தகவின் வகைமையாய்ச் செய்துவரின் அவ்வரசு உய்தி பெறுமால் உயர்ந்து - தகவு, தருமதீபிகை 854

நேரிசை வெண்பா

பகையுறவு நண்பென்று பாராமல் யாண்டும்
தகைமை உணர்ந்து தகவின் - வகைமையாய்ச்
செய்துவரின் அவ்வரசு தெய்வத் திருவெய்தி
உய்தி பெறுமால் உயர்ந்து! 854

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எவரிடமும் வாரம் பற்றி ஓரம் செய்யாமல் எவ்வழியும் நடுவு நிலைமையாய் நின்று யாவும் நேரே ஆராய்ந்து தெளிந்து நீதி முறை செய்துவரும் அரசன் ஆதிபரன் அருளையடைந்து யாண்டும் மேன்மையாய் உயர்ந்து விளங்குவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒருவனுடைய உண்மையான உயர்வு அவன் உள்ளச் செம்மையில் உறைந்துள்ளது. ஒருபாலும் கோடாமல் எப்பாலும் செப்பமாயிருப்பதே செம்மையாம். அரசன் தெய்வம் போல் எல்லார்க்கும் பொதுவாயிருப்பவன். சீவ சாட்சி என அந்த இறைவன் மாட்சி பெற்றுள்ளது போல் இந்த இறைவனும் ஆட்சியில் அமைந்துள்ளான். நீதி பரிபாலன முறையில் யாரிடமும் ஓரம் படியாமல் நேர்மையோடு நெறியே ஒழுகி வருமளவே அரசன் சீர்மையாய்ச் சிறந்து வருகின்றான்.

தகவு என்னும் சொல் மிகவும் பொருள் ஆழம் உடையது.

தருமநீதி தழுவிய மனநேர்மையே தகவு என வந்தது. இதனை உரிமையாக வுடையவனிடம் அரிய பல மகிமைகள் பெருகி வருகின்றன. தகவு நிலையில் தருமங்கள் யாவும் மருவியுள்ளன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தைய(ல்)தன் கற்பும்,தன் தகவும், தம்பியும்,
மைஅறு கருணையும், உணர்வும், வாய்மையும்,
செய்யதன் வில்லுமே, சேம மாகக்கொண்(டு),
ஐயனும் போயினான், அல்லின் நாப்பணே. 47

- தைலம் ஆட்டு படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

அரசு முடிதுறந்து அயோத்தியை விட்டு இராமன் வனவாசம் போன போது அக்கோமகனைத் தொடர்ந்து துணையாகப் போனவர்களைக் கவி இவ்வாறு சுவையாகக் காட்டியிருக்கிறார், பொருள் நயங்கள் கருதி யுணரவுரியன. இராமபிரானுடைய அரிய குண கணங்களுள் தகவு இங்கே தலைமையாய் முதலில் வந்துள்ளது.

தகவுறு சிந்தையன், தரும நீதியன்,
மகன்மகன் மைந்தன்நான் முகற்கு, வாய்மையான் 43

- வீடணன் அடைக்கலப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

விபீடணனை இங்ஙனம் குறித்திருக்கிறார்; தகாத வழியில் சென்றமையால் தமையனை அறவே வெறுத்துவிட்டுத் தக்கவனை நாடித் தகவாய் வந்தவனாதலால் தகவுறு சிந்தையன் என்கின்றான்,

தம்பியென நினைந்திரங்கித் தவிரானத் தகவில்லான்;
நம்பியிவன் தனைக்காணின் கொல்லுமிறை நல்கானால் 359

- கும்பகருணன் வதைப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

இராவணனைக் குறித்து இராமனிடம் கும்பகருணன் இவ்வாறு கூறி விபீடணனைக் காத்தருளும்படி வேண்டியிருக்கிறான். தகவு இல்லான் என இராவணனைச் சுட்டியிருப்பது உய்த்துணரத் தக்கது. தகவுடையார் இராமன் போல் எவ்வழியும் ஒளி பெறுகின்றார்; தகவில்லார் இராவணன் போல் இழிவுறுகின்றார்.

மனச்செம்மை தெய்வத் தன்மையாய் மகிமை தருகிறது; செவ்விய இந்தத் திவ்விய இயல்பு இல்லையானால் அங்கே வெவ்விய தீமைகள் விளைந்து வீணத் துயரங்கள் நேர்கின்றன.

நீதிநெறி மாறாமல் நேர்மையாய் ஆள நேர்ந்தவன் அரசனாதலால் அவன் உள்ளம் கோடாமல் இருந்தால் செங்கோலனாய்ச் சிறந்து திகழ்கிறான்; கோடினால் கொடுங்கோலனா யிழிந்து படுகிறான். கோல் கோடிய பொழுது நாடு கொடுந் துயரங்களை அடைய நேர்ந்து அரசு அழிவுறுகிறது.

நெஞ்சம் நேர்மை குன்றினால் அந்த அரசன் நஞ்சு போல் அஞசத் தக்கவனாகிறான். அவனது ஆளுகையில் வாழும் குடிகள் நாளும் நலிவுறுகின்றார், அரசன் செம்மை இழந்து விடின் யாவரும் வெம்மை யுழந்து வெருண்டு மருண்டு வெருவுகின்றனர்.

நடுவிகந்(து) ஒரீஇ நயனில்லான் வினைவாங்க,
கொடிதோர்த்த மன்னவன் கோல்போல, ஞாயிறு
கடுகுபு கதிர்மூட்டிக் காய்சினம் தெறுதலின்,
உறலூறு கமழ்கடாத்(து) ஒல்கிய எழில்வேழம்,
வறனுழு நாஞ்சில்போல், மருப்பூன்றி நிலம்சேர,
விறல்மலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம் 8 கலித்தொகை

நடுவு நிலைமை இன்றிக் கொடுமை மண்டி நின்ற அரசனது ஆட்சி போல் கொடிய சுடுவெயில் எங்கும் பரந்திருந்தது; காய்கின்ற வெப்பத்தைப் பொறுக்க முடியாமல் மத யானைகளும் மறுகிக் கிடந்தன.எனப் பாலைவனத்தைக் குறித்து இது கூறியிருக்கிறது. தகவிழந்த போது அந்த அரசு மிகவும் துயரமாகிறது.

அரசன் கொடியனானால் அந்நாடு சுடுகின்ற கொடிய காடாம்; பெரிய குடிகளும் அங்கே வாழ முடியாமல் மறுகியுழலுவர் என்பதை இதனால் இங்கே அறிந்து கொள்ளுகின்றோம்.

செம்மையும் நீதியும் மன்னனுக்குத் திவ்விய மகிமைகளை அருளுகின்றன; அவற்றால் எல்லாச் செல்வங்களும் பெருகி வருகின்றன. உயிரினங்களை உரிமையோடு பேணவே அரசன் கோலேந்தி நிற்கிறான். தன் கோலும் குடையும் முடியும் நெடிது நிலைத்து வருவது குடிகள் செழித்து வருவதைப் பொறுத்து வருகிறது

மனித சமுதாயம் அமைதியாய் இனிது வாழ்ந்து வரும்படி சூழ்ந்து வந்துள்ள ஒழுங்கே அரச நீதியாய் நேர்ந்து வந்துள்ளது. அந்த வழியே ஆள்பவர் எந்த வழியும் இனியராய் விளங்குகின்றார்.

தரும நீதி தழுவித் தகவோடு தரணியை ஆளுக.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-21, 6:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே