மதியுடையார் சூழ்ந்துகொள நீதி சொலல் மந்திரியாய் வாழ்ந்து கொள்வார் - யூகி, தருமதீபிகை 843

நேரிசை வெண்பா

எதிர்வருவ(து) ஓர்தல் இறையுயர்வு நாடல்
முதிர்பயன்கள் ஓங்க முயறல் - மதியுடையார்
சூழ்ந்துகொள நீதி துணிந்துசொலல் மந்திரியாய்
வாழ்ந்துகொள்வார் மாண்பாகு மால்! 843

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பின்னே நிகழ்வதை யூகித்தறிதல், எவ்வழியும் அரசனுக்கு நன்மையை நாடுதல், சிறந்த வளங்கள் பல நாட்டில் விளைந்து வர முயலுதல், அறிஞர் எவரும் வியந்து கொள்ளும்படி நீதிகளை ஆராய்ந்து கூறுதல், தீதுகள் நேராமல் செவ்வையாய்ப் பேணுதல் முதலிய சீர்மைகள் மத்திரியின் நீர்மைகளாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மன்னனுக்கு உண்மைத் துணையாய் நின்று ஆட்சியை மாட்சியாய் நடத்தவுரிய அமைச்சன் இன்ன தன்மைகளோடு இசைந்திருக்க வேண்டும்; இவ்வாறு இசைந்த போதுதான் அந்த அரசு எந்த வகையும் இசைமிகப் பெற்று இனிது விளங்கும். நல்ல அமைச்சு அமைந்தால் நாடாட்சி எல்லா வழியும் எழிலாய் யாண்டும் தெளிவோடு ஒளிமிகுந்து உயர்ந்து திகழும்.

ஒரு வீட்டுக்குத் தலைவன் போல் நாட்டுக்கு அரசன் அமைந்திருக்கிறான்; அந்தத் தலைவனுக்குத் தலைவி போல் மன்னனுக்கு மந்திரி. மனையை உடையவள் மனைவி; மந்திரம் உடையவன் மந்திரி.

மந்திரம் - மறைமுறை, ஆலோசனை. பிறர் அறிய முடியாத அரிய மறைகளை முறையே அறிந்து சொல்பவன் எவனோ அவன் மந்திரி என வந்தான். அந்த மதி யூகியால் அரசுமுறை யாண்டும் பரசு முறையில் வரிசையோடு விளங்கி வருகிறது.

மனைக்கு விளக்கம் மனைவி; அரசுக்கு விளக்கம் அமைச்சன். என்பது முதுமொழி. இதனால் அவனது அமைதி அறியலாம்.

குடித்தனமும் துரைத்தனமும் ஒழுங்கே உணர வந்தன; ஒருவனுக்கு எவ்வளவு செல்வங்கள் அமைந்து இருந்தாலும் நல்ல மனைவி இல்லையானால் அவனது வாழ்வு தாழ்வாம்; அதுபோல் அரிய பல வளங்கள் நிறைந்திருந்தாலும் உரிய மந்திரி இல்லையானால் அந்த அரசு எந்த வழியும் இழிந்து அவலமாம்.

அரசனுக்குச் செவி கண் என்பது பழமொழி.

மதி யூகியான மந்திரியின் அறிவுரைகளைக் கேட்டுப் பருவம் தவறாமல் கருமங்களைக் கருதிக் கடைமைகளைச் செய்துவரின் அந்த அரசனது ஆட்சி அதிசய மாட்சிகளை அடைந்து வரும்.

நிகழ்கால நிலைகளையும், வருங்கால வகைகளையும் ஒருங்கே கூர்ந்துணர்ந்து காரியங்களை ஓர்ந்து செய்வது மந்திரியின் கடமையாய் வந்தது. உறுவதை உணர்வது யூகியின் இயல்பாம்.

மந்திரிக்(கு) அழகு வருபொருள் உரைத்தல்.
தந்திரிக்கு) அழகு தறுகண் ஆண்மை! - நறுந்தொகை

மந்திரிக்கும் தந்திரிக்கும் உரிய தன்மைகளை ஒரு மன்னன் இன்னவாறு குறித்திருக்கிறான். தந்திரி - சேனைத்தலைவன். எதையும் முன்னதாக யூகித்தறிந்து மன்னனுக்கு நன்னயமாகக் கருமம் புரிவதே மந்திரியின் தருமமாம்; ஆகவே அவனது அதிசய அறிவும் ஆலோசனை நெறியும் குறிப்பும் பொறுப்பும் தெரியலாகும். கூரிய சிந்தனையாளன் சீரிய மந்திரியாகின்றான்.

’ர்’ ஆசிடையிட்ட நேரிசை வெண்பா

வேந்தன் உளமறிந்து வேற்றோர் திறமறிந்து
ஏந்து குடிகள் இயல்பறிந்து – சா’ர்’ந்ததிறம்
எல்லாம் எதிருணர்ந்து என்றும் இறைக்கிதம்செய்
நல்லானே மந்திரியாம் நன்கு.

இந்தவாறு மந்திரி மதிக்கப்பட்டுள்ளான்.

நீதிமுறை கோடாமல் நெடிய புகழோடு வேந்தன் நிலைத்து வருவது அமைச்சன் ஆட்சி செலுத்திவரும் அமைதியாலேயாம். அவனது கல்வியறிவு பல்வகை நெறிகளிலும் பரவி நல்ல பலன்களை ஆற்றி வருகின்றது. ஆகவே உலகம் அவனைப் போற்றுகிறது.

வத்தவ தேசத்து மன்னனுடைய முதல் மந்திரி சிறந்த மதிமான். பகைவர்களால் நேர்ந்த அரிய பல அல்லல்களை எல்லாம் தனது அறிவின் திறத்தால் நீக்கி அரசை எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி வந்தமையால் அவனை அதிசய மதியூகி என்று உலகம் துதி செய்து வந்தது. உயர்ந்த யூகி என்று சிறந்த பெயரைத் தனி உரிமையாக அவன் இனிது அடைந்து நின்றான். அவனுடைய குண நீர்மைகளையும் வினையாண்மைகளையும் விநயங்களையும் வேந்தன் நினைந்து நினைந்து வியந்து மகிழ்ந்துள்ளான்.

பொன்றா வியற்கைப் புகழது பெருமையும்
ஆன்முலைப் பிறந்த வானிற அமிர்தம்
மலைப்பெய் நெய்யொடு தலைப்பெய் தாங்கு
வேறுபட் டேகினும் கூறுபட் டியலா
அன்பினின் அளைஇய நண்பின் அமைதியும்
15 அசைவில் தானை விசைய வெண்குடைப்
பெருநில மன்னர் கருமங் காழ்த்த
அருமதி நுனித்த அமைச்சின் ஆற்றலும்
இன்னவை பிறவுந் தன்வயின் தாங்கி 2 இலாவாண காண்டம் – 8 யூகி போதரவு, பெருங்கதை

யூகியைக் குறித்து வந்துள்ள இவை இங்கே யூகித்துணர்ந்து கொள்ளவுரியன. தேனும் பாலும் கலந்தது போலக் கோனும் இவனும் கலந்து மகிழ்ந்து உலகம் உவந்து வர ஒழுகி வந்தள்ளான். இவனுடைய மேதையால் மேதினி பல மேன்மைகளை அடைந்து வந்தது. வேந்தனும் மேலான புகழோடு மேவினான்.

அரசன் வீர தீரங்களால் விளங்குகிறான்.
அமைச்சன் புத்தி யுத்திகளால் துலங்குகிறான்.

அறிவு தெய்வ ஒளியாயுள்ளமையால் அதனையுடையவனை வையம் வாழ்த்தி வருகிறது. யாவும் அவன் வசமாய் வருகின்றன.

All countries are a wise man’s home,
And so are governments to some. - Butler

'எல்லா நாடுகளும் ஒரு ஞானியினுடைய வீடு ஆகின்றன; அதுபோல் அரச ஆட்சிகளும் சில அறிஞர்களுக்கு உரிமையாயுள்ளன' என்னும் இது ஈண்டு உணரவுரியது. அரசன் தேசத்துக்கு அதிபதியாயிருந்தாலும் மதியுடைய மந்திரியினாலேயே அது மாண்படைந்து வருகிறது. யூகம் மருவி வர யோகம் பெருகுகிறது. தக்க அமைச்சைத் தழுவி மிக்க மேன்மை பெறுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-21, 9:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

மேலே