உற்ற திருவும் உயர்வும் உரிமையாய்ப் பெற்ற தவத்தின் பெருமைகாண் - தகவு, தருமதீபிகை 856

நேரிசை வெண்பா

உற்ற திருவும் உயர்வும் உரிமையாய்ப்
பெற்ற தவத்தின் பெருமைகாண் - மற்றதைக்
கண்டு களித்துக் கழியாமல் எவ்வழியும்
தொண்டு புரிக தொடர்ந்து! 856

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த திருவும் உயர்ந்த பெருமைகளும் அரிய தவத்தின் பயனாய் அமைந்துள்ளன; அந்த மேன்மைகளை நோக்கிச் செருக்காமல் நல்ல பான்மை யுடையவனாய் எல்லார்க்கும் இதங்களைச் செய்க; அது திவ்விய மகிமைகளை அருளும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உலகம் விசித்திரமான காட்சிகளையுடையது, பலவகையான மாறுபாடுகள் யாண்டும் நீண்டு எவ்வழியும் விழிதெரிய நிற்கின்றன. அந்நிலைகளை நோக்கிக் காரணங்களைக் கருதி ஆராய்ந்து தெளிவான முடிவு தெரியாமையால் மேலோர் அது ஒரு புண்ணியம் என அரச பதவியை வரிசையாய் முடிவு செய்துள்ளனர்.

ஒத்த மனிதருள் சிலர் அரிய மேன்மைகளை அடைந்து பெரியராய்த் திகழ்கின்றார், பலர் அவ்வாறின்றி அயர்ந்து நிற்கின்றார். முன் செய்த நல்ல கருமங்கள் தருமங்களாய்த் தழைத்து வருதலால் அவற்றை மிகுதியாக வுடையவர் அரசர்களாய் நீண்டு யாண்டும் வரிசை மிகப்பெற்று வழிமுறையே வந்துள்ளனர்;

புண்ணிய நிலையில் இவ்வாறு போந்துள்ள வேந்தர் எவ்வழியும் கண்ணிய நிலைகளைக் கருதி ஒழுகி வருவது பிறப்பின் கடமையாய் வந்தது. பிறப்பும் சிறப்பும் அவரது நீதி முறைகளில் நிலைத்து நெடிது செழித்து நெறியே தழைத்து வருகின்றன.

சமுதாயம் செவ்வையாய் வாழச் செய்து வருவதே சிறந்த நீதியாதலால் அது அரசனது குலதருமமாய்க் குலாவி நின்றது.

The virtue of kings seems to consist chiefly in justice.

அரசரது தருமம் முக்கியமாய் நீதியில் அடங்கியிருக்கிறது என்னும் இது இங்கே நன்கு அறியவுரியது.

சீவர்கள் சிறந்து வாழ நீதி பரிபாலனம் புரிந்துவரின் அது உயர்ந்த தருமமாய்ப் பொங்கி வரவே அந்த மன்னன் புண்ணிய மூர்த்தியாய்ப் பொலிந்து விண்ணும் புகழ விளங்குகிறான்.

தனக்குக் கிடைத்த அரச பதவி அரிய மகிமையுடையது; பெரிய தவத்தால் வந்தது; இதனைத் தக்க வகையாகப் பேணிவர வேண்டும் என்னும் உணர்வு அரசனிடம் ஓங்கி நின்ற போதுதான் உரிமையை ஓர்த்து கருமம் புரிந்து யாண்டும் அயராமல் நீண்டு நிலைத்து உயர்ந்த நலங்களை அடைந்து வருகின்றான்.

கடமையுணர்ச்சி மடமையை நீக்கி மகிமை தருகிறது.

தான் முடிபுனைந்திருப்பது குடிகளை இனிது பேணவே என்னும் உணர்வு சிறிதுடையனாயினும் அவனே பெரிய அரசனாகிறான். மாந்தரை ஆதரவோடு காத்து வருமளவே வேந்தன் சீர்த்தியாய் விளங்கி வருகிறான். பல்லோரையும் பாதுகாக்க நேர்ந்தவன் நல்லோனாயிருக்க வேண்டும். இனிய குண நீர்மைகள் மன்னனை உன்னத நிலையில் உயர்த்தி ஒளி புரிந்தருளுகிறது.

உலகப் பகுதிகளை உரிமையோடு பேணி வந்த அரசர் யாவரும் இராமனை வியந்து புகழ்ந்துள்ளனர். அக்கோமகனுடைய குணநலங்கள் கோக் குலங்களுக்கு மேல்வரிச் சட்டமாயமைந்து யாண்டும் நீண்ட ஆக்கங்களை அருளி யிருக்கின்றன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தானமும், தருமமும், தகவும், தன்மைசேர்
ஞானமும், நல்லவர்ப் பேணும் நன்மையும் -
மானவ! வையம்,நின் மகற்கு; வைகலும்,
ஈனமில் செல்வம்வந்(து) இயைக என்னவே 80

- மந்திரப் படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

தசரதனிடம் இராமனைக் குறித்து மன்னர்கள் இன்னவாறு கூறியிருக்கின்றனர். தகவு, கருமம் முதலிய அரிய பல குண நலங்கள் அக்குலமகனிடம் பெருகியுள்ளமையை இதனால் அறிந்து கொள்கிறோம். இனிய நீர்மைகள் தனி மகிமைகளாயின.

மன்னர் பெரும! உன்மகனிடம் எண்ணரிய கலியாண குணங்கள் நிறைந்திருக்கின்றன என வான்மீகத்தில் வந்துள்ளதும் இங்கே சிந்திக்கத்தக்கது. சீராமன் நீர்மை சிறந்து திகழ்கிறது.

இத்தகைய உத்தம குணங்களையுடையவர் எவ்வழியும் ஒளி மிகுந்து வருதலால் உலகம் என்றும் அவரை உவந்து போற்றி வருகிறது. அல்லல்களை நீக்கி உயிர்களை நல்ல வகையாய்க் காத்து வரும் அரசை யாவரும் ஏத்தி வருகின்றார், இனிய நீரர் யாண்டும் பொன்னாய் உயர்கின்றார்; இன்னாதவர் மண்ணாயிழிகின்றார்.

இன்னிசை வெண்பா

வண்மை தவங்கல்வி வீரமிவை மற்றின்ன
ஒண்மை யுடையன வொன்றாற் புகழ்யாக்கை
நண்ணும் அவரன்றே பொன்றா நலம்பெற்றார்
மண்ணாவார் மற்றை யவர்! 108

- பொதுவியல், இன்னிசை யிருநூறு, அரசஞ் சண்முகனார்

என்றும் அழியாத புகழை அடைந்து வேந்தன் வென்றி வீரனாய் விளங்க வேண்டும். அது நீதி பரிபாலன முறையால் நேரே நிறைவாகி வருகிறது. தன் செங்கோலே யாண்டும் மங்காத கீர்த்தியை அரசனுக்கு நன்கு அருளி நலம் பல புரிகின்றது.

இன்னிசை வெண்பா

அங்கோல் அவிர்தொடி! ஆழியான் ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவரால்
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிதெனினும்
தண்கோல் எடுக்குமாம் மெய்! 248

- பழமொழி நானூறு

சக்கர தரனான திருமாலே ஆனாலும் மக்களுக்கு இனியனாய்ச் செங்கோல் செலுத்தானாயின் அவனை யாவரும் எள்ளி இகழுவர்; நீதிமுறையான தண்ணிய கோலே அவனுக்கு எண்ணிய உறுதி நலனை உதவி வருகிறது என இது உணர்த்தியுள்ளது.

A sense of justice is a noble fancy. - Tegner

நீதியுணர்வு, மேன்மையான இனிய நினைவு என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. மன்னர்க்கு நீதி மன்னிய மகிமையாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jul-21, 11:02 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

சிறந்த கட்டுரைகள்

மேலே