மனுவின் நெறிமுறையே நீதியென வேந்தன் அறிகரியாய் நின்றான் - நீதி, தருமதீபிகை 826

நேரிசை வெண்பா

மனித சமுதாயம் மாண்புபெற ஆய்ந்து
புனித நிலையில் புரிந்த - மனுவின்
நெறிமுறையே நீதியென நேர்ந்துளது வேந்தன்
அறிகரியாய் நின்றான் அதற்கு. 826

- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனித சமுதாயம் மகிமை மாண்புகளோடு இனிது வாழ்ந்து புனித நிலையில் உயரும்படி மனு புரிந்த முறையே நீதிநெறி என நேர்ந்துள்ளது; நேரே உரிமையாய் வாய்ந்த அரசன் அதற்கு ஆன்ற சான்றாய் யாண்டும் அமைந்து நிற்கின்றான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தரும நீதிகள் தழுவி மாந்தர் வழிமுறையே வாழ்ந்து வர வழிசெய்து அருளவே வேந்தன் விதிமுறையாய் நேர்ந்து வந்துள்ளான். பிறர் எவரையும் நேர்மையாய் நடத்த வுரியவனாதலால் அரசன் எவ்வழியும் சீர்மையும் செம்மையுமாய் இருக்க வேண்டிய சிறப்போடு சேர்ந்து நின்றான் குற்றம் இன்றிக் குணங்கள் நிறைந்த அளவுதான் காரியங்களில் வெற்றிகண்டு சீரிய கொற்றவனாய் உலகில் அவன் குலாவி நிற்க நேர்ந்தான்.

நாட்டுக்குத் தான் விதித்த நீதியின்படி தன்னை முன்னதாய்க் காட்டி ஒழுகுவோனே மன்னர் மன்னவனாய் மகிமை பெற்று வருகின்றான். சத்தியம் தோய்ந்தவன் உத்தமனாகிறான்.

குலசேகர பாண்டியன் மதுரையிலிருந்து அரசு புரிந்தான். கொற்கை நகரமும் பக்கக் கிளையாயிருந்தது இவன் நல்ல நீதிமான். நெறிமுறையே குடிகளைப் பேணி வந்தான். தன் ஆட்சியின் நிலைமையை நேரே அறியச் சில சமயங்களில் மாறு வேடம் பூண்டு இரவில் நகர சோதனை செய்வது இக் கோமகனது வழக்கம். அவ்வாறு செய்து வருங்கால் ஒருநாள் யாமத்தில் ஒரு வீட்டில் ஓர் இளமங்கை மறுகி மொழிந்த உரைகள் கேட்டன. அம் மாதின் பேர் மாலதி, கணவன் கீரந்தை என்னும் பேரினன். அவன் காசி யாத்திரை போக விரும்பினான்; தான் தனியே இருக்க நேர்ந்ததை நினைந்து மனைவி வருந்தவே அவன் இனிது தேற்றினான்: 'நம் மன்னர் பெருமான் பாதுகாப்பில் யாதொரு தீதும் நேராது; நீ சும்மா தைரியமாயிரு' என்று ஆறுதல் கூறிப் போனான்.

அவ்வுரையைக் கேட்டு வேந்தன் அரண்மனை புகுந்தான்! மறுநாள் முதல் அம்மனையைப் புனிதமாய்க் கவனித்தான், முதிய கிழவிகளை இடையிடையே பாதுகாப்பிற்கு அனுப்பி அதி விநயமாய் ஆதரித்து வந்தான்; கங்கையாடப் போன கணவன் மீண்டு வந்து சேர்ந்தான்; அவன் வந்தது வேந்தனுக்குத் தெரியாது, அன்று இரவும் நகர சோதனைக்குச் சென்றான்; அவ்வீட்டருகே செல்லுங்கால் உள்ளே ஓர் ஆண்குரல் கேட்டது. நீட்டிய வாளோடு விரைந்து சென்று அக்கதவைத் தட்டினான்; யார் அது?’ என்று உள்ளிருந்து ஓர் குரல் வந்தது. உரிய கொழுநனே வந்தள்ளான் என்று தெரியவே அரசன் உள்ளம் வருந்தினான். தான் கதவைத் தட்டியது அவனுக்கு விபரீதமான சந்தேகத்தை விளைத்து விடுமே! என்று மறுகி நொந்த மன்னன் விரைந்து அந்தத் தெருவிலிருந்த கதவுகளை யெல்லாம் தட்டிவிட்டுத் தாவிப் போனான். மறுநாள் அத்தெருவினர் யாவரும் இரவு நடந்ததைக் குறித்து அரசனிடம் முறையிட வந்தனர்.

அரசன் அரியணையில் அமர்ந்தான்; மந்திரிகள் வந்து நின்றனர்; நீதி விசாரணை புரிந்தான்: “இரவு கரவாய்ப் போய் ஒரு இளமங்கை யிருந்த வீட்டின் கதவைத் தட்டின கள்வனைக் கண்டு பிடித்தால் என்ன தண்டனை கொடுக்கலாம்? என்று மன்னன் கேட்டான். 'அந்தக் கையைத் துண்டிக்க வேண்டும் மகாராஜா!' என்.று அத்தெருவிலிருந்து வந்த ஒருவன் துணிந்து சொல்லவே உடைவாளை உடனே உருவியெடுத்து 'அந்தத் தீமையைச் செய்தது இந்தக் கைதான்; இதோ துண்டிக்கப் படுகிறது' என்று துண்டாக வெட்டி வீழ்ததினான், கை தரையில் துள்ளி வீழ்ந்து துடித்தது.

எல்லாரும் ஐயகோ! என்று அலறி அழுதனர். பின்பு நடந்த வரலாறுகளை யெல்லாம் நன்கு தெரிந்து நாடும் நகரமும் வருந்தி நொந்தன. என்ன நீதி! என்ன நெறி! என்ன தருமம்' என மாதவரும் மறுபுலங்களின் மன்னவரும் வியந்து புகழ்ந்தனர். இழந்து போன கை தெய்வத் திருவருளால் பொன் கையாய் வளர்ந்து விளங்கியது. அதனால் பொற்கைப் பாண்டியன் எனப் புகழ் பெற்று நின்றான். இந்த அதிசய சரித்திரத்தை மதுரையின் அதிதேவதை கண்ணகியிடம் துதிசெய்து சொல்லி அரசைப் புகழ்ந்துள்ளது. அயலே வருவது காண்க.

உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
அரைச வேலி யல்ல தியாவதும்
புரைநீர் வேலி இல்லென மொழிந்து
மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி
இன்றவ் வேலி காவா தோவெனச்
செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி
நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று
வச்சிரத் தடக்கை அமரர் கோமான்
உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை
குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து
இறைக்குடிப் பிறந்தோர்' 23 சிலப்பதிகாரம்

கலித்துறை
(விளம் மா விளம் மா புளிமாங்காய்)

கோமுறை கோடாக் கொற்றவ ரேறே முறையேயோ
தாமரை யாள்வாழ் தண்கடி மார்பா முறையேயோ
மாமதி வானோன் வழிவரு மைந்தா முறையேயோ
தீமைசெய் தாய்போற் செங்கைகு றைத்தாய் முறையேயோ! 17

- பழிஅஞ்சின படலம், கூடற் காண்டம், - (திருவிளையாடல்)

இன்னிசை வெண்பா

எனக்குத் தகவன்றால் என்பதே நோக்கி,
தனக்குக் கரியாவான் தானாய்த் தவற்றை
நினைத்துத்,தன் கைகுறைத்தான் தென்னவனும்; காணார்
எனச்செய்யார், மாணா வினை. 102 பழமொழி நானூறு

ஆதிச் செழியற்(கு) ஒருகைம் மலர்பொன் அடைய. - தக்கயாகப் பரணி

நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதார்ப் பாண்டியன் - குணநாற்பது

இன்னிசை வெண்பா

கையரிந்தான் மாறன் கதடிவித்த குற்றத்தால்
எய்யுஞ் சிலைக்கை இரங்கேசா - பையத்
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 44.

- குற்றங் கடிதல், இரங்கேச வெண்பா

மையிலாள் கடைதொட்(டு) உயர்கரம் குறைத்த
மாசறு தேசுடை நீதி ஐயனே! - திருவாலவாய்

நேரிசை வெண்பா

தன்மனமே சான்றாகத் தான்ஒழுகின் மேலான
பொன்மகன் ஆகிப் பொலிகுவான் - மன்மகனாய்
ஆண்டுவந்த பாண்டியன்முன் அவ்வா றொழுகியதால்
பூண்டுவந்தான் கையெல்லாம் பொன் - இதயஒலி

இம்மன்னனது நீதி முறையை இவ்வாறு பலரும் புகழ்ந்துள்ளனர். உயர்ந்த இராச தருமத்திற்கு உலகறிந்த சான்றாய் இவன் ஒளிசெய்து நின்றமையால் அறிகரி என நேர்ந்தான். தன் உள்ளமே சாட்சியாய் நேர்மையோடு ஒழுகி நீதி புரிந்து வந்த இவனது அரிய சீர்த்தி யாண்டும் நெடிது நிலவி நீண்டது.

கம்பர் ஒரு நாள் தனது அருமை மனைவியோடு உல்லாசமாய் உரையாடிக் கொண்டிருந்தார். வசந்த காலம்; இரவு நேரம், நிலவொளி எங்கும் பரந்து நின்றது; தென்றலாகிய இளங்காற்று மெல்ல வீசியது; அதனால் கதவு இதமாய் அசைந்து திறந்தது, யாரோ வந்துள்ளார் என்று விரைந்து எழுந்து வந்து வெளியே பார்த்தார்; யாரும் காணோம்; காற்றின் வேலை என்று தெரிந்து கொண்டார். தென்றலை நோக்கி ஒரு பாட்டுப் பாடினார். சுவையான அந்த அழகிய கவி அயலே வருகிறது.

நேரிசை வெண்பா

கொற்கையான் மாறன் குலசே கரப்பெருமான்
பொற்கையான் ஆனகதை போதாதோ - நற்கமல
மன்றலே வாரி மணிவா சலையசைக்கத்
தென்றலே ஏன்வந்தாய் செப்பு? - கம்பர்

தென்னாட்டு மன்னன் பொன்னாட்டிய கையை எடுத்துக் காட்டித் தென்றலோடு கவிஞர் இவ்வாறு விநயமாய் வினவியிருக்கிறார். பாண்டிய அரசன் செய்துள்ள நீதி உலக வுள்ளங்களை உருக்கியுள்ளது. நெஞ்சமே சான்றாய் நெறிமுறையில் ஒழுகி வருவோன் நிலையான மகிமையை நேரே பெறுகின்றான். உண்மை வழியில் ஒழுகுவோன் உலக ஒளியாகின்றான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-21, 12:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே