நீதி அரசருயிர் ஆதலினால் ஆனாமல் காப்பர் அதை - தகவு, தருமதீபிகை 855

நேரிசை வெண்பா

மன்னன் வளவன் மனுநீதி குன்றாமல்
தன்மகனைக் கொல்லத் தனிஎழுந்தான் - என்னவகை
ஆனாலும் நீதி அரசருயிர் ஆதலினால்
ஆனாமல் காப்பர் அதை! 855

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனுநீதி மன்னன் என மகிமை தோய்ந்த சோழ மன்னன் அரசியல் முறையில் தனது அருமை மகனையும் கொல்ல நேர்ந்தான்; ஆதலால் நீதியே அரசனுக்கு உயிர், அதனை எவ்வழியும் உரிமையோடு செவ்வையாய் அவன் பேணியருளுவான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நியாயம் என்பது நெறிமுறையே ஆராய்ந்து புரியும் நயம். நாட்டுக்குத் தலைவனான நாயகன் நாடிச் செய்வது நியாயம் என வந்தது. நிறை தூக்கி நிறுத்து நோக்கி நீதி புரிவது அரச தருமமாம். நடுவன் என நீதிபதிக்கு ஒரு பெயரமைந்துள்ளது.

குடிசனங்கள் தமக்குள்ளே இகலி மாறுபட்ட போது அந்த முறையீடு அரசனிடம் வரும்பொழுது இருசாராரையும் அழைத்து விசாரிக்கிறான்; வழக்கின் நிலைகளைக் கூர்ந்து உணர்கிறான்; வழுக்களைக் களைந்து வசையில்லாதபடி நீதி வழங்குகிறான்.

தனித்த அதிகாரம் தன்பால் நிலைத்திருத்தலால் எவ்வழியும் முறையீடுகளை நுனித்து உணர்ந்து நேர்மையோடு நீதி புரிவதே மன்னனது நீர்மையாய் வந்துள்ளது. குற்றம் களைந்து குணம் வளர்ப்பதே நீதி முறையின் குறிக்கோளாம். இதில் பிழை நேர்ந்தால் பெரும் பழிகள் கொடுமையாய்ச் சேருமாதலால் அரசன் நெடிது சிந்தித்தே எதையும் நேரே முடிவு செய்கிறான்۔

உற்ற வழக்கு யாரும் தெளியமுடியாத சிக்கலாயிருக்குமானால் கொற்றவன் மிக்கவும் கவலை அடைகிறான். முடிவில் தெய்வத்தை நினைந்து தவம் கிடக்கிறான். குலோத்துங்கன் என்னும் பாண்டிய மன்னன் அரசு புரிந்து வருங்கால் ஒரு மறையவன் வந்து ம.றுகி முறையிட்டான்: அவன் தன் மனைவியோடு திருப்பத்தூரிலிருந்து மதுரைக்கு வந்தான்; வருங்கால் இடைவழியில் ஒரு ஆலமரத்தடியில் தங்கினான், மனைவியின் தாகத்துக்காக நீர் கொண்டு வர அயலே போயினான்; அவள் தனியே படுத்திருந்தாள்; அந்த மரக்கிளையில் முன்னமே தொங்கியிருந்த ஓர் அம்பு காற்றால் அசைந்து கீழே படுத்திருந்தவள் மேல் பாயவே உடனே அவள் இறந்து போனாள்;

தண்ணீர் மொண்டு மீண்டு வந்தவன் மனைவி மாண்டு கிடப்பதைக் கண்டு மறுகி அழுதான்; அவ்வமயம் அங்கே வில்லும் கையுமாய் அம்மரத்தகருகே வந்து வெயிலுக்கு ஒதுங்கி ஒருவேடன் நின்றான். தன் மனைவியைக் கொன்றவன் அவன்தான் என்று துணிந்து அவனைப் பிடித்து இழுத்து வந்து அரசன் எதிரே விட்டு அவ்வேதியன் கதறியழுது நின்றான். மன்னன் நேரே விசாரித்தான்; தான் கொல்லவில்லை என்று வேடன் சொன்னான்; வேறு யாரும் அருகே இல்லாமையால் அவனே கொன்றிருப்பான் என்று அமைச்சர் உரைத்தார். அரசன் வேடனைச் சிறையில் அடைப்பித்தான். தனியே வந்து சிந்தனை செய்தான்: 'கொலை செய்த குறி அவன் முகத்தில் தோன்றவில்லை; நிகழ்ந்த நிலை யாதும் தெளிவாய்த் தெரியவில்லையே!” என்று மறுகியுளைந்த மன்னன் இரவு வரவும் தனியே கோவிலுக்குப் போனான். சிவபெருமான் சந்நிதியில் நின்று இருகைகளையும் சிரமேல் கூப்பி உருகித் தொழுது உண்மை நிலையைக் கருதி வேண்டினான்.

தரவு கொச்சகக் கலிப்பா

மன்றாடு மணியேஇம் மறவன்தான் பார்ப்பனியைக்
கொன்றானோ? பிறர்பிறிதால் கொன்றதோ? இதுஅறநூல்
ஒன்றாலும் அளப்பரிதாய்க் கிடந்ததால் உன்னருளால்
என்தாழ்வு கெடத்தேற்றாய்! என்றிரந்தான் அவ்வேலை.

மன்னன் இவ்வாறு மறுகி வேண்டவே மேலிருந்து ஒரு ஒலி எழுந்தது. வேடன் கொல்லவில்லை; வினைப்பயன் மூண்டது; காற்றால் அலைந்து வீழ்ந்த அம்பால் அவள் மாண்டாள்' என அவ்ஒசை நீண்டு ஒலிக்கவே அரசன் உள்ளம் களித்தான். தெய்வத் திருவருளை நினைந்து வியந்து வெளியே வந்தான்; வேதியனுக்கு ஆதரவோடு உணர்த்தி மறுமணம் முடிக்கும்படி பொருளுதவி அனுப்பினான்; சிறையிலிருந்த வேடனை வெளியேற்றித் தன்னெதிரே அழைத்து அப்பா! தப்பாக நான் உன்னைத் தண்டித்தேன்; என் பிழையைப் பொறுத்தருள்' என்று பொன்னும் மணியும் அணியும் ஆடையும் அள்ளிக் கொடுத்து அவனை அனுப்பினான். அரசனுடைய நீர்மையையும் நீதியையும் நினைந்து நினைந்து நெஞ்சம் கரைந்து கண்ணீர் மல்கிக் கைதொழுது நின்று 'ஆண்டவா! நீங்கள் நீடுழி வாழவேண்டும்’ என்று அவன் போற்றிப் புகழ்ந்து போனான். அவன் போனபின் இவன் இறைவன் கோவிலுள் மீண்டும் போய் ஆர்வம் மீதூர்ந்து தொழுதான்.

எழுசீரடி யாசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

ஆதரம் பெருகப் பாவியேன் பொருட்டெம்
..அடிகள்நீர் அரும்பழி யஞ்சு
நாதரா யிருந்தீர் எந்தையார்க் குண்டோ*
..நான்செயத் தக்கதொன் றென்னாக்
காதலிற் புகழ்ந்து பன்முறை பழிச்சிக்
..கரையின்மா பூசனை சிறப்பித்(து)
ஏதம தகற்றி யுலகினுக் குயிராய்
,,இருந்தனன் இறைகுலோத் துங்கன். 44

- பழிஅஞ்சின படலம், கூடற் காண்டம், திருவிளையாடல் புராணம்

குலோத்துங்க மன்னனுடைய பரிபாலன முறையையும் நீதி நிலையையும் தெய்வத் திருவருளையும் இங்கே உணர்ந்து வியந்து உவந்து நிற்கிறோம். உலகினுக்கு உயிராய் இருந்தனன் என்றதனால் இந்த வேந்தனுடைய ஆதரவும் ஆட்சி நலனும் நன்கு அறிய வந்தன. தருமநீதி இருமையும் பெருமை தந்தது.

உலகுக்கு மன்னன் உயிர்; அவனுக்கு நீதி உயிர்

That most kingly and godlike surname, The Just - Plutarch

'நீதி என்பது கடவுளுக்கும் அரசனுக்கும் உரிய ஒரு மறு பெயரே' என்னும் இது இங்கே அறிய வுரியது. நீதிமான் நித்திய சோதியாய் நிலைத்து வருகிறான். ஆருயிர்கட்கு ஆதரவு செய்து வருதலால் பேரின்ப நிலை அவனுக்கு நேரே உரிமையாயது.

The memory of the just survives in heaven. - Wordsworth

நீதிமானுடைய நினைவு பரமண்டலத்தில் வாழுகிறது என இது குறித்திருக்கிறது. தன்னைத் தழுவி யுள்ளவனுக்கு இருமை இன்பங்களையும் அருளி வருதலால் நீதி தெய்வத் திருவாய் நின்றது. இத்தகைய நீதியைப் பேணி ஆதரவுடன் அரசாண்டு வருகிறவன் உத்தம வேந்தனாய் ஒளி மிகப் பெறுகிறான்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jul-21, 11:04 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே