நேர்ந்த பகைவர் நிலைதளர்ந்து நீள்வறுமை சார்ந்தெளிய ராய்வரினும் சாரற்க - யூகம், தருமதீபிகை 836

நேரிசை வெண்பா

நேர்ந்த பகைவர் நிலைதளர்ந்து நீள்வறுமை
சார்ந்தெளிய ராய்வரினும் சாரற்க - காய்ந்துலர்ந்த
வித்துமழை வீழ்ந்தவுடன் விம்முதல்போல் வேறுதுணை
ஒத்தவுடன் ஓங்குவார் உள்! 836

- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

முதலில் பகையாய் நேர்ந்தவர் கால வேற்றுமையால் நிலைகுலைந்து வறுமையடைந்து எளியராய் வந்து இனியர் போல் உன்னைச் சாரவரினும் நீ அவரைச் சேராதே, காய்ந்துலர்ந்து கிடந்த விதை சிறிது மழை பெய்தவுடன் முளைத்துக் கிளைத்தல் போல் வேறு துணை கிடைத்தவுடன் உள்ளே சீறி உனக்கவர் கேடு புரிய மூளுவர்; அதனை நாடி உணர்ந்து நலம் தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உறவு, பகை, நட்பு என்பன உலக வாழ்வில் உலாவி வருகின்றன; மாந்தர் யாண்டும் சேர்ந்து வாழும் இயல்பினராதலால் செயல் நிலைகளின் மாறுபாடுகளால் வேறுபாடுகள் அவரிடையே விளைந்து விரிந்து விபரீதமாய் வளர்ந்து விடுகின்றன.

விருப்பு வெறுப்புகள் சீவ சுபாவங்களாய் மேவியுள்ளன; ஒருவனிடம் சிலர் பிரியமாய் நண்பு பூண்டிருக்கின்றார்; சிலர் வெறுப்பாய் விரோதம் கொண்டு நிற்கின்றார்; பலர் பொதுவாயிருக்கின்றனர்; இந்த மூவகை நிலைகள் யாண்டும் நீண்டன.

பொறாமை, பொருளாசை, தகாதசெயல், வாக்குவாதம் முதலிய குரோதங்களால் விரோதங்கள் விரிந்து வருகின்றன; வழிமுறையே தொடர்ந்து வரும் பகைமை பரம்பரை விரோதம் என வரும். அந்த விரோதியை எந்தவகையிலும் அணுகாமல் விலக்கி விடவேண்டும்; அணுகினால் அல்லலும் அவலங்களுமாம்.

உள்ளத்தில் பகைமையுள்ளவன் வெளியில் நல்லவனைப் போல் நடித்து உறவுகொள்ள வருவான்; அவனை உரிமையாளனாய் நம்பலாகாது; நம்பித் தழுவிக் கொண்டால் சமயம் பார்த்து நாசம் செய்து விடுவான். நீசம் நேராமல் நினைந்து விலகுக.

‘பகையாளி குடியை உறவாடிக் கெடு’ என்பது பழமொழி வழக்காய் வந்துள்ளது; பகைவரை வெல்லும் வகையினர் குழுவுக்கு இது ஒரு தொகையான மந்திரமாய்த் தோன்றியிருக்கிறது.

எதிரி படை முதலிய நிலைகளில் வலியுடையனாயின் அவனை நேரே எதிர்த்து வெல்ல முடியாது; ஆகவே வஞ்சகமாய் அவனுக்குக் கேடு சூழ நெஞ்சம் துணிகின்றனர். அவ்வாறு கரவு நிலையில் உறவாட வருகின்றவரிடம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். குறி தவறினால் கொலை நிகழ்ந்து விடும்.

எளியராய் அழுதாலும், மெலியராய்த் தொழுதாலும், இனியராய் இதமொழிகள் பேசினாலும் பகைவரை உரிமையாய் மருவலாகாது. அழுகள்ளன், தொழுகள்ளன், ஆசாரக்கள்ளன் என்னும் களவு நிலைகள் எல்லாம் ஒன்னாரின் உளவு வழிகளாய் வந்துள்ளன. எவ்வழியும் விழியூன்றிச் செவ்வையாய்ப் பேணுக.

வஞ்சக நடிப்பு நஞ்சகம் பொருந்தி வருமாதலால் இவற்றை யூகமாய் நெஞ்சம் தெளிந்து கொள்ள வேண்டும்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும்; ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. 828 கூடா நட்பு

பகைவர் நல்ல நண்பர் போல் மெல்ல வந்து தொழுதாலும், அழுதாலும் அவரை நம்பாதே; வணக்கமாய்த் தொழுகின்ற அக் கையுள்ளேயே உன்னைக் கொல்ல வல்ல கொலைக்கருவி மறைந்திருக்கும்; அதனை யூகமாயுணர்ந்து உறுதி சூழ்ந்து கொள்க எனத் தேவர் இங்ஙனம் நன்கு உணர்த்தியிருக்கிறார்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

தொழுததங் கையி னுள்ளுந்
..துறுமுடி யகத்துஞ் சோர
அழுதகண் ணீரின் உள்ளும்
..அணிகலத் தகத்தும் ஆய்ந்து
பழுதுகண் ணரிந்து கொல்லும்
..படையுடன் ஒடுங்கும் பற்றா(து)
ஒழிகயார் கண்ணுந் தேற்றந்
..தெளிகுற்றார் விளிகுற் றாரே! 3

- விமலையார் இலம்பகம், சீவகசிந்தாமணி

தொழுத கையுள்ளும், அழுத கண்ணீர் உள்ளும், அணிகலங்களுள்ளும் உன்னைக் கொல்லும் கருவி ஒடுங்கி யிருக்கும்; ஆதலால் எதிரிகளை இனியராய் எண்ணாதே, யாரையும் எளிதே நம்பிச் சேராதே, சேர்ந்தால் அழிவே விளையுமென இது குறித்துள்ளது. குறிப்பைக் கூர்ந்து நோக்கி ஓர்ந்து சிந்திக்க வேண்டும். தேவர் வாய்மொழியை வரைந்து கொண்டு தெளிவான நிலைகளை விளக்கி இது விரிந்து வந்துள்ளமையை இங்கே நாம் தெரிந்து கொள்கிறோம்.

காய்ந்துலர்ந்த வித்து என்றது பகைவரது நிலையை உய்த்துணர வந்தது. வறுமையால் வாடி அல்லலால் நொந்து யாதொரு ஆதரவும் இன்றி எளிமையாய் வந்தாலும் பகைமையாளரை உரிமையாய் நம்பலாகாது என்பதை நன்கு தெளிய அது உவமையாய் நேர்ந்தது. வித்துள் விளைவதை உய்த்து உணருக.

பசையற்று நிலத்தில் கிடந்த வறிய வித்து சில மழைத்துளிகள் வீழ்ந்தவுடனே கிளைத்தெழும்; அது போல் மெலிந்து கிடந்த பகையும் அயலே சார்பு சிறிது பெறின் உடனே பெருகியெழுந்து கொடிய அழிவுகளை அதிவிரைவில் செய்ய நேரும்; ஆதலால் அதனை எவ்வழியும் எத்துணையும் சேரலாகாது.

தனக்கு அல்லல் நேராமல் பாதுகாத்துக் கொள்வதே ஒருவனுடைய நல்ல அறிவுக்குப் பயனாம். யூகம், விவேகம் என்பன உணர்வின் உயர்ந்த பாகங்களாய் ஒளி தோய்ந்து ஓங்கியுள்ளன.

எத்தகைய நிலையிலும் தன்னை உத்தமனாய் உயர்த்தி வாழ்க்கையில் வெற்றி பெற்று வருபவனே வித்தக விவேகியாய் விளங்கி வருகிறான். எதிரியின் மருமங்களை எதிரறிந்து விலக்கிக் கருமங்களைக் கருதிச் செய்துவரின் அவனுடைய வாழ்வு எவ்வழியும் செவ்வையாய்ச் சிறந்து திகழும்; நேர்ந்த எதனையும் நிதானமாய்க் கூர்ந்து ஓர்ந்து நிலைமையைத் தேர்ந்து கொள்வதே தலைமையான யூகமாம். உணர்வின் அளவு உயர்வுகள் உளவாம்.

போகம் பொருளுயர்வு பொங்கிவரும் எங்குமே
யூகம் உடையான் உழை!

இதனை இங்கே நன்கு மனனம் செய்து கொள்ளுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jun-21, 12:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 50

மேலே