உங்களில் நானும் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன்

உங்களில் நானும் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன்!
மகிழ்ச்சியான வாழ்வை விரும்புபவன், கூடவே கொஞ்சம் புகழையும் விரும்புபவன்!
எவரேனும் இனிமையாக பேசினால், மயங்கி விடுபவன், மயங்கியும் விழுபவன்!
மனிதனின் தன்மைகள் பல இருப்பினும், அன்பையும் கருணையையும் மதிப்பவன்!
துன்பத்தில் இருப்பவருக்கு ஏதேனும் உதவிட முடியுமா என்று எப்போதும் சிந்திப்பவன்!
புன்னகையை ருசிப்பவன், நகைச்சுவை கொடுக்கும் சிரிப்பை ஆவலாக ரசிப்பவன்!
நல்ல சமையலின் சுவைக்கு அடுத்த சுவை, நகைச்சுவை என்று திடமாக நினைப்பவன்!
சிரிக்க சிரிக்க பேசுபவனாக இல்லாமல் போனாலும் ரசிக்க ரசிக்க பேசுபவன்!
எழுத்துக்களை எண்ணங்களின் சிறந்த எதிரொலியாகக் கருதி, எழுத விழைபவன்!
தேன் மொழி தமிழில் கட்டுரை வரைந்து, உலக மொழியான ஆங்கிலத்தின் சொற்களுடன் கலந்து, கூடிக் குலாவி, சிறிது விளையாடி மகிழ்ச்சி பெறுபவன்!
பிறருடன் கதைப்பதில், பிறரை ஊக்கப் படுத்துவதில் மிகவும் திருப்தி அடைபவன்!
காதல் என்பது தெய்வீகமானது, எனவே அது உடலளவில் இல்லை, உள்ளத்தில்தான் உணரப்பட வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையைக் கொண்டவன்!
பிறரைப் பேசும் போது, அவரைப் பற்றிய நல்ல வார்தைகளைப் பேசுவது சாலச் சிறந்தது என்று அடிக்கடி சொல்பவன்!
பணம், புகழ், பாராட்டு தான் வாழ்வின் பிரதானம் என எண்ணாமல், எளிமை, உதவும் உள்ளம், நகைச்சுவை உணர்வு, கற்பனை வளம், தனக்கென்று கொண்டுள்ள கொள்கைகளில் உறுதி, இவைதான் மனிதனுக்கு சந்தோஷத்தைத் தரும் என்பதில் மிகுந்த நம்மபிக்கை உள்ளவன்!
தியானம், உடற்பயிற்சி, இந்த இரண்டும் ஒருவருக்கு இரு கண்கள் என்பவன்!
இதற்கு மேலாக பேசினால், இவன் என்ன அதிகம் தற்பெருமை பேசுகிறான் என நீங்கள் நினைக்கலாம் என்றபடியால், என்னைப் பற்றிய முன்னுரையை இந்த அளவில் பின்னுரையாக உரைத்து, பொறுமையுடன் இந்த சிறிய பேச்சைக் காது கொடுத்து கேட்ட உங்கள் இனிய காதுகளில்....கீழே வரும் பாடல் வரிகளைப் பாடி, உங்கள் இரு காதுகளையும் பிளக்க முயல்கிறேன். என்றும் ஆரோக்கியமான மகிழச்சியுடன் வாழ. உங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

காதுகளில்தான் நான் பாடுவேன்
மனம் திறந்து தான் நான் பேசுவேன்
எளிமையானவரை தான் கொண்டாடுவேன்
வாழ்வு சில காலமே, சிரித்து வாழுங்களேன்!

உங்களில் நானும் ஒருவன், ஆயிரத்தில் ஒருவன்!

ஆனந்த ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (17-Jun-21, 3:06 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 33

மேலே