ஒற்றையாய் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்

ஒற்றையாய் உட்கார்ந்திருக்கும் பிள்ளையார்

இங்கு வந்து நூறு
வருடங்கள் கூட
இருக்கலாம்

ஆரவாரமாய் அன்று
ஓடிக்கொண்டிருந்த
இந்த நதியின் ஓரம்
“பிள்ளையார்” இருந்தால்
நல்லது

கல்லாய் இருந்த என்னை
உருவமாய் செதுக்கி
கொண்டு வந்து வைத்தார்கள்
என் பின்னால்
ஒரு ஆலமர
பிள்ளை செடியையும்
நட்டு வைத்து சென்றார்கள்

நான் இருந்த
இடம் ஊரின்
முக்கிய புள்ளியாய்
இருந்த காலமும்
இருந்தது

காலையும் மாலையும்
விளக்கேற்றி வைத்து
விட்டு மணலில்
"அ"ஆ' என
என் முன்னால்
ஆசிரியர்கள் வகுப்பெடுத்த
காலமும் உண்டு

அதற்கு
திண்ணை பள்ளி கூடம்
என்று பெயர்
வைத்திருந்தார்கள்

ஊரே என் முன்னால்
குவிந்து வழக்கு
நடத்திய காலமும்
இருந்தது

எல்லாம் காலப்போக்கில்
காணாமல் போய்
கிராமமாய் இருந்த
ஊர் கூட
இன்று நகரமாய்
ஆகிப்போனது.

ஆரவாரமாய் ஓடிய
இந்த நதி கூட
இன்று நாற்றமெடுக்கும்
ஒரு சாக்கடையாய்

ஆலமரத்தின் கீழில்
குளுமையாய்
இருந்தது

யார் கண் பட்டதோ?
மரம் போக்குவத்துக்கு
இடைஞ்சல் என்று
அதற்கு மொட்டை
அடித்து என்னை போல்
மரத்தையும் ஒற்றையாய்
நிற்க வைத்து விட்டார்கள்

நேற்று வரை
வயது போன கிழவன்
ஒருவன்
என் அருகில் அமர்ந்து
உன் முன்னாடி
உட்கார்ந்து நான் படிச்சேன்
இப்படி ஆரம்பித்து
நூறு வருட கதை
பேசி பழைய ஞாபகத்தை
கிளப்பி விட்டு செல்வான்

அவனும் இன்று காலை
பரலோகம் போய்விட்டதால்
ஒற்றையாய் உட்கார்ந்திருக்கிறேன்

கிட்டத்தட்ட நூறு
வருடங்களாய் !

இன்று இந்த ஊர்
தவறு பெரிய நகரம்

நின்று என்னை கும்பிடுவதற்கு
நேரமில்லாமல்
கன்னத்தை இரண்டு புறம்
கையால் தட்டி விட்டு

தலை தெறிக்க
பறந்து கொண்டிருக்கிறார்கள்
மக்கள்..!

இந்த நூறு
வருடத்தில்
மனிதர்கள் வாழ்க்கை முறை
மட்டுமல்ல,

என்னை சுற்றி இருந்த
எல்லாமே மாறித்தான்
போய்விட்டன !

வானுயர கட்டிடங்கள்,
அதில் அடைந்து வாழும்
மக்கள்

நான் மட்டும்
தன்னந்தனியாய்

எப்பொழுதோ ஒருவர்
விளக்கு ஒன்றில் எண்ணெய்
ஊற்றி எரிய வைத்து
கொஞ்சம் வெளிச்சத்தை
காட்டிவிட்டு காணாமல்
போய்விடுகிறார்கள்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jun-21, 11:53 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 31

மேலே