எல்லை தாண்டு

எல்லை தாண்டு

மண்ணில் போட்டு
மறைத்தாலும்
விண்ணில் விரிய
விலங்குகள் ஒடித்து
எல்லை கடக்கிறது விதை!

போட்ட இடத்தில்
பொய்த்துப் போகாமல்
புவி அடுக்குகளை துருவி
புலன் விசாரணை செய்கிறது
நீருக்காக வேர்கள்!!

மட்டைப்பந்து
அடிப்பவன் கூட
எல்லைக்கோட்டை
தாண்டி அடித்தால்
எழுந்து நின்று
சல்யூட் அடிக்குது
ரசிகர் கூட்டம்!!

முட்டையுள்
கட்டிப்போட்டு
சிறை இட்டாலும்
கொத்திக்கொண்டு
எல்லை தாண்டுகிறது
கோழிக்குஞ்சு!!

எட்ட முடியாது என
தெரிந்தும் கூட
இயன்றவரை
இலை கிளை பரப்பி
எல்லையை வளர்க்கிறது
விருட்சம்!!

சுற்றி சுற்றி
மறைத்தாலும்
சூழ்ந்து வரும் இருளை
சுடர்களால் கிழித்து
எல்லை கடக்கிறது கதிர்!!

மோதி மோதி
ஒத்திகை பார்த்து
ஒர்நாளில் சுனாமியாய்
எல்லை கடக்கிறது அலை!!

எத்தனை அழுத்தம்
வந்தாலும்
ஏழை போல இருந்துவிட்டு
கொதிக்கும் குழம்பாக
எல்லை கடக்கிறது எரிமலை!!

நீ மட்டும் ஏன்
குண்டு சட்டியில்
குதிரை ஓட்டுபவனாய்????

கொதித்து எழு!
பசித்த உன் வயிற்றுக்கு
பகலவனை உணவாக்கு!!

எல்லை கட!
காற்றைப்போல் திரி!
மேகம்போல்
உலா போ!

உலர்ந்து போன
மரங்களோடு
உறவு ஏற்படுத்து!!

மின்னலோடு
சல்லாபம் கொள்!
வானில் வட்டம் அடி!

எதிரிநாட்டு
செயற்கைகோள்களை
உன் கட்டுப்பாட்டில் வை!

மின்மினிகளோடு
சத்தமில்லாமல்
கூட்டணிப் பேசு!

நிலவிடம் ஒரு
கீற்று வாங்கி
காதலிக்கு பூ சூட்டு!!

நட்சத்திரங்களை
அள்ளிவந்து
நடுத்தெருவில்
விற்பனைக்கு வை!!

தென்றலை
கைதுசெய்து
உன் வீட்டுக் காவலில் வைத்து
விசாரணை செய்!!

எரிமலைகளை
இழுத்து வந்து
ஏழைகளின் அடுப்பிற்கு
சேவகனாய் அமர்த்து!!

மழை காற்று
அனல் புனல்
அத்தனையும் அடிமையாக்கு!!

அக்னி குஞ்சு நான் என்று
பாரதிக்கு பட்டயம்
எழுதி அனுப்பு!!

கவிஞர் புஷ்பா குமார்.
#தன்னம்பிக்கை
#வீரம்
#சமுகம்
#வாழ்க்கை

எழுதியவர் : கவிஞர் புஷ்பா குமார் (23-Jun-21, 1:50 pm)
பார்வை : 666

மேலே