உட்பகையை ஒட்டியுறல் தீதாம் ஒழி - யூகம், தருமதீபிகை 839

நேரிசை வெண்பா

உள்ளே பகைகொண்(டு) உறவினன்போல் வந்துநின்ற
கள்ளமுறும் விச்சுவனைக் கண்டவுடன் - பொள்ளெனவே
வெட்டி அமரர்கோன் வீட்டினான் உட்பகையை
ஒட்டியுறல் தீதாம் ஒழி! 839

- யூகம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உள்ளே கொடிய பகை கொண்டு வெளியே இனிய உறவினன் போல் கள்ளமாய் வந்த விச்சுவனை இந்திரன் உணர்ந்து உடனே அழித்தொழித்தான்; உட்பகை யாண்டும் தீயது; அதனை யாதும் அணுகாமல் அயலே அகற்றி விடுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனது குடிவாழ்க்கை எவ்வழியும் செவ்வையாய் நடந்து வர யாண்டும் விழிப்போடு பேணி வருபவனே மேலான குலமகனாய் விளங்கி வருகின்றான். சாதாரணமான குடிவாழ்வை விட அரச வாழ்வு அரிய பல கவலைகளையுடையது. சிறந்த செல்வங்கள் பெருகிவருந் தோறும் நிறைந்த கவலைகளும் நெடிய பகைமைகளும் நேரே தொடர்ந்து வருகின்றன.

பரந்த தேசத்தின் பாதுகாப்பு அவனிடம் உரிமையாய் அமைந்துள்ளமையால் எங்கும் நன்கு நாடிக் காக்கும் பொறுப்பு அவனுக்குக் கடுமையாய் நீண்டு நின்றது. மதியூகமான எச்சரிக்கையோடு மருவி வருமளவே அவனது ஆட்சி மாட்சியாய்ப் பெருகி வருகிறது. எவ்வகையிலும் பகை வகையில் விவேகமாயிருப்பவன் வெற்றி நிலையில் விளங்கி நிற்கின்றான்.

விச்சுவவுருவன் என்பவன் சிறந்த மதிமான்; அரிய பல கலைகள் பயின்றவன். அசுர குருவான சுக்கிரன் போல் இராச தந்திரங்களில் இவன் உயர்ந்திருந்தான். இவனுடைய அறிவின் திறத்தை வியந்து தனக்கு மந்திரியாகவும் குருவாகவும் சிந்தனை செய்து இந்திரன் இவனை மருவிக் கொண்டான். அசுரர் மரபினன் ஆதலால் அமரர் பால் இயல்பாகவே பகைமை கொண்டிருந்தான்; அந்த வஞ்சநிலையைத் தேவரரசன் அறிந்து கொள்ளவில்லை. தன் அரசு நலமுற ஒரு வேள்வி செய்ய விழைந்தான்; மந்திர முறையோடு அதனை விச்சுவனே செய்.ய நேர்ந்தான். உள்ளம் கள்ளமாய் ஊறு செய்ய விரைந்தான். தானவர் வாழவும் வானவர் தாழவும் கரவாக அவன் உருச்செபித்து வந்தான். அந்த வஞ்ச நிலையை இந்திரன் யூகமாய் உணர்ந்து ஒல்லையில் விரைந்து அவனை உடனே வெட்டி வீழ்த்தினான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கைதவக் குரவன் மாயங்
..கருதிலன் வேள்வி யொன்று
செய்திட லடிக ளென்னத்
..தேவர்கட் காக்கங் கூறி
வெய்தழல் வளர்ப்பா னுள்ளம்
..வேறுபட் டவுணர்க் கெல்லாம்
உய்திற நினைந்து வேட்டான்
..றனக்குமே லுறுவ தோரான்! 10

வாக்கினான் மனத்தால் வேறாய்
..மகஞ்செய்வான் செயலை யாக்கை
நோக்கினா னோதி தன்னா
..னோக்கினான் குலிச வேலால்
தாக்கினான் றலைகண் மூன்றுந்
..தனித்தனி பறவை யாகப்
போக்கினா னலகை வாயிற்
..புகட்டினான் புலவுச் சோரி! 11

- இந்திரன் பழி தீர்த்த படலம், மதுரைக் காண்டம், திருவிளையாடல் புராணம்

நெஞ்சில் பகைமை மண்டி வெளியே நல்லவன் போல் நணுகியிருந்த நயவஞ்சகனை அமரர் கோன் அழித்து ஒழித்திருப்பதை இவை உணர்த்தியுள்ளன. கபடமாய்ச் செய்கின்ற அவனது செயல் இயல்களைக் குறிப்போடு கூர்ந்து ஓர்ந்து கொண்டானாதலால் ஓதி தன்னால் நோக்கினான் என்றார். ஓதி - ஞானம். அரிய மறைகளை ஒதியுணர்ந்ததனால் விளைந்த யூகம் ஓதி என வந்தது. யாகத்தில் பகைவனால் நேர்ந்த அபாயத்தைத் தனது யூகத்தால் கடந்து மகவான் உய்தி பெற்றிருக்கிறான்.

உய்த்துணர்கிற புத்திமான் எத்தகைய இடர்களையும் விரைந்து நீக்கி வெற்றி பெற்று வருகிறான் கூரிய அறிவு சீரிய தெய்வீகமுடையதாதலால் அதனையுடையவன் அல்லல் யாதும் நேராமல் நல்ல சுகத்தை நேரே நன்கு காண்கின்றான்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்(கு) இல்லை
அதிர வருவதோர் நோய்! 429 அறிவுடைமை

பின்னே வருகிற அபாயத்தை முன்னதாகவே யூகமாய் அறிந்து காக்க வல்ல விவேகமுடையவர்க்கு நடுங்கத் தக்க துன்பம் யாதும் நேராது எனத் தேவர் இவ்வாறு குறித்திருக்கிறார்.

எவ்வகையிலும் இடர் நேராமல் செவ்வையாகப் பாதுகாத்துத் தன் சீவியத்தை இனிது நடத்துகின்றவன் எவனோ.அவனே யாண்டும் சிறந்த மேதையாய் உயர்ந்து திகழ்கின்றான்.

மதியூகம் அதியோகம் என்பது பழமொழி. சித்த சுத்தியும் தெளிந்த புத்தியும் தெய்வத்தின் நிலையங்களாயுள்ளன. ஆகவே அவை அமைந்தபோது அங்கே அதிசய மகிமைகள் தோன்றுகின்றன. ஞானம் தெய்வத்தின் தானமாயுள்ளது.

No divinity is absent if prudence is present - Juvenal

யூகம் உள்ள இடத்தில் தெய்வீகம் உள்ளது என்னுமிது இங்கே உணரவுரியது. அரியமதி பெரிய விதியாய்ப் பேராண்மை புரிகிறது. நல்ல அறிவால் நலம் பல விளைகின்றன.

தனது மேதையால் இந்திரன் ஏதம் நீங்கினான். பகை வகையினரை எவ்வகையிலும் நம்பலாகாது என்று அன்று முதல் அவன் நன்கு தெரிந்து கொண்டான். மயிரை ஒட்ட மழித்தாலும் மறுநாள் அது தலைநீட்டும்; உள்ளத்தின் செயிரும் அவ்வாறே உருத்து வரும். அகத்தில் செயிரோடு தோய்ந்துள்ள பகைவனை முகத்தின் மயிரோடு ஒப்பக் காட்டியது இகல் மூண்டு நீண்டு வரும் நிலைமையை நேரே தெரிய என்க.

நேரிசை வெண்பா

உள்ள மயிரை ஒழித்தாலும் ஒல்லையது
மெள்ள முளைத்து மிகுதல்போல் - உள்ளம்
பகையானார் வஞ்சம் பறித்தாலும் உள்ளே
தொகையாமே நம்பல் துயர்

- கவிராஜ பண்டிதர்

பகைவன் எவ்வளவு பணிந்து தணிந்தாலும் அவனைத் தகைவனாக நினைந்து நம்பாதே; தகுதியாக உணர்ந்து ஒழுகுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-21, 10:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே