கதம்கொண்ட வேந்தை அணைத்து விறல் மந்திரி யுலகம் ஏந்த நடத்தும் இனிது - யூகி, தருமதீபிகை 845

நேரிசை வெண்பா

மதங்கொண்ட மால்கரியை வன்பாகன் நோக்கி
இதங்கொண்(டு) இயற்றும் இயல்பே - கதம்கொண்ட
வேந்தை அணைத்து விறல்மந் திரியுலகம்
ஏந்த நடத்தும் இனிது! 845

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மதம் கொண்ட பெரிய மதயானையைப் பாகன் இதமாய் அடக்கி நடத்தல் போல் சினம் கொண்ட வேந்தனை நயமாய் அணைத்து இணக்கி ஆட்சியை மாட்சியோடு மந்திரி நன்கு செலுத்தி எங்கும் இதம் புரிந்து வருவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

அமைச்சுத் தொழில் அரிய பல பொறுப்புகள் உடையது. அரசனுக்கும் குடிகளுக்கும் நடுவு நின்று எவ்வழியும் செவ்வியனாய் அவன் வினைகள் புரிய வேண்டும். உலகத் தலைவன் என்ற பெருமிதம் அரசனிடம் இயல்பாகவே பெருகியிருத்தலால் அவனோடு அணுகியிருந்து கருமங்களை இனிமையாக நடத்துவது மிகவும் கடுமையான நிலையாம்; கரும வீரம் அதில் மருவியுளது.

குலச்செருக்கு, செல்வச்செருக்கு, அதிகாரச்செருக்கு வீரச்செருக்கு முதலிய செருக்குகள் எல்லாம் பெருக்கமாயுள்ள மன்னன் பால் மன்னியிருந்து வினைகள் புரிந்து வருவது மந்திரியின் இங்கிதமான சாதுரிய சாகசங்களை நன்கு விளக்கிவரும்.

யானை மதம் கொண்டு மருண்டு வெருண்டு இடர் செய்ய நேர்ந்த போது கைதேர்ந்த பாகன் அதனை அடக்கி மடக்கி நெறியே நடத்துவான்; அதுபோல் அரசன் களிப்பு மீதுார்ந்து முறை கடந்து சென்றால் இடித்து அறிவு கூறி அமைச்சன் அவனை வசப்படுத்தி ஆட்சியை நடத்தியருளுவான்.

இன்னிசை வெண்பா

செவிசுடச் சென்றாங்(கு) இடித்தறிவு மூட்டி
வெகுளினும் வாய்வெரீஇப் பேரா - கவிழ்மதத்த
கைம்மா வயத்ததோ பாகுமற் றெத்திறத்தும்
அம்மாண் பினவே அமைச்சு! 45

- நீதிநெறி விளக்கம்

மதயானையைப் பாகன் வசப்படுத்தல் போல் மன்னனை மந்திரி இணக்கி நடத்துவான் என இது உணர்த்தியுள்ளது.

அரசன் உல்லாச போகியாய் உவந்து வீர கம்பீரமாய் இருப்பவனாதலால் யானை என நேர்ந்தான். அவனைத் தனது ஞான விநயங்களால் நல்லவழிகளில் பழக்கி நாட்டுக்கு நன்மை செய்து வரும்படி நீதிமுறைகளை மெல்ல எடுத்துக்காட்டி மேன்மை புரிந்து வருவது மந்திரியின் பான்மையாய் வந்தது.

மந்திரி மதியூகம் வாய்ந்து நல்லவனாயிருந்தால் அந்த அரசு எந்த வகையிலும் செழித்துத் தழைத்துச் சிறந்து விளங்கும். அமைச்சன் அவ்வாறு அமைய வில்லையானால் அவ்வரசு செவ்வையாய்ச் சிறந்து திகழாது. சேர்ந்த மந்திரியின் சிந்தையின்படியே அரசும் ஆட்சியும் வரிசையாய் நேர்ந்து வருகின்றன.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

தீயவனாம் மந்திரியால் நல்வேந்தும் தீவேந்தாம்;
..தீமை இல்லாத்
தூயவனாம் மந்திரியால் தீவேந்தும் நல்வேந்தாம்
..தொடர்ச்சி போல
ஆயநெறி மன்னவரால் அமைச்சரும் அப்படியாவர்
..ஆத லாலே
நேயவிவே கத்தமைச்சன் உண்டாகில் எப்பயனும்
..நிருபர்க் குண்டாம் 1

மன்னவனெப் படியுலகில் மன்னுயிரும் அப்படியாம்;
..மகிமை தானும்
நன்னடுவு நிலைமையுமெய்ஞ் ஞானநூல் தெளிந்தவர்க்கே
..நண்ணா நிற்கும்;
அன்னதுகற் றிலரென்னில் அரசரமைச் சர்களென்போர்
..அபத்த ராகும்
இன்னகலை இலதாகில் எனக்கிரையாய் இளமைநலம்
..இழந்தீர் இன்றே 2 ஞான வாசிட்டம்

கற்கடி என்னும் ஒரு ஞானயோகி இன்னவாறு கூறியிருக்கிறாள். உரைகளில் மருவியுள்ளன ஓர்ந்து உணரத்தக்கன.

மந்திரிக்கும் மன்னனுக்கும் உள்ள உறவுரிமைகளையும் சார்பின் சால்புகளையும் இங்கே நன்கு தெரிந்து கொள்கிறோம். அமைச்சன் விவேகியானால் அந்த அரசுக்கு அரிய பல நலங்கள் எளிதே உளவாம் என்றது மதியூகத்தின் மாட்சியை உணர்ந்து கொள்ள வந்தது. அறிவுநலம் ஆட்சிக்கு அதிசய நிலையாம்.

உண்மையான ஞானத்தெளிவு அமைந்த பொழுதுதான் மன்னனும் மந்திரியும் பணிவும் பண்பும் வாய்ந்து உலகம் நலமுற ஒளிபுரிந்து வருவரெனத் தெளிவான மொழிகளில் அவள் வெளியிட்டிருக்கிறாள். மதிநலம்.மகிநலத்தை மாண்புறுத்துகிறது.

ஞானம் என்பது அறிவு, யூகம், விவேகம் முதலிய எவற்றினும் உயர்ந்தது. அதனையுடையவன் எதனையும் தெளிவாக உணர்ந்து கொள்கிறான். தனது நிலைமையையும் கடமையையும் நன்கு தெரிந்து எங்கும் நேர்மையாய் நீதிமுறைகள் புரிகின்றான்; உயிர்களுக்கு இரங்கி உதவிகள் செய்கின்றான், வாய்மை, தூய்மை, நிறை, பொறை முதலிய புனித நீர்மைகள் பாவும் அவனிடம் இனிதமைந்து எவ்வழியும் இதம் புரிந்து நிற்கின்றன.

The wise man is also the just, the pious, the upright, the man who walks in the way of truth. - Zochler

"ஞானவான் நீதிமானாயிருக்கிறான்; நல்ல பத்திமானாய் நிற்கிறான்; நேர்மையாளனாய் நிலவுகிறான்; சத்திய நெறியில் நடக்கிற உத்தமனாய் ஒளிர்கிறான்’ என சோக்லர் என்னும் ஜெர்மன் தேசத்துப் பெரியார் இங்ஙனம் கூறியிருக்கிறார். நித்திய உண்மையை நேரே தெளிந்து கொள்வதால் ஞானம் அற்புத சோதியாயுள்ளது. அதனை உரிமையோடு மருவி நின்றவனிடம் தெய்வத் தேசு தெளிவாய் வீசுகின்றது.

The intellect of the wise is like glass; it admits the light of heaven and reflects it. - Hare

‘தெளிந்த ஞானியின் அறிவு பளிங்குக் கண்ணாடி போல் உள்ளது; தெய்வ ஒளிதோய்ந்து அது திவ்வியமாய்த் திகழ்கிறது’ என்னும் இது இங்கே நன்கு சிந்தித்துணர வுரியது;

கலையறிவோடு மெய்யுணர்வு தோய்ந்த அமைச்சனே வெய்ய .வேந்தனை வணங்கிச் செய்ய நெறிகளில் செலுத்தி வையம் நலமுற வழிமுறைகளை வகுத்து அருளுகிறான். உடலின் கூறுகளை உணர்ந்த உயர்ந்த மருத்துவன் போல் உலக நிலைகளை நன்கறிந்த அவன் இடர்களை நீக்கி இதம் புரிந்து வருகிறான்.

வீரமுடைய அரசன் உலகை நேரே ஆளுகிறான்; ஞானமுடைய அமைச்சன் அவனுக்கு நயமாய் வழிகாட்டி ஒளி நீட்டி வாழுகின்றான். வேந்தன் மேன்மை வித்தக மந்திரியால் விளங்கி வருகிறது. மதியூகமும் மான வீரமும் மகிமைகள் புரிகின்றன.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-21, 9:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 37

சிறந்த கட்டுரைகள்

மேலே