்கே தெரிய வந்தன. அரச தண்டனைக்குத் தப்பினும் தெய்வ தண்டனைக்குத் தப்ப முடியாது; எப்படியும் தப்பாமல் அது தண்டித்தே விடும்.

அரசன் அன்று கேட்பான்; தெய்வம் நின்று கேட்கும்!
God’s mill grinds slow but sure. - God

கடவுளின் யந்திரம் மெதுவாய் அரைக்கிறது; ஆனால் தப்பாமல் அது தூளாக்கி விடும் என்னும் இது ஈண்டு அறியத் தக்கது. மில் என்னும் ஆங்கில மொழி திரிகையை நேரே குறிக்குமாயினும் தரும சக்கரத்தை மருமமாய் அது உணர்த்தி நின்றது. செம்மையான நீதி நன்மையான அரசாம்.

தீமை யாதும் படியாமல் எவ்வழியும் நன்மையே படிந்து சீவர்கள் சுகமாய் வாழ வேண்டும் என்றே ஆளும் அதிகாரத்தைத் தந்து அரசனைக் கடவுள் ஈண்டு உரிமையோடு அனுப்பி யிருக்கிறார்; தனது நிலைமையை உணர்ந்து நெறிமுறையே நீர்மையோடு அவன் நீதி புரிய வேண்டும்; அவனது தலைமையைத் தெளிந்து மாந்தர் சாந்தராய் நெறியோடு வாழ்ந்து வர வேண்டும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-21, 12:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே