புல்லர்தாம் உள்ளம் நலமாய் உரிமையுறார் நட்பாகக் கொள்ளலோ தீதாம் குறி - யூகம், தருமதீபிகை 835

நேரிசை வெண்பா

கல்விமிக வல்லராய்க் காட்சிதனில் நல்லராய்ச்
சொல்லில் இனியராய்த் தோன்றிடினும் - புல்லர்தாம்
உள்ளம் நலமாய் உரிமையுறார் நட்பாகக்
கொள்ளலோ தீதாம் குறி! 835

- யூகம், தருமதீபிகை, கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய கல்வியில் தேர்ந்து இனிய மொழிகள். பேசி வெளியே நல்லவர் போல் தோன்றினாலும் புல்லர்கள் உள்ளம் திருந்தி உயர்வாய் நில்லார்; அவரோடு உறவு கொள்ளலாகாது; கொண்டால் அல்லலே விளையும்; அதனை ஒல்லையில் உணர்க என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நல்ல நூல்களின் அறிவையே கல்வி என்று உலகம் சொல்லி வருகிறது குற்றங்களை நீக்கிக் குணங்களை ஆக்கியருள வல்லதாதலால் கல்வியாளர் நல்லார் எனப் பொதுவாக எண்ண நேர்ந்தார்; மாசு களைந்து மதியருள்வதே கல்வி என வந்தது.

இத்தகைய கல்வியை நன்கு கற்றாலும் இயல்பாகவே உள்ளம் தீயராயுள்ள புல்லியர் உணர்வு தெளிந்து நல்லவராய் உயர்ந்து நில்லார். இழிபழக்கங்களில் இழித்து போயுள்ளவர் அவ்வழிகளிலேயே ஆழ்ந்து களித்து அகம் செருக்கி நிற்கின்றார். ஈனமாய் இளிந்து போனவர் பின்பு ஞானமாய்த் தெளிந்து வருவது மிகவும் அரிதாகின்றது. மருவிய சுபாவத்தின்படியே மனிதன் எவ்வழியும் வெளியே பெருகி வருகிறான்.

தன் உள்ளத்தில் நல்ல நீர்மையில்லையானால் அந்த மனிதனை எந்த விதமான கல்வியும் நல்லவன் ஆக்காது. மேலும் பொல்லாங்கு செய்யவே அதனை அவன் உபயோகிக்கிறான். நல்ல ஞானமும் பொல்லாதவனைத் திருத்தாது என்றதனால் அவனது புலைநிலையும் போக்கும் நன்கு புலனாய் நின்றன.

நேரிசை வெண்பா

இடம்பட மெய்ஞ்ஞானங் கற்பினும் என்றும்
அடங்காதார் என்றும் அடங்கார் - தடங்கண்ணாய்
உப்பொடு நெய்பால் தயிர்காயம் பெய்தடினும்
கைப்பறா பேய்ச்சுரையின் காய்! 116

- மெய்ம்மை, நாலடியார்

உயர்ந்த ஞான நூல்களைக் கற்றாலும் உள்ளம் இளிவாய்த் தாழ்ந்தவர் தெளிந்து உயரார் என இது தெளித்திருக்கிறது. பேய்ச்சுரைக்காய் மிகுந்த கசப்புடையது; எவ்வளவு இனிய பக்குவங்களைச் செய்தாலும் அதன் கசப்பை நீக்க முடியாது, அது போல் பொல்லாதவரையும் கல்விகளால் நல்லவராக்க இயலாது. இதில் வந்துள்ள உவமைக் குறிப்பை ஊன்றி உணர்ந்து கொள்க. எட்டி இனிக்காது; பட்டி பழுக்காது.

நேரிசை வெண்பா
(‘க்’ ’ப்’ வல்லின எதுகை)

மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்
உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க
இனநலம் நன்குடைய வாயினும் என்றும்
மனநலம் ஆகாவாம் கீழ்! 11 பழமொழி நானூறு

மேலான நல்லோர்களைச் சேர்ந்தாலும் கீழ் மக்கள் உள்ளம் திருந்தி நல்லவராகார் என இது குறித்துள்ளது; பல நதிகளிலிருந்து பெருகி வருகிற இனிய நீர்களாலும் கடல் இனிமையாகாது; தன் பால் வந்த நீரை யெல்லாம் அது உப்பாக்கியே கொள்ளுகிறது; அதுபோல் எவ்வளவு நல்ல நூல்களைப் படித்தாலும், எத்தனை மேலோர்களைச் சேர்ந்தாலும் உள்ளம் பள்ளமாயிழிந்தவர் உயர்ந்து திருந்தார்; தம் இயல்பின்படியே வளர்ந்து வருவார் என வனைந்து காட்டியிருக்கும் இது நினைந்து சிந்திக்கத் தக்கது. இயற்கை இளிவு யாண்டும் நீண்டு வருகிறது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

பாத மறைவெவ் அரவினுக்குப்
..பாலும் நெய்யும் புகட்டிடினும்
வாதை செய்யும் வல்விடமே
..வளரு மாபோல் மனுநூலும்
வேத மவைஓர் ஆயிரமும்
..விளங்கும் கலையும் தசக்கிரிவன்
ஓத வோதப் போதம்கெட்(டு)
..அபோத மான(து) ஓங்கியதே! – உத்தரகாண்டம், இராமாயணம்

வேதம் ஓதி அரிய பல கலைகளைக் கற்றும் இராவணன் உள்ளம் தெளிந்து நல்லவனாய் உயர்ந்து கொள்ளவில்லை; பொல்லாதவனாகவே பொங்கி நின்றான் என்று இது குறித்திருக்கிறது.

பாம்பு நல்ல பாலைப் பருகி வந்தாலும் உள்ளே நஞ்சு வளர்ந்தே வரும்; அவ்வாறே வெளியே நல்ல நூல்களைப் படித்து வந்தாலும் பொல்லாதவர் நெஞ்சம் கொடியராய் நெடிதோங்கி நீண்டே நிற்பர் என்பதை ஈண்டு உணர்ந்து கொள்கிறோம்.

மூர்க்கர்களுக்கு அரிய உபதேசங்களைச் செய்தாலும் அவர் இனியராகார்; கொடியரே யாவர்; பாம்புகளுக்குப் பால் வார்த்தாலும் விஷமே விருத்தியாம் என்னும் இது இங்கே அறியவுரியது.

புன்மையான நிலைகளிலேயே பழகியுள்ளவர் புல்லர் என நேர்ந்தார். அவர் உள்ளம் துாய்மையடைந்து நல்லவராய் உயர்ந்து வருதல் அரிதாதலால் அவரை நண்பராக நம்பி நணுகலாகாது. துன்பமே என்று தொலைவில் ஒதுங்க வேண்டும்.

மனிதர்களுடைய தராதரங்களைச் சரியாகத் தெரிந்து பழகுவதே சிறந்த விவேகமாம். தன் வாழ்வில் அல்லல் யாதும் நேராமல் ஆராய்ந்து தெளிந்து நல்லவரோடு பழகிவரின் அந்த மனிதன் எந்த வகையிலும் நன்மைகளை அடைந்து கொள்ளுகிறான்;

நேரிசை வெண்பா

பொல்லாத சூழல் புடைபரந்து நின்றாலும்
நல்லார் தொடர்பை நனிநயந்து - எல்லாரும்
ஓர்ந்து தெளிந்துள் உவந்துவர வாழ்வதே
தேர்ந்த அறிவின் திறம்!

மாந்தருடைய நிலைகளைக் கூர்ந்தறிந்து குணமாய் வாழ்வதே மணமான வாழ்வாம். காண நேர்ந்த மனிதரைக் கருதியுணர்ந்து உறுதி காண்பவன் அரிய மதியூகியாய் உயர்ந்து திகழ்கிறான். ஊன்றி உணர்வதில் உய்திகள் தோன்றுகின்றன.

The proper study of mankind is man. - Pope

மனித இனத்தைச் சரியாயறிந்து கொள்பவனே சிறந்த மனிதன் ஆகிறான் என்னும் இது ஈண்டு ஊன்றி உணர வுரியது.

எவருடைய இயல்புகளையும் இனிதறிந்து தவறு நேராமல் தன் வாழ்வை நடத்திவரின் அவன் உயர்வுடையனாய் ஒளிபெற்று வருகிறான். நல்ல விவேகத்தால் எல்லா நன்மைகளும் விளைகின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-21, 1:00 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 60

மேலே