7 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 7
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

முந்தைய தலைமுறை மக்கள் அனைவரும் எளிமையான கூரை வீடு, ஓட்டு வீடு, காரை வீடுகளில் வசித்து வந்தார்கள். குடியிருக்கும் வீடுகளுக்கு அருகிலேயே கிணறு வெட்டி அதில் இருக்கும் நீரை வாளிகொண்டு, அவன் தேவைக்கு தகுந்தவாறு தண்ணீரை இறைத்து, இன்பமாக வாழ்ந்து வந்தான். காலப்போக்கில் மக்கள் பலவிதமான ஆடம்பரமான வீடுகளில் வசிப்பதற்கு கற்றுக் கொண்டான். அவன் குடியிருக்கும் வீட்டுக்குள் தண்ணீர் குழாய்கள், கழிப்பறைகள் என்று வசதி வாய்ப்புகளை பெருக்கிக்கொண்டு, அப்படிப்பட்ட வீடுகளில் வசிப்பதில் சுகம் கண்டான். அப்படி வசதியாக வாழ்ந்த மனிதன், சூழ்நிலையின் காரணமாகவோ இயற்கையின் சீற்றத்தின் காரணமாகவோ ஏதோ ஒரு காரணத்தினால் தான் வசிக்கும் வசதியான வீடுகளை, மாடமாளிகைகளை இழந்து விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம்.

முன்பு அவன் வாழ்ந்த எளிமையான கூரைவீடு, ஓட்டு வீடு, காரைவீடு போன்ற வீடுகளில் வசிப்பதற்கு அவனது மனம் விரும்புவதில்லை. ஏன் என்றால் அவன் ஆடம்பரமான வீடுகளில் வசதியாக வாழ்ந்து சுகம் கண்டு அதிலேயே மூழ்கி விட்டான் என்பதைவிட, அதற்கு தன்னை அடிமையாகி விட்டான் என்றுதான் கூறவேண்டும். அதிலிருந்து மனம் மீள்வதற்கு அவனால் முடிவதில்லை. அவன் முன்புபோல் எளிமையான வீடுகளில் வசிப்பதற்கு மனம் இடம் கொடுத்தாலும், அவனது தன்மானம் அப்போது இடம் கொடுப்பதில்லை. இந்த மனநிலையானது மனிதனை அமைதியற்ற வாழ்க்கைக்கு துன்பநிலைக்குத்தான் அவனை இழுத்துக்கொண்டு செல்லும் என்பதையும் அவன் உணர்ந்து கொள்வதுமில்லை. மனிதன் ஆடம்பரமான வீடுகளில் வசிப்பது பற்றி ஆன்மீக வழியில் சிந்தித்துப் பார்க்கும்போது அதுவும் ஒருவகை பேராசைதான்.

மனிதன் ஆரம்பத்தில் கூரைவீடு, ஓட்டுவீடு, காரை வீடுகளில் அவன் வாழும்போது மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை, அவனுக்கு இப்போது மாளிகையில் அடுக்குமாடி வீடுகளில் வசிக்கும்போது கிடைக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்தால் ‘இல்லை’ என்றுதான் கூறவேண்டும். ஏன் என்றால் அவன் ஆடம்பரமாக வசதியாக வாழக்கற்றுக் கொண்டு விட்டான். இப்போது வசதிபடைத்த சிலர் தாங்கள் வசிக்கும் வீடுகளை கிரிக்கெட் மைதானம்போல் அளவுக்கு அதிகமான நிலப்பரப்பில் கட்டிக்கொள்கிறான். அதில் வசிப்பவர்கள் என்று எண்ணிக்கையை எண்ணிப்பார்த்தால் பெரும்பாலும் அவர்கள் குடும்பத்தில் உள்ள இரண்டு அல்லது மூன்று நபர்கள்தான் இருப்பார்கள். அவ்வளவு பெரியமாளிகைகள் போன்ற வீடுகள் அவர்களுக்கு அவசியம்தானா என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

அவன் வாழும் அந்த ஆடம்பரமான வீட்டின் பரப்பில் பல குடும்பங்கள் வசிக்கலாம் என்பது பற்றி அவர்கள் யாரும் சிந்தித்தும் பார்ப்பதில்லை. இதற்கு முக்கியமான காரணம் சமூகத்தில் தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்வது மற்றும் அவனது சுயநலம்தான் மற்றொரு காரணம் என்று கூறவேண்டும். அப்படிபட்ட மாடமாளிகையில் வசதிபடைத்தவர்கள் வாழ்ந்து ஒருவகை இன்பத்தில் தங்களைத் தாங்களே சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் (status) என்று மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டிக்கொள்கிறார்கள். பொதுவாக மனிதமனங்கள் எதிர்பாராமல் கிடைத்த இன்பங்களை சுகங்களை நுகர்ந்தபின், அதில் இருந்து விடுபட இயல்பாக மனிதமனங்கள் மறுக்கிறது. ஆனால் எதிபாராமல் வரக்கூடிய துன்பங்கள் துயரங்களிலிருந்து விடுபடுவதற்கு மட்டும் மனிதமனங்கள் துடிக்கிறது. இன்பங்களிலிருந்து விடுபட்டு மனஅமைதி பெறுவதற்கு மனிதமனம் துடிப்பதில்லை. மனிதர்கள் இன்பங்கள் துன்பங்களிலிருந்து எப்படி விடுபடவேண்டும் என்பதை ஆன்மிகம் வழிகாட்டுவதோடு, அவனை அமைதியான வாழ்க்கைக்கும் அவனையும் அறியாமல் அழைத்துச் செல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் முதலில் தனக்கு அடிப்படையான வசதிகள் மட்டும் கிடைத்தால் போதும் என்றுதான் விரும்புகிறான். அவன் விரும்பியபடி வசதி வாய்ப்புகள் கிடைத்துவிட்டால் அதில் அவன் மனம் இயல்பாகவே திருப்தி அடைவதில்லை. அதன் பின்பு ஆடம்பரமான வசதிகள் வாய்ப்புகளுடன் வாழவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறான். அதற்காக அவன் நேர்மையற்ற முறைகளில்கூட பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வதற்கு துணிகிறான். அதோடு அவனோட எண்ணம் செயல்பாடுகள் நின்று விட்டால் பரவாயில்லை. அவ்வாறு தான் விரும்பிய வசதி வாய்ப்புகள் கிடைத்து விட்டால், அந்த வசதி வாய்ப்புகள் தனக்கு சற்றும் குறைந்து விடக்கூடாது என்ற பயத்துடன் மனதில் நினைக்கவும் ஆரம்பித்து விடுகிறான். பிறகு தன்னோட வசதியான சுகமான இந்த ஆடம்பரமான வாழ்க்கையானது தன்னோட வாழ்நாள் முழுதும் அவைகள் தொடர வேண்டும் என்றும் விரும்புகிறான்.

எடுத்துக்காட்டாக ஒருவன் வீடு கட்டுவதற்கு தோண்டும்போது ஒரு தங்க நாணயம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவன் எதிர்பாராமல் கிடைத்த தங்க நாணயத்தினை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். அதன் பிறகு அவன் தோண்டும் இடமெல்லாம தனக்கு தங்கம் கிடைக்கிறதா என்று பார்ப்பதற்கு ஆரம்பித்து விடுகிறான். புத்தர் போதித்த ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்பதை அப்போது அவன் உணர்வதில்லை. ஒரு மனிதன் வாடகை வீட்டில் வசிக்கும்போது அவன் நினைத்தால் அதில் இன்பமாக வசிக்கலாம். ஆனால் அவன் மனதில் நமக்கு ஒரு சொந்த வீடு இருந்தால் நிம்மதியாக வசிக்கலாம் என்று நினைக்கிறான். அதில் தவறு ஒன்றும் இல்லை. அவன் எப்படியோ ஒரு சிறிய வீட்டினை சொந்தமாக வாங்கி விட்டான் என்று வைத்துக் கொள்வோம்.

அவன் வாங்கிய சொந்த வீட்டில் அமைதியாக இருக்கிறான் என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். தான் வாங்கிய வீட்டினை காட்டிலும் தன்னோட நண்பன் கட்டிய பெரிய வீட்டினை பார்த்தவுடன் அந்த பெரியவீட்டினைப்போன்று மற்றொரு வீட்டினை வாங்குவதற்கு நினைக்க ஆரம்பித்து விடுகிறான். அதற்காக அல்லும் பகலும் அவன் கவலைப்படுவதற்கு ஆரம்பித்து விடுகிறான். மனிதன் இப்படி ஒவ்வொன்றாக ஆசையை மென்மேலும் வளர்த்துக் கொண்டேயிருந்தால் எப்படி அவனுக்கு அவன் தேடும் விரும்பும் அமைதியான கவலையில்லாத வாழ்வு கிடைக்கும். இப்படித்தான் ஒரு பொருளை அடைந்தவுடன் மற்றொரு பொருளை அடைவதற்கு அவன் மனமானது ஏங்கிக்கொண்டு குரங்குபோல் தாவிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறது. பிறகு எப்படி அவனுக்கு அவன் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும். இதனைக் கருத்தில்கொண்டுதான் ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று ஆன்மிகம் மனிதர்களை ஆசைக்கு அணை போடச்சொல்லி வலியுறுத்திக் கூறுகிறது.

மனிதன் தனது முடிவில்லாத ஆசைக்கு, இன்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் பொருளைத் தேடிக்கொண்டும் கவலைப்பட்டுக்கொண்டும் இருக்கிறான். அதனால் அவன் வாழ்வில் அவனை அறியாமல் அவனது அமைதியான வாழ்க்கையையும் காலத்தையும் இழந்து கொண்டிருக்கிறான். அவன் தன்னோட ஆடம்பரமான எண்ணங்களை தன்னை விட்டு அகல வேண்டும் என்று நினைத்தால், அந்த எண்ணங்களை அகற்றுவதற்கு முயற்சி செய்தால், நிரந்தரமான அமைதியான வாழ்வு அவனுக்கு உறுதியாகத் தவறாமல் கிடைக்கும்.

உங்கள் உள்மனதில் விருப்பமுடன் ‘இந்த ஆடம்பரமான வாழ்வை ஒருபோதும் நான் விரும்பமாட்டேன். எனக்கு நல்ல வாழ்வைக் கொடு. மனஅமைதியைக் கொடு. அதற்கான சூழ்நிலையை எனக்கு கொடு’ என்று உணர்வுடன் இடைவிடாமல் நாள்தோறும் இறைவனிடம் வேண்டிக்கொள்ளுங்கள். அவ்வாறு இடைவிடாமல் வேண்டும்போது நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும். வாழ்வில் ஆடம்பரமான ஆசைகளை மனிதன் உள்மனதில் இருந்து நீக்கினால், அவன் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும் என்று அறிந்துகொண்டிருந்தும், தன்னோட ஆசைகளுக்கு ஒரு எல்லையினை வகுத்து அமைதியாக வாழ்வதற்கு பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மையாகும். நமது பேராசைக்கெல்லாம் இந்த ஆன்மீகம் அணை போடுகிறது. புராணக்கதைகள், உபநிடதங்கள் சாஸ்திரங்கள் இதிகாசங்கள் அமைதியான வாழ்க்கைக்கு, தத்துவக்கதைகள்,இதிகாசங்கள் பாசுரங்கள் மூலம் வழி காட்டுகிறது. (அமைதி தொடரும்)


எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (16-Jun-21, 1:08 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 45

மேலே