உற்ற அரசுக்கு நாட்டிலுள்ளார் பயன்காணக் காட்டல் அமைச்சன் கடன் - யூகி, தருமதீபிகை 844

நேரிசை வெண்பா

உற்ற அரசுக்(கு) உறுதுணையாய் ஓர்ந்துலகம்
சுற்றி அறிந்து தொழில்செய்து - பற்றிநின்ற
நாட்டிலுள்ளார் எல்லாரும் நன்கு பயன்காணக்
காட்டல் அமைச்சன் கடன்! 844

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தன்னுடைய அரசனுக்கு உறுதித் துணையாய் அமர்ந்து, எதையும் கூர்ந்து ஓர்ந்து, உலகத்தை சுற்றி உணர்ந்து, நாட்டிலுள்ள குடிசனங்கள் யாவரும் சுகமே வாழ்ந்துவரத் தேர்ந்து செய்து வருவது அமைச்சின் உரிமையான கடமையாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன் நிலைமையையும் கடமையையும் கவனமாய்க் கருதிச் செய்து வருமளவே ஒருவன் தலைமை யுடையனாய்த் தழைத்து வருகிறான். உயர்ந்த பதவியில் உள்ளவன் தனது உரிமையைக் கருதிச் செய்யவில்லையானால் இழிந்துபட நேர்கின்றான். அவ்வாறு இழிவு நேராமல் தெளிவோடு வினைபுரிந்து வருபவன் தேசத் துணைவனாய்ச் சிறந்து உயர்ந்து யாண்டும் தேசு மிகப் பெறுகின்றான்,

அரச காரியங்கள் பலவகையிலும் பரந்து விரிந்தன; யாவும் பருவம் அறிந்து செவ்வையாய்ச் செய்யவுரியன; எவ்வழியும் விழிப்போடு பேணத் தக்கன; அத்தகைய வினைகளுக்கு உத்தமத் துணையாய் அமைந்துள்ளவனே வித்தக மந்திரியாய் விளங்கி நிற்கின்றான்; கூரிய அறிவு காரிய விளைவைக் காட்டி வருகிறது.

தேச மக்களுடைய வாழ்வு முழுவதும் ஆட்சி முறையில் அமைந்துள்ளமையால் அந்தக் கருமங்களின் காட்சியில் மிகவும் தேர்ச்சி அடைந்து அமைச்சன் யாண்டும் தெளிவு கொண்டு நிற்க வேண்டும். வினைத்திட்பம் விவேகத்தின் துட்பமாம்.

நேர்ந்த வினைகளை எல்லாம் நேரே நுணுகி அறிதல், வினையாளரை ஏவி எதையும் கூர்ந்து செய்தல், ஓர்ந்து உணர்ந்ததை அரசனிடம் உறுதியாயுரைத்தல், கருமமே கண்ணாய் எவ்வழியும் கவனித்து வருதல் அமைச்சின் தருமங்களாய் மருவியுள்ளன. அறிவின் தெளிவு அரிய பல வினைகளை ஆற்றியருளுதலால் அது மந்திரிக்குச் சொந்தவுரிமையாய் முந்தி வந்து முதன்மை தந்தது.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாய்ச்
சொல்லலும் வல்ல(து) அமைச்சு. 634 அமைச்சு

அமைச்சனுக்கு உரிய செயல் இயல்களைத் தேவர் இவ்வாறு. குறித்திருக்கிறார். தெரிதல், கேள்தல், செய்தல், சொல்லல் என்றது யுத்தியும் யூகமும் வினையாண்மையும் சொல்வன்மையும் உய்த்துணர வந்தது. அறிவு ஆற்றல்கள் அரசை ஆளுகின்றன.

தன் அரசனுக்கும் குடிகளுக்கும் நாட்டுக்கும் நன்மையான வழிகளையே யாண்டும் நாடிச் செய்யும் தன்மையும் வன்மையும் உண்மையான அமைச்சனிடம் ஒளி வீசி வருகின்றன.

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அறிவதும் செயலும் மொழிவதும் அரசர்க்கு
ஆக்கமே குறித்தன வாகும்
திறமைகன் றறியா அரசருக்(கு) உறுதி
செப்பலும் செய்வன வேனும்
உறுமுல கியற்கைக் கொத்திடின் செயலும்
ஒருவினேக்கு இயைந்தபல் செயலுள்
கிறுவுவது ஒன்ருல் வாய்ப்பளஞ் ஞான்றும்
நிகழ்த்தலும் அமைச்சருக்(கு) இயல்பாம். 1

மிகைவினே வரினும் அசைவுரு வன்கண்
விழுக்குடி காத்தலாள் வினைநுால்
வகையுறச் சூழ்ந்து விடுவன விடுத்து
வகுப்பன வகுத்திடல் வேண்டின்
பகைவர்தம் அதுணேயைப் பிரித்தல்தம் மிடத்துப்
பயின்றவர் பகைவர்பால் புகாமல்
தகையுறச் செய்தல் பிரிந்தவர் தம்மைத்
தம்மொடு பொருத்தலும் அமைச்சாம். 2

சுருக்கிமெய் விளிக்கி இனிமையும் பயனும்
தொகுத்தய லார்மொழிக்(கு) இடையாத்
திருக்கிளர் மொழியைச் சோர்வற அவைக்கண்
செல்லுமாஅ அஞ்சுதல் இன்றி
உரைக்கவல் லவரே அமைச்சர்கள் ஆவர்
உறுமுறை பிறழ்தசப் பலவாய் ..
விரிக்கவல் லவரும் கற்றஆங் விளங்க
விரிக்கமாட் டாரும்மெல் லியரே. 3

பொருள்பயங் திடினும் அறம்புகழ் பயவாப்
புரைபடு வினையென்றும் புரியார்;
மருளின்மற்(று) ஒருகால் புரியினும் இரங்கார்;
வையகத்(து) ஏனையோர் போல
இருமுது குரவர் கற்புடை மகளிர்
இளமகவு இவர்பசித் திடினும்
பெருமிதப் படாத வினைசெயார் உலகு
பேணுநர்க்(கு) ஏமஞ்செய் அமைச்சர். 4

துணிவுறும் அளவும் சூழ்ந்துபின் இராது
சூழ்வினை பொருந்தும்வாய் எல்லாம்
தணிவற முடித்தல் அதுதகா தாயின்
தருபொருள் வினையிடம் காலம்
அணியுறு கருவி ஐந்துமாய்ந்(து) இகலை
அடர்த்தல் ஒட்டலர்க்கழி வுறுங்கால்
பணிவுசெய் தேனும் காத்தல்முத் தொழிலும்
பண்புடை அமைச்சர்தம் தொழிலே! 5 விநாயக புராணம்

உயர்ந்த மந்திரிகளுடைய குண நலங்களையும் செயல் நிலைகளையும் இவை வரைந்து குறித்துள்ளன. பொருள் வகைகளைக் கூர்ந்துணர்ந்து அறிவமைதிகளைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

கல்வியறிவோடு அரிய பல பண்பாடுகளும் இயல்பாக அமைந்தவரே பெரிய இராச தந்திரிகளாய்ப் பேர் பெற்று வருகின்றனர். சுமந்திரன், சத்திய கீர்த்தி, தருமதத்தன், யூகி, உருமண்ணுவா, வயந்தகன், சேமன், சுச்சுதன், கருணாகரன், பட்டி, சந்தகன், சாமந்தகன், சுமதி முதலிய மந்திரிகள் எல்லாரும் உத்தம குணசீலர்களாய் ஒளி பெற்றுள்ளனர். புகழ் எல்லாம் புண்ணிய நீர்மைகளில் கண்ணியமாய்ப் பொலிந்து விளைந்தன.

தன்னலம் கருதாமல் மன்னனுடைய ஆட்சிக்கு மாட்சிமை புரிந்து மாநிலத்தைப் பேணி வந்தவரே மகிமையாளராய்க் காண வந்தனர். தரும நீதிகள் தழுவி வந்தமையால் பெருமைகள் பெருகி வந்தன. நெறிமுறைகளின் அளவே நிலை உயர்கின்றது.

ஆங்கில அறிஞரான பர்க் (Burke) என்பவர் சிறந்த அரசியல் நிபுணர்; உயர்ந்த பேச்சாளி. இராச சபையில் ஒருமுறை அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உண்மையான மந்திரிக்கு அழகு என்ன?’ என்று சிலர் நன்னயமாய் வினவினர். அதற்கு அவர் உடனே பதில் சொல்லியது அயலே வருகிறது.

What morality requires, true statesmanship should accept. - Burke

‘நீதிமுறையின் நெறியை உரிமையோடு உவந்து கொள்வதே உண்மையான அமைச்சாம்’ என இவ்வாறு அவர் உரைத்தருளினார். நியாயம் நிலைத்துவர அரசு செழித்து வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-21, 6:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே