எம் வம்ச வரலாறு

வேர்களை வருடும் விழுது.....

எம் பூசாரி வம்ச வரலாறு....

அன்று மகிழ்ச்சியின் உச்சத்தில் நான்..... மனதில் உற்சாகம் கரைபுரண்டோடிக் கொண்டிருந்தது.... நான் அடிக்கடி ரசித்துக் கேட்கும் பாடல்களை (குறிப்பாக “ராதை என் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே...) எப்போதும்போல அரையும்குறையுமாய் , தெரியாத வரிகளை நானே என் விருப்பம்போல் நிரப்பி , ஏழு ஸ்வரங்களில் அடங்கா ராகங்கள் கூட்டி, முணுமுணுத்தவண்ணம் வீட்டில் அங்கும் இங்குமாய் இலக்கு இல்லாது பறக்கும் சிட்டைப் போல உலவிக் கொண்டிருந்தேன் .... இடையிடையே அன்று மாலை செல்லவேண்டிய பிரயாணத்திற்கும் என்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தேன் ....
ஆம்! வெகுநாட்களுக்குப்பின் அன்றுதான் அத்தை பிள்ளைகள் , பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் அனைவரும் ஒன்றாய் இரயிலில் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம்...

என் கல்லூரி நாட்கள்வரை பொதுவாக கோடை விடுமுறை, குடும்பம் சார்ந்த சுப நிகழ்வுகள் மற்றும் தேர்தல் திருவிழாக்களின் (எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை தேர்தல் ஒரு திருவிழா தான்) போது எல்லாரும் இப்படி ஒன்றாக பயணித்து நெல்லை செல்வது வழக்கம்.... திருமணத்திற்குப் பின்பு அவரவர் குடும்பம், பிள்ளைகள் கல்வி, பணி சுமை என்றப் பலக் காரணங்களால் பல வருடங்களாக இதுபோன்ற பயணங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது......

இன்று அந்த வாய்ப்பு கைகூடி வந்ததே என் பேரானந்தத்தின் காரணம்.... அதுமட்டுமன்றி எனக்குள் விடை தெரியாது ஓடிக் கொண்டிருந்த பல கேள்விகளுக்கு தகுந்த சான்றுடன் விடை கிட்டும் தருணமாக அமையப்போகிறது இந்தப் பயணம் என்பது மற்றொரு முக்கியக் காரணம்.....
இந்தப் பயணம் எமது பூசாரி வம்சத்துக் பூர்வக்குடிகள் வாழ்ந்த குறும்பூரையும், அதையடுத்த கல்லால் என்னும் கூழையன் குண்டு என்ற இடத்தில் எம்பெருமான் வைத்திலிங்கம் சுவாமி ஆதியில் குடிகொண்ட கோயிலையும், எங்கள் மூதாதையர் மற்றும் குலதெய்வம் கற்பக சித்தர் ஆதியில் வாழ்ந்த இடமும் தரிசிக்க மேற்கொண்டப் பயணம்....
பலமுறை அப்பாவின் வாயிலாக எங்கள் பூசாரி வம்ச வரலாற்றையும் , எங்கள் குல தெய்வம் கற்பக சித்தர் பற்றியும் கேட்டிருக்கின்றேன்... ஆனால் அதை மேலோட்டமாகவே மனதில் பதிய வைத்திருந்தேன்..... எனக்கு திருமணம் முடிந்தபோது, புதிதாய் ஏற்பட்ட உறவுகளிடம், எங்கள் குடும்பம் பூசாரிக் குடும்பம், எங்கள் குலதெய்வம் கற்பக சித்தர் என்று சொல்வேன் .... ஆனால் எதிர்வாதமாய் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் சொல்லத் தெரியாமல் விழித்திருக்கிறேன்....

‘பூசாரி’ என்றால் நீங்கள் தான் கோயிலில் பூசை செய்வீர்களா ? என்று பலர் என்னிடம் வினா எழுப்புவார்கள்...
ஆம்! எங்கள் ஊரிலுள்ள வைத்திலிங்க சுவாமி கோயிலில் வழிவழியாக எங்கள் வம்சமே பூசை செய்கிறது என்று மிடுக்காய் பதிலுரைப்பேன்... ( அநேகமாக தமிழகத்திலேயே பிராமணர் அல்லாது எங்கள் சாதியினர் பூசை செய்யும் கோயில் எங்கள் ஆலடிப்பட்டி வைத்திலிங்க சுவாமி கோயில் மட்டுமே என்று நம்புகிறேன்)

ஆனால் ,
எப்படி இந்த வைத்திலிங்க சுவாமி கோயிலுக்கு எங்கள் வம்சம் மட்டுமே பூசை செய்கிறது?
‘பூசாரி’ என்ற எங்கள் குடும்பப் பெயருக்கான காரணம் என்ன?
குறும்பூரை பூர்வீகமாகக் கொண்ட நாங்கள் எவ்வாறு ஆலடி மண்ணில் புலம்பெயர்ந்தோம்?
இப்படிப் பல கேள்விகளுக்கு எனக்கு அதுவரை தெளிவான விடை தெரியாது என்பதே உண்மை.......

அன்று பயணம் இனிதே தொடங்கியது... அந்த நெல்லை விரைவுவண்டியில் ஒரு பெட்டி முழுவதும் எங்கள் உறவுகளே ஆக்கிரமித்திருந்தோம்.... ஒருவருக்கொருவர் கொண்டுவந்த உணவுகளை பரிமாறிக் கொள்வதும், சிறு பிராயாத்தில் ஒன்றாய் கூடி ஊர் திருவிழாக்களில் வலம் வந்ததும்., அவ்வப்போது நாங்கள் செய்த சிறுசிறு குறும்புகளும், அதற்காய் வீட்டிலுள்ள பெரியவர்களிடம் பெற்ற ஏச்சுக்களையும் பசுமை மாறாது உச்சஸ்தாயில் பேசி குதூகலத்தில் ஆழ்ந்திருந்தோம்... அவ்வப்போது நாங்கள் மொத்தமாய் எழுப்பிய சிரிப்பொலி இரயில் பெட்டி முழுதும் எதிரொலித்துக் கொண்டிருக்க, ஆழ்மனதில் என்னுள் ஏதோ ஒரு இன்புரியா தவிப்பு இழைந்தோடிக் கொண்டிருந்தது..... இரவு ,அனைவரும் உற்சாகம் சற்றே தளர்ந்து உறங்கச் செல்ல, நாள் நடுநிசியை தாண்டிவிட்டது.... எனக்கு உறக்கமே இல்லை.... பொதுவாகவே எதைப்பற்றியாவது அதிகம் சிந்தித்தால் எனக்கு இலேசாய் மூச்சுத் திணறல் ஏற்படும், தூக்கம் அறவே போய்விடும்.... ஆனால் சிந்தனை ஓட்டம் மட்டும் இன்னும் மிகத் தெளிவாகிவிடும்... அன்றும் அப்படித்தான் மனம் இதுவரை நான் காணாத அந்த கல்லால் என்னும் கூழையன் குண்டு என்ற இடத்தையே சுற்றி சுற்றி கிரிவலம் வந்தது..... கடைசியாய் ஆலடிப்பட்டியில் உள்ள வைத்திலிங்கம் சுவாமி கோயிலில் ஏற்கெனவே நான் பலமுறை தரிசித்திருந்த கற்பக சித்தர் ஒருநிமிடம் மனக்கண்ணில் தோன்றினார்.... மெய்சிலிர்த்து அப்படியே உற்று நோக்கினேன்... அவர் ஒருமுறை தன் இரு கண்களையும் சட்டென்று திறந்து என்னை உற்று நோக்கி பின் இமைமூடினார்... அந்த ஒருசில விநாடிகள் அவர் பார்வையில் நான் பெற்ற தீட்சை என்னுள் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது .....உடல் முழுதும் ஏதோ லேசாய் மின்சாரம் பாய்ந்தது போல் உணர்வு....பயமும் பக்தி யும் கலந்த ஒரு பரவசம் என் இதயத்தை ஆக்கிரமித்தது......ஆனால் அது நிச்சயம் கனவில்லை.... ஏதோ ஒரு உணர்வு ஆட்கொண்டதால் ஏற்பட்ட பிரம்மை என்றே நம்புகிறேன்....

இரயில் பயணம் நிறைவுற்று ‘திருநெல்வேலி’ என்ற பெயர் பலகையை பார்த்தவுடன் எனக்கு ஏற்பட்ட பரவசம் இருக்கிறதே... அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது..... நெல்லை மண்வாசத்தை முழுதாய் ரசித்து சுவாசித்த வண்ணம் , எங்கள் பயணம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்த குறும்பூரை ஒட்டியுள்ள கல்லால் எனப்படும் கூழையன் குண்டில் உள்ள தலத்தை நோக்கி தொடர்ந்தது.... ஊரை நெருங்க நெருங்க... உள்ளத்தில் பெரும் கிளர்ச்சி... இந்த மண்ணில் தானே நம் மூதாதையர் மகிழ்ந்து குலாவி இன்புற்றிருப்பர் .... இந்த மண்ணில் தானே நம் பூசாரி வம்சத்தின் ஆணிவேர்கள் அடி ஊன்றி வாழ்ந்திருப்பர்... இந்த மண்ணில் தானே பலக் கனவுகள் சுமந்து நம் மூதாதையர் உலாவியிருப்பர்.... எண்ணங்கள் பலவாராய் தடையின்றி ஓட.... எங்கள் வாகனமும் தடையின்றி ஊர் செல்ல முன்பே அழகிய தார்பாதை சமைத்திருந்த என் பாசமிகு பெரிய தந்தை ஆலடி அருணா மனக்கண் முன் தோன்றினார்.... மானசீகமாய் அவரை வணங்கிக் கொண்டேன்.......
எங்கள் வாகனம் கல்லால் தலத்தை அடைந்தது... அனைத்து உறவுகளும் பெரும் உற்சாகத்துடன் இறங்கினோம்... பூர்வீக மண் தந்த புத்துணர்வு அது...... எங்கள் பூசாரி குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து நேர்த்திக்கடன் தீர்க்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முன்கூட்டியே வந்து செய்திருந்தார்கள் அண்ணன் மதிவாணனும், அக்கா பூங்கோதையும் இளவல் எழில் வாணனும்....... நாங்கள் வருவதற்கு முன்பே கடா வெட்டப்பட்டு படையல் போட ஒருபுறம் மும்முரமாக சமையல் நடந்தேறிக் கொண்டிருக்க... இறைச்சி குழம்பு கொதிக்கும் வாசத்தை பிடித்தபடியே கோயிலின் பிரதான இடத்தை அடைந்தோம்..... பெரிதாக கோபுரங்கள் தாங்கிய கோயில் அமைப்புகள் இல்லை... சிறிய மண்டபத்துடன் வைதிலிங்க சுவாமி, பத்திரகாளி அம்மன், பிள்ளை பெருமாள், சப்பாணி மாடன் , கற்பக சித்தர் ஆகியோரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மூலஸ்தானங்கள் தனித்தனியே சுற்றி சூழ்ந்திருந்தன... அதற்கு சற்றுத் தொலைவில் ‘முத்துப் பகடை’ என்ற ஒருப் பெண்ணின் பெயர் தாங்கிய கல்வெட்டுடன் சமாதி ஒன்றும் அமைந்திருந்தது.... அந்தச் சமாதிக்கு அழகாய் சுற்றுச் சுவர் எழுப்பியிருந்தார்கள் அண்ணன் மதிவாணனும் அக்கா பூங்கோதையும்....
முதலில் உறவுகள் புடைசூழ அனைத்து தெய்வங்களுக்கும் பெரியம்மா திருமதி. கமலா ஆலடி அருணா அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்புப் பூசைகள் முறையாய் செய்யப்பட்டன... அத்தனை தெய்வங்கள் முன்பும் சாஷ்டாங்கமாய் விழுந்து மனதார வேண்டிக் கொண்டேன்.....ஆனால் அனைத்திலும் கற்பக சித்தரை நெருங்கும்போது மட்டும் என்னுள் ஏதோ ஒரு காந்த ஈர்ப்பு ஏற்படுவதை உணர்ந்தேன்.... ஆம்! அவர் என் முப்பாட்டனார் அல்லவா..... நான் அவர்வழி வந்த வம்சத்தவள் அல்லவா..... அவரின் மரபணு எனக்குள் ஒவ்வொரு உயிர்ச் செல்லிலும் உணர்வாகி துடித்துக் கொண்டிருக்கிறது அல்லவா.....
சிறிது நேரம் அவர்முன் நேருக்குநேர் நின்று கண்மூடி தியானித்தேன்... எங்கள் வம்சம் மேலும் மேலும் தழைத்து ஓங்க ஆசி வழங்கும்படி அவருக்கு அன்பாய் கட்டளையிட்டேன்( என் முப்பாட்டன் என்ற உரிமையில்)....

பின்னர் முத்துப் பகடை சமாதியில் சிறப்பு பூசைகளும் சாந்தியும் செய்யப்பட்டது.... பெரியம்மா திருமதி.கமலா ஆலடி அருணா அவர்கள் எங்களை ஒவ்வொருவராக தனியே அழைத்து , எங்கள் கரங்களில் மஞ்சள், குங்குமம், வளையல், கோடித் துணி கொடுத்து முத்துப் பகடை சமாதியில் சமர்ப்பிக்கச் சொன்னார்கள்.... சமாதியின் வாசலை நெருங்கி கால் பதித்தபோதே ஒரு அச்ச உணர்வு என்னை தொற்றிக்கொண்டது.... யார் இந்த முத்துப் பகடை?
இந்தப் பெண்ணின் சமாதியில் ஏன் நாம் சாந்தி செய்ய வேண்டும்?
ஏன் இவள் சமாதி கண்டு நமக்கு அச்ச உணர்வு உண்டாகிறது? எனப் பலக் கேள்விகள் எழுத்தாலும்.... நேர்த்திக்கடனின் அடுத்த செயலாக, அருகில் உள்ள ஊர்களிலிருந்து அழைத்துவரப் பட்டிருந்த சுமங்கலி பெண்களுக்கு புதுப் புடவையுடன் தாம்பூலம் வழங்க வேண்டி இருந்ததால்... அப்போதைக்கு அந்தக் கேள்விகளுக்கான விடைகாணும் முயற்சியை ஒதுக்கி வைத்தேன்....

படையல் போட்டு அனைத்து நேர்த்திக்கடனும் முறையாய் முடித்தப்பின்பு அனைவரும் மதிய உணவு உண்ணத் தொடங்கினோம்... பனையோலை பட்டையை உண்கலமாய் முடிக்கி அதில் பொங்கிய சோறும் படையலுக்கு வெட்டிய கடாவின் இறைச்சிக் குழம்பும் சுட சுட பரிமாறப்பட்டது.... அனைத்து உறவுகளும் கிடைக்கும் இடத்தில் ஆங்காங்கே மண்மேடுகளில் அமர்ந்து மகிழ்ந்து உண்டோம்.... இறைவனுக்குப் படைத்த உணவு என்பதால் மிச்சம் வைக்கலாகாது என்ற எண்ணத்தில் முடியாவிட்டாலும் மீதம் வைக்காது அதை நான் உண்ண , என் மூச்சுத் திணறல் பன்மடங்கானது.... சுற்றி அமைந்த கோயில்களின் நடுவே சிறு திறந்தவெளி மண்டபம் இருந்தது... மெல்ல நடந்து சென்று சற்று இளைப்பாற அங்கே அமர்ந்தேன்..... சிறுது நேரத்தில் எம் உறவுகளும் அங்குவந்து சூழ்ந்து அமர்ந்தனர்.... அனைவர் முகத்திலும் நேர்த்திக்கடன் தீர்த்த ஆத்ம திருப்தி ....
முதலில் பெரியம்மா பேச்சை தொடங்கினார் ... அமுதா! நீ தான் அடிக்கடி கனவு கண்டு சொல்வாயே, நீ கண்ட கனவுகள் பற்றி சொல் என்று கேட்டு உரையாடலை முன்மொழிய .... உடனே அக்கா பூங்கோதையும் எனது பெரிய அத்தை மகள் அண்ணி மணிமேகலையும் அதை அவ்வாறே ஆர்வத்தில் வழிமொழிந்தனர்.... மூச்சுத் திணறலால் அதிகம் பேசும் நிலையில் நான் இல்லை..... என் மனதில் எழுந்த கேள்விகளுக்கான விடையும் இன்னும் கிட்டவில்லை... ஆதலால் என் பெரியம்மாவிடம் என் கேள்விகளை முன் வைத்து.... எங்கள் பூசாரி வம்ச வரலாறை சொல்லும்படி பணிந்தேன்.... பெரியம்மாவும் பெரியப்பா மற்றும் எனது பாட்டி தாத்தா மூலம் செவிவழியே கேட்டறிந்த சம்பவங்களை சுருக்கமாக கோர்வையாக சொல்லி முடித்தார்....
முழுதாய் கேட்டு முடிப்பதற்குள்..... எனக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி , நான் மேன்மேலும் இன்ஹேலரை பயன்படுத்த, உடல் சில்லிட்டு மயங்கியேபோனேன்..... எனக்கு சில முதுலுதவி சிகிச்சைக்கை அளித்ததற்குப் பின்பு .... சென்னை நோக்கி திரும்பும் பயணம் எந்த சிரமமும் இன்றி சுகமாய் முடிந்தது....

சென்னை திரும்பியதும் பணிச் சுமை, வீட்டு வேலைகள் அனைத்திலும் உடல் முழுதாய் ஈடுபட்டிருந்தாலும், என் உள்ளத்தில் எழுந்த கேள்விகளுக்கான விடை தேடலில் மனம் அகோரியாய் அலைந்தது.... என் தந்தையின் செல்லத் தங்கையும் எனது பாசமிகு சின்ன அத்தையுமான திருமதி.இராஜம்மாள் அவர்கள் மூலம் என் கேள்விகளுக்கான ஒரு விடியல் வந்தது.... , ஆம்! அது என் சிறிய தந்தை டாக்டர்.வை.செல்வமுத்து அவர்கள் எழுதிய , “ஆலடி கண்ட கற்பக சித்தர்” என்ற அற்புதமான நூல் தான் அந்த விடியல்... அந்த நூல்தான் என் மனதில் எழுந்த அத்தனை கேள்விகளுக்கும் ஆணித்தரமான, ஆதாரத்துடனான விளக்கமான விரிவான விடையை தந்தது.... அந்த நூலின் சாரம்சத்தை சுருக்கமாய் நீங்களும் அறிய இதோ இங்கே சமர்ப்பிக்கிறேன்......

எங்கள் பூர்வீக மண்ணான குறும்பூர் அருகே உள்ள கல்லால் என்னும் கூழையன் குண்டே நாங்கள் வழிபடும் வைதிலிங்க சுவாமி ஆதியில் குடிகொண்ட தலமாகும்.... அக்காலத்தே இக்கோயிலை 60 வீட்டு கார்காத்த பிள்ளைமார்கள் நிர்வகித்து தவறாது பூசைகள் நடத்தி வந்தனர். விதிவசத்தால் மதிகெட்டு, அத்தலத்தில் புதைந்திருந்த பெரும்புதையல் பற்றி ஒரு மந்திரவாதி மூலம் அறிந்து , பேராசையில் கட்டுண்டு அதை எடுக்க முழுமூச்சாக செயலில் இறங்கினர்..... அப்போது குறும்பூரில் வாழ்ந்து வந்த சிறந்த சோதிடர் மற்றும் முக்காலமும் கணிக்கும் சித்தர் ஒருவரைப் பற்றி அறிந்து அவர் உதவியை நாடினர்.... அந்த 60 குடும்பத்தார் அழைப்பின் பேரில் சோதிடர் கல்லால் தலத்திற்கு வருகை புரிந்து இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.... ஞானதிருஷ்டியில் தான் எதற்காக அழைத்து வரப்பட்டோம் என்பதை அப்போதே உணர்ந்தார்..... முதலில் இத் தீச்செயலுங்கு உடந்தையாக வேண்டாம் என்று மறுத்தார்...பின்னர் புதையல் வெளிப்படவேண்டிய காலம் இதுவே என்பதை உணர்ந்ததால், அதை எடுப்பதற்கான வழியை மையோட்டம் பார்த்து விளக்கினார்..... அந்தப் புதையலுக்கு 21 பரிவார தேவதைகள் காவல் நிற்பதையும், அந்த தேவதைகள் மாசி மாதம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயிலில் நடைபெறும் 7ஆம் திருநாளுக்குச் சென்றுவிடுவர்..... அவ்வாறு செல்லுகையில் சப்பாணி மாடனை காவலுக்கு வைத்துச் செல்வர்.... அந்நேரம் சப்பாணி மாடனை மந்திரத்தால் கட்டுப்படுத்த ஒரு சூல் பன்றி, ஒரு சூல் ஆடு மற்றும் ஒரு நிறை சூலியை பலிக் கொடுத்தால், புதையலை எடுத்துவிடலாம் என்ற வழியையும் எடுத்துக் கூறியுள்ளார் ...,,, 60 குடும்பத்தாரும் பூசைக்கு வேண்டிய பொருட்களுடன் , பலியிட சூல் பன்றி மற்றும் சூல் ஆட்டுடன் 7ஆம் திருநாளை எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.... ஆனால் பலியிட முக்கியத் தேவை ஒரு நிறைசூலி.... விதிவசத்தால் அதுவும் அவர்களுக்குக் கிட்டியது... அவ்வூர் வழியே இரவில் தனியே பயணித்த முத்துப் பகடை தான் அந்த நிறைசூலி... இரவில் அவளுக்கு அடைக்கலம் தருவதாக அரவணைத்துப் பேசி அழைத்து வந்தனர்..... அன்றிரவே பூசை நடந்தது... பலியிடுதலும் இரக்கமின்றி நடந்தேறியது.... மரணத் தருவாயில் , வேதனையின் உச்சத்தில் , சோதிடரை நோக்கி இனி ஏழு தலைமுறைக்கு உன் வம்சத்தில் பெண் வாரிசே பிறக்காது என்றும் 60குடும்பத்தாரையும் பார்த்து அவர்கள் குடி முழுதும் நாசமாகும் என்றும் சாபமிட்டாள் அந்த அபலைப் பெண் முத்துப் பகடை.....

( பூசாரி வம்சத்தில் ஏழு தலைமுறையாக பெண் வாரிசே பிறக்கவில்லை. பின்னர் எட்டாம் தலைமுறையான பூ.ந.வைதிலிங்கம் பூசாரிக்குத்தான் பெண் வாரிசுகள் பிறந்தன. )

புதையல் எடுக்கப்பட்டது.... சோதிடருடன் சேர்த்து 61 பங்கு வைக்கப்பட்டது.... குற்ற உணர்வால் சோதிடர் தன் பங்கை புதையல் கண்ட குழியிலேயே விட்டெறிந்து மூடி, தன் சொந்த ஊரான குறும்பூர் போய்சேர்ந்தார் ....
திருவிழாவிலிருந்து திரும்பிய தேவதைகள் நடந்ததை அறிந்து கோபமுற்று அந்த 60 குடும்பத்தாரையும் எரித்து சாம்பலாக்கியது. அதில் பேறுகாலத்திற்காய் தன் தாய்வீடு சென்றிருந்த ஒரு பெண்ணும் , அவளுக்குப் பிறந்த ஆண் குழந்தை மட்டுமே உயிர்பிழைத்தனர்.....இன்றும் அவர்வழிவந்த வாரிசுகளே அங்கு வாழ்ந்துவருகின்றனர்....
சாபம் பெற்ற அச்சத்தில் ஊர் திரும்பிய சோதிடர் தன் ஒரே மகனிடம் , எக்காரணம் கொண்டும் வடதிசை(புதையல் கண்டெடுக்கப்பட்ட இடம்) நோக்கிச் செல்லக்கூடாது என்று கட்டளையிட்டார் ... மகனோ வேட்டையாடுவதில் ஆர்வம் மிகுந்தவன்.... தன் தந்தையின் கட்டளையை மீறி வடதிசை சென்று நிறைந்த வேட்டையுடன் வெற்றிக்களிப்பில் ஒருநாள் வீடு திரும்பினான் .... அன்று இரவே அவனுக்கு விசக் காய்ச்சல் ஏற்பட்டது... சோதிடரின் எந்த மருந்தும் மந்திரமும் பூசையும் காய்ச்சலை குணப்படுத்தவில்லை... ஒருநாள் இரவு மகனின் கனவில் இறைவன் தோன்றி , வடதிசை நோக்கிச் செல்... அங்கே வானில் ஒரு கருடன் தோன்றி மும்முறை வட்டமிட்டு ஓரிடத்தில் கொத்தும், அந்த இடத்தைத் தோண்டு, நான் தென்படுவேன், எடுத்துவந்து நீரும் நெல்பொறியும் வைத்து பூசைசெய்.. உன் நோய் குணமாகும் என்றார்.... மறுநாள் மகன் தன் தந்தையிடம் சொல்லாமல் வடதிசை நோக்கிப் பயணித்தான்... கனவில் கேட்டதுபோல் அனைத்தும் நடந்தேறியது.... புதையல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் பூசையின்றி மணல் மூடிக்கிடந்த வைத்திலிங்கம் திருவுருவம் வெளிப்பட்டது.... எடுத்துவந்து அதற்கு அனுதினமும் நீராலும் நெல்பொறியாலும் பூசைகள் செய்ய அவன் நோய் குணமானது.... அவ்வாறு எடுக்கப்பட்ட வைதிலிங்கமே , இன்றுவரை ஆலடிப்பட்டிக் கோயிலில் நாங்கள் வழிபடும் எம்பெருமான் ... அதை எடுத்த சோதிடர் மகனே எங்கள் குல தெய்வம் கற்பக சித்தர்....
தந்தை மறைந்தபின் பெரும் பஞ்சம் ஏற்படவே, கற்பக சித்தர் இறைவனின் திருச்சிலையை ஒரு ஓலைப் பெட்டியில் சுமந்து ஊர் ஊராகச் சென்று யாசகம் பெற்று இறைவனுக்கு தவறாது பூசைகள் செய்துவந்தார்..... காலப்போக்கில் சிவலார்குளம்(ஆலடிப்படிக்கு கிழக்கே உள்ள ஊர்) என்ற ஊரின் அருகே உள்ள மலையில் சென்று தங்கினார் ... அங்கு இறைவனை நீராட்ட தன் வேலால் மலையை குத்த ஒரு ஊற்று பெருக்கெடுத்தது... அதுவே எச்சி-நா-ஊற்று என்றழைக்கப்பட்டது.(இன்றளவும் அந்த ஊற்று உள்ளது) . பின்னர் கற்பக சித்தர் சிவலார்குளம் வீதிகளில் யாசகம் பெற்று அங்கு கண்மாய் அருகேயுள்ள நெக்கடை மரத்தடியிலேயே வாசம் செய்துவரலானார்.... அப்போது சிவலார்குள பண்ணையார் இராஜ பிளவை என்ற கொடிய நோயால் துன்பப்பட்டார். எந்த வைத்தியராலும் அதை குணப்படுத்த இயலவில்லை. இறைவனின் சித்தப்படி கற்பக சித்தர் அழைக்கப்பட்டார்... அவர் பூசித்துக் கொடுத்த நீரும் திருநீறும் நோயை பூரணமாய் குணப்படுத்தியது.... மகிழ்ந்த பண்ணையார் தன் நிலத்தில் எட்டில் ஒரு பங்கை கற்பக சித்தருக்கு வழங்கினார்.
பின்னர் இறைவன் கோயில்கொள்ள நிலையான இடத்தை தேடினார் சித்தர்... பத்ரகாளி அம்மன் கோயிலும் , அபிஷேகக் கிணறும் ஆலமரமும் கூடிய ஓரிடத்தை தேர்ந்தெடுத்தார் ... அங்கேயே கோயிலை நிறுவி எம்பெருமான் வைதிலிங்க சுவாமியை எழுந்தருளச் செய்தார்.... அந்த ஆலமரத்தைச் சுற்றி அமைந்த இடமே ஆலடிப்பட்டி என்று பெயர் பெற்றது.... மூப்பின் காரணமாய் அவருக்குப்பின் பூசைகள் செய்ய தன் சொந்தங்களை அழைத்து வந்து அவர்களையும் பூசையில் ஈடுபடச் செய்தார்.... அவர் காலமானப்பின் கோயிலில் எம்பெருமானின் இடப்புறம் அவருக்கு சமாதி அமைத்து, அவர் உருவச் சிலையையும் நிறுவி அவர் வம்சத்தார் அவருக்கும் பூசைவழிபாடுகள் செய்யத் தொடங்கினர் .... அது இன்றுவரை சிறப்பாக நடந்தேறிவருகிறது.... சித்தரின் சிறந்த வைத்திய சேவையால் வைதிலிங்க சுவாமிக்கு பக்தர்கள் பெருகினர்... அவர் எழுந்தருளிய ஊரும் வளர்ந்தது...வைதிலிங்கபுரம் , சிவகாமிபுரம், காசியார்புரம் என கோயிலைச்சுற்றி சில குடியிருப்புகள் தோன்றின....

கற்பக சித்தரின் வழித்தோன்றல்களான எங்கள் வம்சமே வழிவழியாக இந்த வைதிலிங்க சுவாமிக்கு பூசைகள் செய்து வருவதால் எங்கள் குடும்பம் பூசாரிக் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது...... முத்துப் பகடையின் சாபம் தணிக்கவே அவருக்கு குடும்பத்தின் சார்பில் இன்றளவும் சாந்தி செய்யப்படுகிறது .... என்னதான் பல தலைமுறைகளுக்கு முன்பே குறும்பூரிலிருந்து எங்கள் வம்சம் ஆலடிப்பட்டியில் புலம்பெயர்ந்திருந்தாலும், குடும்ப சுப காரியங்கள் நடைபெறும்போது எம்பெருமான் முதல்முதலாய் கோயில் கொண்டிருந்த கல்லால் தலத்திற்குச் சென்று வழிபட்டுவருவது இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளோம் ..... கற்பக சித்தர் வழிவந்த பூசாரி வமசத்தில் பிறந்தவள் என்பதில் நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்....

( எங்கள் பூசாரி வம்ச வரலாறை எழுத எனக்கு பேருதவியாக இருந்த , “ஆலடி கண்ட கற்பக சித்தர்” என்ற நூலை எழுதிய என் சிறிய தந்தை டாக்டர்.வை.செல்வமுத்து அவர்களுக்கும், சிறிய தந்தைக்கு இந்நூலை எழுத அனைத்துத் தகவல்களையும் வழங்கிய திரு.சுடலை முத்துப்பிள்ளை மற்றும் சேர்மன் அவர்களுக்கும், இந்நூலை எழுதத் தூண்டிய என் சித்தி டாக்டர்.இராசலட்சுமி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்)

எழுதியவர் : வை.அமுதா (16-Jun-21, 9:44 am)
பார்வை : 21

மேலே