மன்னன் எனினும் மனுநீதி குன்றினால் சின்னவன் என்னும் சிறுமை - தகவு, தருமதீபிகை 857

நேரிசை வெண்பா

மன்னன் எனினும் மனுநீதி குன்றினால்
சின்னவன் என்னும் சிறுமையாம்; - என்ன
நிலைமை அடையினும் நீர்மை குறைந்தால்
தலைமை அழியும் தணிந்து! 857

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகத் தலைவனாய் அரசன் உயர்ந்திருந்தாலும் நீதிமுறை குன்றினால் அவன் தீது படிந்து சிறுமையாயிழிந்து ஒழிவான்; செல்வம், அதிகாரம் முதலிய நிலைமைகளில் சிறந்து நின்றாலும் தன்மை குறைந்தால் புன்மையாய் இழிந்து அழிந்து போவான்; அரிய சீர்மைகள் உரிய நீர்மைகளால் அமைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தனது தலைமைக்கு உரிய நிலைமையைத் தழுவியிருக்கும் அளவே வேந்தன் விழுமியனாய் விழைந்து போற்றப் படுகிறான். செம்மையான நீதி ஒழுக்கமே மன்னனுக்கு எவ்வழியும் மகிமை தந்து வருகின்றது. அதனைப் பேணுவது காணியைக் காப்பதாம்.

மனித சமுதாயம் அமைதியாய் இனிது வாழ அமைந்துள்ள முறையே மனுநீதி என விளங்கியுள்ளது. நியாயம், நீதம், நடுவுநிலைமை, தருமம், நெறிமுறை என வருவன எல்லாம் நீதியின் பரியாய நாமங்களே. பெயர்களில் உயர்வுகள் உள்ளன.

மன்னுயிரைக் காக்க நேர்ந்த மன்னனுக்கு நீதி இன்னுயிராய் இசைந்திருக்கிறது. இராச தருமமாய் மருவியுள்ள இதனைத் தழுவி ஒழுகுகிறவனிடம் அதிசய ஆற்றலும் அற்புத மகிமையும் பெருகி வருகின்றன. காப்புமுறை கடவுள் நிலையாகிறது.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்(கு)
இறைஎன்று வைக்கப் படும்! 388 இறைமாட்சி

நீதி நெறியே ஒழுகி நாட்டை நன்கு காத்து வருகிற அரசன் மக்களுக்கு நேரே கண்கண்ட கடவுளாகவே கருதப்படுவான் என இது காட்டியுள்ளது. முறைக்கும் இறைக்கும் உள்ள உறவுரிமையை இதனால் உணர்ந்து கொள்ளுகின்றோம்.

நீதி முறை செய்பவனிடம் தெய்வத் தேசு சேர்ந்து திகழ்கிறது; தரும தேவதை அவன்பால் மருவி மிளிர்கிறது!

There is no virtue as truly great and godlike as justice. - Addison

நீதியைப் போல் கடவுளுக்கு நிகரான பெரிய தருமம் வேறு யாதும் இல்லையென அடிசன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். மனித மரபை அது புனிதமாக்கி வருகிறது.

தன் உள்ளத்தில் நீதி தோய்ந்த போது அந்த மனிதன் ஆதி முதல்வன் ஆகின்றான். நீதி கடவுளின் வடிவம் ஆதலால் அதனையுடையவன் உருவம் மருவிய ஒர் இறைவன் என நேர்ந்தான்.

இறைமையின் தனி நீர்மையாதலால் நீதிமுறை யாண்டும் நிலையான மகிமைகளை விளைத்துக் தலைமையாய் வருகிறது.

மாளாத நீதி இகழாமை நின்கண் அபிமானம் உள்ள வறியோர்
ஆளாயும் வாழ்தி; அரசாள்தி! 256 நாகபாசப் படலம், யுத்த காண்டம், ராமாயணம்

இராமனது நீதி நிலையைக் கருடன் இங்ஙனம் துதித்திருக்கிறான்.

நீதியாய்! முனிந்திடேல்; நீஇங் (கி)யாவர்க்கும்
ஆதியான் 57 பரசுராமப் படலம், பால காண்டம், இராமாயணம்

பரசுராமன் இராமனை இவ்வாறு பரசி யுள்ளான்.

நீதிமுறையில் இராமன் நிலைத்து வந்துள்ளமையால் அதிசய மகிமைகள் அக்கோமகன் பால் தழைத்து வந்துள்ளன.

மக்கள் இனத்தைப் பாதுகாக்க வந்தவன் தக்க நீதிமானாயிருந்த போதுதான் அவனது ஆட்சி நீட்சியாய் மாட்சியடைந்து வரும். வேல் வாள் முதலிய ஆயுத பலங்களை விட நீதியே பெரிய வலியுடையதாம். இதனை உரிமையாக உடையவன் எவ்வழியும் வெற்றியும் புகழும் பெற்று வருகின்றான்.

Every place is safe to him who lives in justice. - Epictetus

நீதியில் வாழுகிறவனுக்கு ஒவ்வொரு இடமும் சேமமான பாதுகாவலாம் என நீதியின் அரணை இது நேரே குறித்துள்ளது.

The administration of justioe is the firmest pillar of government. - Washington

ஆட்சிக்கு உறுதியான தூண் நீதிமுறையான காரிய விசாரணையே என ஜார்ஜ் வாஷிங்டன் என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார். எங்கே நீதிமுறை நிறைந்திருக்கிறதோ அங்கே மக்கள் வாழ்க்கை மாண்பு தோய்ந்து மிக்க சுகமாய் மேவி மிளிர்கிறது.

Justice is like the kingdom of God. - G.Eliot

நீதி தேவ ராச்சியமாயுள்ளது என இது உணர்த்தியுளது.

இத்தகைய நீதிமுறைகளைத் தழுவி அரசு புரிபவன் அரிய பல மேன்மைகளை மருவி மகிழ்கிறான். ஆட்சிக்கு உயிர் நிலையமான இந்த அற்புத நீர்மையை இழந்து விடின் அவன் அற்பனாயிழிந்து படுகிறான்: புன்மை படியப் புலைகள் படிகின்றன.

நல்ல தன்மைகள் மன்னியுள்ள அளவு மன்னவன்; அவை யில்லையேல் அவன் சின்னவன்; சிறுமையாயிழிந்து சீரழியாமல் பெருமையாயுயர்ந்து பேர் பெற்றவரே பார்பெற்ற பயனை நேரே பெற்று நிற்கின்றார், உயர்ந்த தலைமையை அடைந்தவன் சிறந்த நிலைமைகளை எவ்வழியும் செவ்வையாய்ப் பேணி ஒழுக வேண்டும். அந்த ஒழுக்கமே அவனுடைய காணியைக் காப்பாற்றியருளும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jul-21, 9:11 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே