மதிநலங்கள் வேந்துக்கு விளக்கல் வினைபுரிந்தே ஏந்தல் அமைச்சின் இயல்பு - யூகி, தருமதீபிகை 846

நேரிசை வெண்பா

விதிமுறைகள் தேர்தல் விநயமொடு பேசல்
அதிமதி நுட்பங்கள் ஆய்தல் - மதிநலங்கள்
வேந்துக்(கு) இனிது விளக்கல் வினைபுரிந்தே
ஏந்தல் அமைச்சின் இயல்பு! 846

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரசுக்கு உரிய விதி நியமங்களைத் தெளிவாக அறிதலும், யாரிடமும் விநயமாய்ப் பேசுதலும், காரியங்களை யூக விவேகமாய் ஆராய்தலும், அரிய அறிவு நலங்களை வேந்தனுக்கு நன்கு விளக்கலும் நயம் புரிதலும் அமைச்சனுக்கு உரிய இயல்புகளாம் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலக நிலைகளைப் பலவகைகளிலும் கூர்ந்து ஓர்ந்து காரியங்களைக் கருதிச் செய்து வருவது கருமத் தலைவனான மந்திரிக்கு உரிய கடமையாய் அமைந்தது. கல்வியறிவும் சீலமும் கலந்து வந்த பொழுதுதான் மனிதன் புனிதனாய் உயர்ந்து விளங்குகிறான். அரிய பெரிய உண்மைகள் அவனுக்குக் தெளிவாய்த் தெரிய வருகின்றன. இனிய இதங்களை எவ்வழியும் செய்கிறான்.

நாட்டு மக்கள் சுகமாய் வாழும்படி வழிகாட்டியாய் வந்துள்ள மந்திரி முதலில் தன்னைப் புனித நிலையில் வைத்து இனிது வாழ வேண்டும்; அவ்வாறு வாழுகின்றவனே அவனியைச் செவ்வையாக ஆளுகின்றவனாய் ஆண்மையோடு திகழுகின்றான்.

நேரிசை வெண்பா

ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவ தெய்தாமை முற்காத்தல் - வைகலும்
மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும்
சீரேற்ற பேரமைச்சர் கோள்! 61 திரிகடுகம்

பொறிகளை அடக்கி நெறியே ஒழுகுதல், நாட்டுக்கு நேருகிற இடையூறுகளை முன்னதாக நாடி நீக்குதல், பகை அரசர்களுடைய நிலைகளை உணர்தல் ஆகிய இவ்வகைகள் உயர்ந்த அமைச்சருடைய தகைமைகள் ஆம் என நல்லாதனார் இங்ஙனம் குறித்திருக்கிறார். ஒழுக்கமும் காப்பும் உணர்வும் விழுப்பங்களை விளைத்தருளுதலால் அவை ஈண்டு விழி தெரிய வந்தன.

அரசனது பரிபாலன முறை அமைச்சனுடைய அறிவினாலும் ஆள்வினையாலும் சரியான நிலையில் உயர்ந்து வருகிறது,

குதிரைகளை நெறியே நடத்தும் சாரதி போல வினையாளர்களை அமைச்சன் முறையே செலுத்தின் ஆட்சித்தேர் காட்சிக்கு இனிதாய்க் கவின் சுரந்து வரும். அரசனும் மாட்சிமையாய் விளங்குவான். விதிநியமங்களால் வேந்தன் விழுமியனாய்த் திகழ்கின்றான்; மதியூகங்களால் மந்திரி மகிமையுறுகின்றான்.

நேரிசை வெண்பா

விதிமுறை தேராத வேந்து, விறல்சேர்
ததியறிந்து சாராத தானே - மதியூகம்
இல்லாத மந்திரி, இம்மூன்றும் என்றுமே
பொல்லாத தாகும் புவிக்கு

வேந்தனும் தானையும் மந்திரியும் இன்ன நீர்மைகளோடு இசைந்திருக்க வேண்டும்; இல்லையானால் உலகத்துக்கு அல்லலாமென இது உணர்த்தியுள்ளது. உண்மை நிலைகள் உணர வுரியன.

தக்க நீர்மைகள் சார்ந்த அளவுதான் எவரும் மிக்க மேன்மைகள் அடைய நேர்கின்றனர். அரிய காரியங்களைச் செய்ய வுரியவர் பெரிய சீர்மைகளை இயல்பாகவே மருவி வருகின்றனர். குணமும் செயலும் மணமும் மலரும் போல் மலர்தலை யுலகில் மலர்ந்து பலவகை நிலைகளிலும் கமழ்ந்து திகழ்கின்றன.

உற்ற சூழல்களையும் உரிய நிலைகளையும் கூர்ந்து ஓர்ந்து தேச காரியங்களை எவ்வழியும் செவ்வையாக அமைச்சன் செய்யவேண்டுமாதலால் அதற்கு வேண்டிய வினையமும் விவேகமும் அவனிடம் விழுமிய நிலையில் கெழுமி விளங்குகின்றன. கூர்மையான அறிவால் எல்லாச் சீர்மைகளும் ஒருங்கே உளவாகின்றன அல்லல்களை நீக்கி அது அதிசயம்.அருளுகிறது.

அறிவற்றம் காக்கும் கருவி, செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்! 421 அறிவுடைமை

குற்றம் குறை கேடுகள் நேராமல் அரசனை உரிமையோடு பாதுகாக்க வல்லது அறிவே, வலிய பகைவராலும் வெல்ல முடியாத அரிய கோட்டையாகவும் அது நன்கு மருவியுள்ளது எனக் தேவர் இவ்வாறு அறிவின் மகிமையை அறிவித்திருக்கிறார்.

இத்தகைய அறிவு பயிற்சியால் உயர்ச்சியடைந்து அமைச்சனிடம் உரிமையோடு அமைந்திருத்தலால் எத்தகைய காரியங்களையும் அவன் எளிதே முடித்து விடுகிறான். சிறந்த மதியூகம் எவ்வழியும் உயர்ந்த வழிகாட்டியாய் ஒளி நீட்டியுள்ளது.

No other protection is wanting, provided you are under the guidance of prudence. - Juvenal

'விவேகத்தின் வழியே நீ ஒழுகுவாயானால் வேறு ஒரு பாதுகாப்பு உனக்கு வேண்டியதில்லை’ என்னும் இது ஈண்டு உணரவுரியது. கூரிய முன்னறிவு சீரிய நன்மைகளை அருளுகிறது.

யூகம் உடையவன் எதையும் எதிர்நோக்கி வேகமாய் உணர்ந்து கொள்ளவே அல்லல்களை நீக்கி நல்லவைகளை ஆக்கி வல்லவனாகிறான். செய்யும் வினைகளே சீர்த்திகளை விளைத்து எவ்வழியும் சிறப்புகளை அருளுகின்றன.

நேரிசை வெண்பா

தன்னிலையுந் தாழாத் தொழினிலையுந் துப்பெதிர்ந்தார்
இன்னிலையும் ஈடில் இயனிலையுந் - துன்னி
அளந்தறிந்து செய்வான் அரசமைச்சன் யாதும்
பிளந்தறியும் பேராற்ற லான்! 57.சிறுபஞ்சமூலம்

தனது நிலை, வினை நிலை, வலி நிலை, பகைவர் நிலை, உலக நிலை முதலிய நிலைகளையெல்லாம் அளந்து ஆராய்ந்து எதையும் பகுத்துணர்ந்து எவ்வகையும் செவ்வையாய்ச் செய்ய வல்லவனே அமைச்சன் ஆவான் எனக் காரியாசான் இவ்வாறு கூறியிருக்கிறார்.

கூரிய யூகமும், காரிய விவேகமும் கூடிய பொழுது அங்கே சீரிய மேன்மைகள் சேர்ந்து நிற்கின்றன. இத்தகைய தன்மைகளை இயல்பாக எய்தியுள்ளவர் உத்தம மந்திரிகளாய் உயர்ந்து திகழ்கின்றார். அவ்வித்தகரால் வேந்து விளங்கி வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-21, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

சிறந்த கட்டுரைகள்

மேலே