அத்தியாயம் 8ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 8
ஆன்மீக வழியில் அமைதி......
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

மனிதன் உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவையானவை காற்று, நீர், உணவு, உடை இருப்பிடம் என்பது அனைவருக்கும் தெரியும். நாம், பசியின் காரணமாக சோர்ந்துபோய் உள்ள ஒருவனிடம் சென்று ‘என்ன வேண்டும் என்று கேட்டால், அவன் பசியைப் போக்கும் உணவுதான் வேண்டும் என்று அப்போது கேட்பான். அவனிடம் அப்போது விலை உயர்ந்த தங்கம், வைரம் போன்றவற்றை கொடுத்தாலும், அவன் விரும்பமாட்டான். மனிதன் பொதுவாக தனக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான பொருள்களை மட்டும் தேடிக்கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக மாணவனுக்கு எழுதுவதற்குத் தேவையானது ஒரு பேனா, பென்சில் போதுமானது. தேவைக்குமேல் பேனாவோ பென்சிலோ வைத்துக்கொள்வது ஆடம்பரம் என்று அவன் கருத வேண்டும். இப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஜாமற்றிப் பாக்சை திறந்து பார்த்தால் விதவிதமான பேனாக்கள் பென்சில்கள் என வைத்திருக்கிறான்.

மனிதர்கள் தேவைக்கு அதிகமாக எந்தப்பொருள் வைத்துக் கொண்டாலும் திருடனும் அவனும் ஒன்றுதான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த ஆடை, குடியிருப்பதற்கு வீடு. இதுதான் மனிதர்கள் வாழும் எளிமையான வாழ்க்கை ஆகும். உயர்ந்த சிந்தனை எளிமையான வாழ்க்கை என்பதை நம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆங்கிலத்தில் simple living high thinking என்று கூறுவார்கள். இப்படி மனிதன் எளிமையாக வாழ்ந்தால் அவன் வாழ்நாள் முழுதும் மன அமைதியுடன் வாழ்வான். இதனை வலியுறுத்திப் போதிப்பதுதான் ஆன்மிகம் காட்டும் அமைதிப்பாதையாகும்.

ஆன்மீகம் காட்டும் வழிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு, அதன்படி மனிதன் வாழும்போது, செயல்படும்போது, அவன் விரும்பும் தேடும் மனஅமைதிக்கான வழிகள் விரைவில் கிடைக்கும். மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் வாழும்முறையில் உள்ள வேறுபாட்டினை நினைத்துப் பாருங்கள். எடுத்துக்காட்டாக ஒரு பறவை தான் வசிப்பதற்கு மரத்தில் ஒரு கூடு மட்டும்தான் கட்டிக்கொள்ளும். தனது குஞ்சு பெரிதானால் அது வசிப்பதற்கு வேண்டுமே என்று எண்ணிகொண்டு மரத்தில் மற்றொரு கூடு கட்டுவதில்லை. காற்று மழையினால் தான் கட்டியிருக்கும் ‘இந்தக் கூடு அழிந்து விடும்’ என்று எதிர்பார்த்து மற்றொரு மரத்தில் வசதியான வேறு ஒரு கூடு எதுவும் கட்டுவதில்லை. இதில் பறவையின் செயலையும் மனிதர்களின் செயலையும் சற்று ஒப்பிட்டு பாருங்கள். மனிதனுக்கு பணம் மட்டும் இருந்தால், அவன் வீடு கட்டுவதற்கு இடம் இல்லையென்றால் கடல் நடுவேகூட வீடு கட்டிகொள்வான்.

மனிதர்கள் உடுத்தும் ஆடைகள் பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள். நமது முந்தைய தலைமுறைகள் பெரும்பாலும் எளிமையான ஆடைகளை அணிந்து, அதில் அவர்கள் திருப்தி அடைந்தார்கள். அவர்கள் மானம் காப்பதற்குத்தான் ஆடைகள் என்று கருதி எளிமையான ஆடைகளை அணிந்து திருப்தியடைந்தார்கள். அவர்கள் அன்று தாங்கள் அணியும் ஆடைகளுக்கு பெரும்பாலும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் தற்போது விதவிதமான ஆடம்பரமான ஆடைகளை அணிந்துகொண்டு, அதன் மூலம் தங்கள் நிலையை மக்கள் சமூகத்தில் உயர்த்திக் காட்டுவதற்கு தொடங்கி விட்டார்கள். மனிதர்கள் தன்னோட மானம் காப்பதற்கு மட்டுமே ஆடைகள் அணியும்நிலை என்பது மாறி, தற்போது சமூகத்தில் உயர்நிலையைக் காட்டுவதற்கு மக்களில் பலர் ஆடம்பரமான ஆடைகளை அணியத்தொடங்கி விட்டார்கள். சிலர் மற்றவர்கள்போல் விதவிதமான ஆடைகள் வாங்கமுடியவில்லையே என்று மனதளவில் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். மனிதன் இப்படி மனதளவில் ஏதோ ஒரு காரணத்தினால் கவலைப்பட ஆரம்பித்தால் அமைதி என்பது அவனிடமிருந்து விடை பெற்று விடும்.

மனிதர்கள் தங்களது ஆடைகளை குறிப்பாக பெண்கள் துணிக்கடைகளில் சென்று புடவைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு வீணாக அதிகநேரம் எடுத்துக்கொள்கிறார்கள். விலை உயர்ந்த ஆடம்பரமான உடைகள் அணிந்து, தங்களை சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று காட்டிக்கொள்வதற்கு ஆண்களும் பெண்களும் விரும்புகிறார்கள். அவ்வாறு விலைஉயர்ந்த ஆடைகளை அணிந்து பழக்கப்படுத்தியதற்கு பிறகு அவர்களால் மீண்டும் எளிமையான ஆடைகளை அணிவதற்கு, மாறுவதற்கு, அவர்கள் மனம் எளிதில் இடம் கொடுப்பதில்லை. அவர்களின் தன்மானமும் இடம் கொடுப்பதில்லை. அப்படிப்பட்ட மனித மனங்களை செம்மைப்படுத்தி வாழ்க்கையை எளிமையானமுறைக்கு மாற்றுவதற்கும் அதற்கான மனஉறுதி, மனஅமைதி பெறுவதற்கும் ஆன்மிகம் வழிகாட்டுகிறது.

மனிதர்கள் தாங்கள் உண்ணும் உணவைப் பற்றி சற்று சிந்தித்து பாருங்கள். அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்கள் எளிமையான ஆரோக்கியமான உணவுகளை உண்டு களித்தார்கள். உடலின் உழைப்புக்கேற்ற உணவினை சாப்பிட்டுக்கொண்டு ஆரோக்கியமாக நீண்டகாலம் வாழ்ந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் விதவிதமான வண்ண வண்ண உணவுகள், விரைவு உணவுகள் (fast food) விதவிதமான குளிர்பானங்கள் என்று உடல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய உணவுமுறைகளை மேற்கொள்கிறார்கள். இப்போது பெரும்பாலான மனிதர்கள் பசிக்காக உணவை உண்ணாமல், ருசிக்காக உண்ண ஆரம்பித்து விட்டார்கள். மக்கள் பசிக்காக உணவினை உண்ணும்போது உணவினை வீணாக்காமல் உண்டு மகிழ்ந்தார்கள். ஆனால் மக்கள் உணவினை ருசிக்காக தாங்கள் உண்ணும்போது உணவினை வீணாக்குவதோடு, வீணாக்குவது பற்றி எந்தவிதக் கவலையும் கொள்வதில்லை. நாம் உண்ணும் அரிசிசோறின் ஒவ்வொரு அரிசியிலும் விவசாயிகளின் கடின உழைப்பினால் கிடைக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் அவ்வாறு மனிதர்கள் உணர்ந்து கொண்டால் யாரும் தாங்கள் உண்ணும் உணவினை சாப்பிடாமல் வீணாக்கமாட்டார்கள்.

ஆரோக்கியமான உணவுகளை உரிய நேரங்களில் உண்ணாமல், நினைத்தபோதெல்லாம் ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் இப்போது மனிதர்கள் விதவிதமான நோய்களில் வீழ்ந்து துன்பப்படுகிறார்கள். மனிதனுக்கு வருகின்ற பலவகையான நோய்களை கண்டு ‘என்ன நோய் என்று டாக்டர்களுக்கு சில நேரங்களில் அறிந்து கொள்வதற்குக்கூட முடிவதில்லை. டாக்டர்கள் பலவிதமான மருந்துமாத்திரைகளை நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குணப்படுத்துவதற்காக கொடுத்துப் பார்க்கிறார்கள். இறுதியில் நோயின் தன்மையை மருத்துவர்களால் அறிந்து கொள்வதற்கு முடியவில்லையெனில் ‘அலர்ஜி’ அதாவது ஒவ்வாமை என்று அந்த நோய்க்கு முத்திரையை மருத்துவர்கள் குத்தி விடுகிறார்கள்.

மனிதன் தன்னோட உடல்நிலையானது பாதிக்கப்படும்போதுதான், அவன் தன்னோட உடநிலையைப் பற்றி நினைத்து கவலைப்படுவதன் மூலம் அவன் தன்னுடைய மனஅமைதியையும் இழக்கிறான் என்பதையும் உணர்ந்து கொள்வதில்லை. ஆரோக்கியமான வாழ்வுக்குத் தேவையான உணவுகள், உணவுமுறைகள் மருத்துவமுறைகள் என்று சித்தர்கள் ஞானிகள் தங்கள் அனுபவத்தின் மூலம் நமக்கு ஆன்மிக வழியில் பாடல்கள் மூலம் விளக்கி போதித்துள்ளார்கள். ‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பானே...’ என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது..

பாவம், புண்ணியம் என்பவைகள் நமது கண்ணுக்குத் தெரியாத பலன்கள் ஆகும். புண்ணியம் என்றால் துன்பமில்லாத ஆனந்தமயமான வாழ்க்கை என்றும், பாவம் என்றால் நீங்காத துன்பம் துயரங்கள் நிறைந்தது என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள். தங்கள் கண்களுக்கும் கருத்துக்கும் அறிந்தும் அறியாமல் புண்ணியமான காரியங்களை சிலர் இடைவிடாமல் செய்துகொண்டும், அதன்மூலம் வரக்கூடிய புண்ணியத்தின் பலன்களை வாழ்க்கையில் அடைந்து மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். இதனைத்தான் நாம் சிலநேரங்களில் ‘அதிர்ஷ்டம்’ அல்லது ‘குட்லக்’ என்று கூறிக்கொள்கிறோம்.

புண்ணியத்தைத் தேடுதல் என்பது தங்கள் அடிப்படைத் தேவைகளுடன், வாழ்க்கையில் இயன்றவரையில் தானதர்மங்கள் செய்தல் போன்ற செயல்களில் மனம் ஈடுபடவேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பாக இருத்தல் வேண்டும் என்பதை வடலூர் வள்ளல்பெருமான் சுருக்கமாக ஜீவகாருண்ய ஒழுக்கம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.. உலகில் சாதி மத வேறுபாடின்றி ஒற்றுமையுடன் ஆன்மீக வாழ்வை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும் என்று இராமகிருஷ்ணபரமஹம்சர் போதித்ததோடு மட்டுமல்லாமல் அவர் ஆன்மீக வழியில் அதன்படி வாழ்ந்தும் காட்டியுள்ளார்

நாம் ஏழை எளியவர்களுக்கு முடிந்தளவு உதவி செய்யவேண்டும் என்று சாஸ்திரங்கள் வலியுறுத்திக் கூறியுள்ளது. ‘எவனுடைய உள்ளம் ஏழை மக்களுக்காக கண்ணீர் வடிக்கின்றதோ அவனையே நான் மகாத்மா என்பேன், மற்றவர்கள் எல்லாம் துராத்மாவே என்பேன்’ என்று சுவாமி விவேகானந்தர் கூறி, ஏழை எளிய மக்களுக்கு இயன்றவரை உதவி செய்ய வேண்டும் என்று தன்னோட ஆன்மீக உரையில் சுட்டிக்காட்டி தெளிவுபடுத்தியுள்ளார்.

பிறர்மீது கோபப்பட்டு அவர்கள் மனம் புண்படும்படி பேசக்கூடாது என்றும், கோபத்தின் தன்மையால் சிந்திக்கும் திறனையே மனிதன் இழந்து விடுகிறான் என்று ஆன்மிகம் கூறுகிறது. பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பொறுமையின் அவசியத்தை வலியுறுத்தி பெரியவர்கள் கூறியுள்ளனர். கோபம் மனிதனுடையை மனஅமைதி கெடுவதற்கு முக்கிய காரணமாகிறது. மனிதனுடைய கோபத்தினால் அவனுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் என்ன என்பது பற்றி சிந்தித்து பார்க்கலாம்.(அமைதி தொடரும்)
எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (3-Jul-21, 9:15 am)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 55

சிறந்த கட்டுரைகள்

மேலே