குடியிருந்த கோயில்

குடியிருந்த கோயில்
======================
குடித்தவன் தள்ளாடிக்
குப்புற வீழ்ந்திடினும்
குடியிருந்தக் குப்பிகள்
குப்புற வீழ்வதில்லை
**
குடிகாரன் பார்வையில்
வெற்றுக் குப்பிகள்
குடியிருந்த கோயிலாகின்றன
**
மது நிரம்பியக் குப்பிகள்
போதை வரமளிக்கும்
தெய்வமாகின்றன
**
குடிகாரன் நன்றியுள்ளவன்
அதனால்தான்
முனி கோயிலில் ஆடுவெட்டி
தெய்வத்திற்கும் மதுக்குப்பிவைத்து
தீர்த்தம்போல் இரண்டு சொட்டுப்
படையலில் தெளித்துவிட்டு
மீதியைத் தானே குடித்துவிடுகிறான்
**
என்றாலும்
குடியேறினாலும் இறங்கினாலும்
நிமிர்ந்து நிற்கும் குப்பிகளைபோல்
குடிகாரர்கள் இல்லை,
அவர்கள் தானும் குடித்துத்
தன் குடும்பத்தையும் குடித்து
விடுகிறார்கள்!
**
குடித்துக் குடித்து நோயில் விழும்
குடிகாரர்கள் நலன்கருதி
புதுப்புது மருத்துவமனைகளை
திறந்துவைக்காத அரசு.
தனக்கு வருமானம் குறையுமென்று
தன் மக்கள் நோயில் விழ
மதுபான சாலைகளை மட்டும்
புதிதுபுதிதாக திறந்துவிடுகிறது
**
ஒரு குடிகாரன்
குடிக்கும்போது அரசுக்கு
வருமானத்தையும் .
நோயில் விழுகையில்
மருத்துவமனைகளுக்கு
வருமானத்தையும்
இறக்கும்போது மலர்ச்சாலைகளுக்கு
வருமானத்தையும்
கொடுத்துவிட்டே போகிறான்,
**
குடி குடியைக் கெடுத்தாலும்
குடியரசை வாழவைத்துக்
கொண்டுதானிருக்கிறது
**
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Jun-21, 1:37 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 53

மேலே