புன்மைகளைப் போக்கி நன்மைகளை நன்காற்றின் வானும் அவன்பால் வரும் - நீதி, தருமதீபிகை 829

நேரிசை வெண்பா

புன்மைகளை எவ்வழியும் போக்கிப் புனிதமாம்
நன்மைகளை எங்குமே நன்காற்றி - தன்மையுடன்
தானும் நடந்து தகைபுரிந்து வந்தானேல்
வானும் அவன்பால் வரும்! 829

- நீதி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

புலையான தீமைகளை யாண்டும் தலை காட்டாதபடி தடிந்து நீக்கிப் புனிதமான நன்மைகளை எங்கும் நன்கு வளர்த்து இனிய நேர்மையோடு அரசன் ஒழுகிவரின் வானமும் அவனுக்குத் தனி உரிமையாய் இனிமை சுரந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

சிறுமையான சின்ன இயல்புகள் ஒருமையாய் மருவிய வழி அது புன்மை என நின்றது. பெருந்தன்மைக்கு இது நேர் மாறானது. புன்மை தோய்ந்த பொழுது அந்த மனிதர் புல்லர், அற்பர், இழிஞர், கீழோர் என இழிவுறுகின்றனர். பெரிய தன்மைகள் அரிய நன்மைகளாய் வருகின்றன; சிறிய புன்மைகள் வெறிய தீமைகளாய் விரிந்து மனிதரைத் தாழ்த்துகின்றன.

தம் பிள்ளைகளிடம் நல்ல குணங்களும் கல்வியறிவும் வளர்ந்து வர வளர்த்து வருவது தாய் தந்தையர்க்கு முறையே உரிமையான கடமையாம். அத்தகைய மக்கள் வாழுகின்ற நாடே தக்க பான்மைகள் சுரந்து மிக்க மேன்மைகள் அடையும்.

இழிநிலைகள் யாண்டும் புகாமல் உயர்குண நிலைகளே எவ்வழியும் பரவி வரும்படி அரசன் பேணிவரின் அந்த ஆட்சி திவ்விய மாட்சியாய்ச் சிறந்து விளங்கும். மனித சமுதாயத்தை ஆள நேர்ந்தவன் முதலில் தன் பொறிகளை அடக்கி ஆளவேண்டும். புலன்களை அடக்கிப் புனித நெறியில் ஒழுகி வருபவனிடம் விழுமிய மேன்மைகள் எவ்வழியும் பெருகி வருகின்றன.

தன்னுடைய ஆட்சிக்கும் மாட்சிக்கும் தாழ்ச்சி தருவது எதையும் மன்னன் காட்சியிலும் காணலாகாது. கருமங்கள் யாவும் தரும நீதிகள் தோய்ந்து வர வாழ்ந்து வருபவனே விழுமிய வேந்தனாய் விளங்கி யாண்டும் உயர்ந்து வருகிறான்!

சினனே, காமம், கழிகண் ணோட்டம்,
அச்சம், பொய்ச்சொல், அன்பு மிகஉடைமை,
தெறல் கடுமையொடு, பிறவுமிவ் உலகத்(து)
அறம்தெரி திகிரிக்கு வழியடை ஆகும்:
தீது சேண்இகந்து, நன்றுமிகப் புரிந்து, 5

கடலும் கானமும் பலபயம் உதவ;
பிறர்பிறர் நலியாது, வேற்றுப்பொருள் வெஃகாது,
மைஇல் அறிவினர் செவ்விதின் நடந்து,தம்
அமர்துணைப் பிரியாது, பாத்துண்டு, மாக்கள்
மூத்த யாக்கையொடு பிணிஇன்று கழிய; 10
ஊழி உய்த்த உரவோர் உம்பல்! 22 - பதிற்றுப்பத்து

சேர மன்னனுடைய குண நலங்களையும் பரிபாலன நிலைகளையும் இது உரைத்துள்ளது. தரும சக்கரமான நீதிமுறைக்குத் தடைகளாயுள்ளவைகளை இதில் குறித்திருப்பது கூர்ந்து சிந்திக்கத்தக்கது.

கண்ணோட்டம் - இரக்கம், தாட்சணியம்; இது நல்ல குணமேயாயினும் பொல்லாதவர்களிடம் இதனைக் காட்டலாகாது; அவரைக் கடுமையாய்த் தண்டித்து ஒழிக்க வேண்டும்; அங்ஙனம் ஒழிக்காமல் இத்தண்ணளியை மன்னன் மருவி நின்றால் நீதிமுறை நிலைகுலைந்து போகும்; ஆதலால் ’கழிகண்ணோட்டம் அறம்தெரி திகிரிக்கு வழியடை’ என வந்தது,

ஓர்ந்துகண் ணோடா(து) இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை! 541 செங்கோன்மை

செய்த குற்றங்களை நன்கு ஆராய்ந்து நடுவு நிலைமையுடன் நின்று யோசித்து குற்றவாளி யாராயிருந்தாலும் இரங்கி விடாமல் தகுந்தபடி தண்டிப்பதே அரசனுக்குச் சிறந்த நீதிமுறையாம் எனத் தேவர் இவ்வாறு கூறியிருக்கிறார். பெற்ற பிள்ளையா யிருந்தாலும் குற்றம் செய்தால் அவனை உடனே தண்டிக்கவே வேண்டும் என்பார் ‘யார் மாட்டும்’ என எல்லை காட்டி நின்றார்.

தீமை செய்தவரைத் தண்டிக்காமல் இரங்கிவிடின் அது நன்மையைக் கொன்றபடியாம். தண்டனை யில்லையானால் தீயோர் மிஞ்சி வருவர்; அதனால் நல்லோர் அஞ்சி அலமருவர்; அரசும் நீதிமுறை அற்றதாய் நிலை குலைந்து இழிந்துபோம்.

Mercy to the criminal may be cruelty to the people. - Crime

குற்றவாளிகளுக்கு இரக்கம் காட்டுவது பொதுமக்களுக்குக் கொடுமை செய்தபடியாம் என்னும் இது இங்கே அறியவுரியது. ஆட்சியில் அவலம் நேராமல் ஆய்ந்து புரிய வேண்டும்.

In the public administration of justice, mercy to one may be cruelty to others. - Addison

நீதி முறையான ஆட்சியில் ஒருவனுக்கு இரங்குவது பல பேர்க்கு இடர் செய்வதாம் என அடிசன் என்பவர் இவ்வாறு குறித்திருக்கிறார், ஏதம் படியாமல் நீதம் புரிக.

He threatens the innocent who spares the guilty. - Coke

குற்றமுடையார்க்கு இடம் கொடுப்பவன் குணமுள்ள நல்லவர்களை அச்சுறுத்தி அல்லல் செய்கிறான் என இது உரைத்துளது. குற்றம் களைந்து குணம் பேணிக் கோன்முறை பூணுக.

தீய காரியங்களைச் செய்கிற தீவினையாளரை அடக்கி ஒழிப்பதே உயர்ந்த அரச நீதியாம்; அவ்வாறு செய்யாது விடின் நல்லவர்கள் அங்கே சுகமாய் வாழ முடியாது; ஆகவே அந்த ஆட்சி அவலமுடையதாய் இழிந்து ஒழிந்துபோம். தீயோர்க்குத் தீ; நல்லோர்க்கு அமுதம் என உயர்ந்தோர் புகழ்ந்துவர அரசன் ஒழுகிவரின் அவன் விழுமிய நீதிபதியாய் விளங்கி வருகின்றான்.

தன் நாட்டு மக்கள் நல்லவர்களாய் உயர்ந்து வாழ வேண்டுமானால் முதலில் அரசன் நல்லவனாய்த் திருந்தி ஆளவேண்டும்; தலைமையான சிறந்த பதவியை அடைந்தவன் தனது நிலைமையை உணர்ந்து எவ்வழியும் செவ்வியனாய் நீதி முறைகளைச் செய்துவரின் ஆதியிறைவன் அருளையடைந்து மேலும் திவ்விய கதிகளை எய்தி மகிழ்கின்றான். இறைமுறை புரிந்து இன்பம் பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-21, 8:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 24

சிறந்த கட்டுரைகள்

மேலே