அழகின் ஆடல் நூல் ஆசிரியர் தமிழ்மாமணி இலக்கியன் மதிப்புரை கவிஞர் இராஇரவி

அழகின் ஆடல்!

நூல் ஆசிரியர் : தமிழ்மாமணி இலக்கியன்!

மதிப்புரை கவிஞர் இரா.இரவி!

வெளியீடு : தமிழ்மகள் பதிப்பகம், எண் 16,
15ஆவது குறுக்குத் தெரு, அண்ணா நகர், புதுச்சேரி – 605 005. பக்கங்கள் : 44. விலை : ரூ.30.
******
அட்டைப்பட ஓவியம் நன்று. கருப்பு வெள்ளை என்றபோதும் சிறப்பு. பாராட்டுகள். நூலாசிரியர் தமிழ்மாமணி இலக்கியன் அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘தமிழ்மாமணி’ பட்டத்திற்கு முற்றிலும் பொருத்தமானவரே இலக்கியன் அவர்கள். இந்நூலின் மூலம் மரபுக்கவிதைகளால் இயற்கை முழுவதும் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். தமிழன்னைக்கு இயற்கையை பாடுபொருளாகக் கொண்டு ‘அழகின் ஆடல்’ என்ற அணிகலன் பூட்டி உள்ளார். பாராட்டுகள்.
(1) அழகின் ஆடல், (2) கடல், (3) காடு, (4) கதிர், (5) கழனி,
(6) வானம், (7) ஆறு, (😎 ஏரி, (9) குளம், (10) புதுச்சேரி - பஞ்சபூதங்களையும் அழகிய தமிழ்ச்சொற்களால் வர்ணித்து தான் பிறந்து வாழும் புதுச்சேரியையும் புகழ்ந்து அபடி உள்ளார். சொற்களஞ்சியமாக கவிதைகள் உள்ளன.
அழகின் ஆடல் !
மலைமுகட்டில் தவிழ்முகில் பள்ளத் தாக்கில்
வான்விளிம்பில் கதிரொளியில் மலையின் ஊற்றில்
கூனிநால்கள் சொட்டுகின்ற சுவையார் தேனில்
இலையடர்ந்து மரமடர்ந்தே குளிர்செய் காட்டில்
எழுந்துவரும் காட்டாற்று வெள்ளந் தன்னில்
சிலைவேடன் அம்பிங்கூர் மையில் எங்கும்
சிறந்திருக்கும் அன்பழகின் ஆடல் கண்டேன்.
எதுகை, மோனை, இயைபு மட்டுமன்றி உவமைகளுடன் இயற்கையை பாடுபொருளாக்கி நம் கண்முன்னே இயற்கைக் காட்சியை, இலக்கணம் மாறாத மரபுக்கவிதையால் ஊற்றில், காற்றில், தேனில், காட்டில் என சொல்லாட்சிகளுடன் இயற்கை வர்ணனை அருமையிலும் அருமை. பாராட்டுகள்!
கடல்!
ஆழ்கடலின் முத்துக்கோ அளவே இல்லை
அடங்கியுள் உயிர்களுக்கும் அளவே இல்லை
ஏழ்கடல்கள் உள்ளதென உரைப்பார் எல்லாம்
இவ்வுலகின் நீர்ப்பரப்பு முக்கால் என்பார்
வாழ்கின்ற மக்களுக்கு வளத்தைத் தந்து
வற்றாமல் பலகோடி ஆண்டு வாழும்
தாழ்வில்லாத தன்மைமிகு கடலே வாழி
தக்கதொரு மீன்வயலே என்றும் வாழி!
கடல் கண்டு ரசிக்க இனிமை தான். தமிழ்மாமணி இலக்கியன் வைர வரிகளில் கடல் அழகோ அழகாகி விடுகின்றது. கடலில் முத்துகள் உள்ளன. மீன்கள் உள்ளிட்ட பல உயிர்கள் உள்ளன. இவ்வுலகம் மூன்று மடங்கு கடலால் ஆனது போன்ற பல தகவல்களை மரபுக்கவிதையால் சுட்டி இருப்பது சிறப்பு. இக்கவிதைகள் பெரியவர்கள் மட்டும் அல்ல, குழந்தை-களையும் படிக்க வைத்தால் பொதுஅறிவு வளர்ந்து விடும்.
காடு !
அடர்காடு பசுங்கொடிகள் செடிகள் எங்கும்
ஆர்த்திருக்கும் இருள் மிகவும் சூழ்ந்திருக்கும்
நடம் பயிலும் வண்ணமயில் ; குயில்கள் பாடும்
நாற்றிசையும் விலங்கினங்கள் ஒலியெ ழுப்பும்
படமெடுக்கும் பாம்பொன்று கிளிகள் கத்தும்
பலாப்பழங்கள் வெடித்திருக்கும், மணம்ப ரப்பும்
குடர்கிழிக்கும் ஆமாவின் கூட்டம் செல்லும்
குரங்குகளின் ஆர்ப்பாட்டம் அதிருங் காடே!
காடு இதுவரை பார்க்காதவர்களும் பாடல் வர்ணனை மூலம் காடு எப்படி இருக்கும் என்பதை உணர்த்திடும் வண்ணம் வடித்த கவிதை நனி நின்று. மயில், கிளி, குரங்கு, பாம்பு, பலாப்பழம் என காட்டில் உள்ள விலங்குகளையும் பழங்களையும் மரங்களையும் செடி-கொடிகளையும் இயம்பிடும் அழகு, அழகு.
ஒவ்வொரு தலைப்பிலும் பல பாடல்கள் எழுதி உள்ளார். பதச்சோறாக ஒரு பாடலை மட்டும் எடுத்துக்காட்டி உள்ளேன்.
கதிர்!
கதிர்கண்டேன் ; காலையிளங் கதிரைக் கண்டேன்
கடற்பரப்பின் மேல் சிவந்த கதிரைக் கண்டேன்
எதிரிகளை வீழ்த்துதற்குக் கனலைச் சிந்தும்
எழுச்சிமுகக் கதிரவனை யானுங் கண்டேன்
அதிர்ந்தெழுந்தே ஆர்ப்பரிக்கும் கடலுங் கண்டேன்
அரியேற்றின் ஒளிமுகத்தை ஆங்குக் கண்டேன்
முதிர்வுற்ற தமிழ்வீரம் முளைக்கக் கண்டேன்
மூடவிருள் முழ்கிமறைந் தோடக் கண்டேன்!
உதயசூரியன் உதித்து வரும் அழகை, கடலில் சிவந்த சூரியனை ரசித்து ரசித்து வடித்த கவிதை நன்று. இயற்கையின் மீது தணியாத காதல் இருந்தால் தான் இப்படி இயற்கையை ரசிக்க முடியும். ரசித்ததை மரபுக்கவிதைகள் மூலம் காட்சிப்-படுத்தி உள்ள நயம் சிறப்பு. பாராட்டுகள்.
கழனி!
வகிடெடுத்த தலைபோல வாய்க்கால் தோன்றும்
வளர்பயிர்கள் நிலத்தாயின் பசுமைக் கூந்தல்
முகில்வானின் மேலாடை சரியும் காற்றில்
மூசைப்பொன் உருகிவரும் கீழை வானில்
எகினங்கள் பெருங்களிப்பில் வாய்க்கால் நீந்தும்
இசைபெருக்கும் சிட்டிணைகள் கிளைகள் தம்மில்
நெகிழ்ந்து வரும் இளங்காலை இன்பம் சேர்க்கும்
நிறைந்தோடும் வாய்க்கால் நீர் களிப்பில் துள்ளும்
நிலத்தை அணுஅணுவாக ரசித்து கவி வடித்துள்ளார். தலையில் வகிடெடுத்த உச்சியை, வரப்பிற்கு ஒப்பிடுகின்றார். பச்சைவயலை, நிலத்தாயின் பசுங்கூந்தல் என்று வர்ணிக்கிறார். கவிதைக்கு கற்பனை அழகு தான். கருங்கூந்தல் தான் எல்லொரும் கேள்விப்பட்டு இருக்கிறோம். பசுங்கூந்தல் என்று புதிய உவமை சொல்லி வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
புதுச்சேரி!
அழகு நகர் புதுவை நகர் இந்த நாளில்
அதிகமுள போக்குவர வினிலே சிக்கி
ஆழகிழந்து தவிக்கிறது சரிசெய் வோர்யார்?
அழுக்கடைந்த காற்றுமிகச் சூழ திங்கே!
வலுவிழந்து கட்டடங்கள் சூழாத திங்கே
உழைப்பாளர் வாழவழி இல்லை இங்கே
விழலுக்கு நீர் பாய்ச்சும் ஆட்சி இங்கே
விளங்குதையா! என்செய்வோம் இனியும் நாங்கள்?
அழகாக இருந்த புதுவை இன்று போக்குவரத்து நெரிசலாலும் சுற்றுசூழல் மாசாலும் அழகிழந்து வருவதை வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். புதுவை பழைய மாதிரியே புதுப்பொலிவு பெற வேண்டும் என்பது தமிழ்மாமணி இலக்கியன் அவர்களின் ஆசையாக உள்ளது. ஆசை விரைவில் நிறைவேற வாழ்த்துகள்.
வழக்கறிஞர் குழத்தூர் எசு. சுப்பிரமணியன் அவர்களின் வாழ்த்துரை நூலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது. மதிப்புரைக்-காக இந்நூலையும் ‘அழகியல் நூறு’ நூலையும் அனுப்பி வைத்த புதிய உறவு இதழ் ஆசிரியர் மஞ்சக்கல் உபேந்திரன் அவர்களுக்கு நன்றி.

எழுதியவர் : கவிஞர் இரா.இரவி (10-Jul-21, 2:43 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 93

சிறந்த கட்டுரைகள்

மேலே