கதைக் கேட்ட காதை

கதைக் கேட்ட காதை.....

அன்று பக்ரித் அரசு விடுமுறை ... அம்மாவும் அப்பாவும் வரவிருக்கும் என் பிறந்தநாளுக்கு துணி வாங்க ஒன்றாக வெளியே சென்றிருந்தனர் ... சகோதரர்கள் இருவரும் அருகில் இருந்த நூலகம் சென்றுவிட்டனர்.... வழக்கம்போல் தனிமையில் நான் (அதுவொன்றும் எனக்கு புதிதல்ல).....
அப்போது எங்கள் இல்லத்தில் தொலைக்காட்சி பெட்டியெல்லாம் கிடையாது.... விடுமுறை நாட்களில் பொழுதுபோக்கு என்றால் கதை படிப்பது, ஏதாவது கைவினைப் பொருட்கள் செய்வது ..... மாலையில் அம்மாவை தேடிவரும் அவர்களின் வகுப்பு குட்டி வாண்டுகளுக்கு கதை சொல்வதும் தான்.....

ஆனால் அன்று மதிய சமையல் என் பொறுப்பில் விடப்பட்டிருந்ததால், P.சுசிலா அவர்களின் பாடல் ஒன்றை முணுமுணுத்தபடியே முதலில் தேவையான காய்கறிகளையெல்லாம் நறுக்கி வரிசையாக வைத்துவிட்டு ..... மும்முரமாக கத்திரிக்காய் முருங்கைக்காய் சாம்பார், வெண்டைக்காய் பொறியல் , வீட்டில் அறுவடை செய்த சிவப்பு பொன்னாங்கண்ணி கூட்டு, புதினா துவையல் அனைத்தும் தயாராக்கி சாப்பிடும் மேசையில் வைத்தாகிவிட்டது... சோறு மட்டும் சூடாக அம்மா அப்பா வருவதற்கு சற்றுமுன் வைத்துவிடலாம் என்று முடிவெடுத்து, கையில் சாண்டில்யனின் படைப்பான "யவன ராணி" யில் விட்ட இடத்தில் இருந்து தொடர சோபாவில் சாவகாசமாக அமர்ந்தேன்.... ( கதையில் இளஞ்செழியனுக்கும் பூவழகிக்கும் காதல் ரசம் பொங்கும் சிறு ஊடல் )
இலேசாக
வாசல் கதவை தட்டும் சத்தம்...

இந்த நேரம் யார்வருவது... யோசித்தபடியே கதவின் தாழ்ப்பாளை திறக்க... அதற்குள் சன்னல் கம்பி வழியே அந்தக் குட்டி வாண்டு எட்டிப் பார்த்து, தன் இருபத்தெட்டுப் பல்லையும் காட்டி நமுட்டுச் சிரிப்பு சிரித்தது..... "டேய்! உதுமான் ! நீயா... என்ன இந்த நேரம்? சாய்ங்காலம் தானே வருவ...? " கேட்டுக் கொண்டே வாசல் கதவை திறந்தேன்.... உள்ளே வேகமாய் நுழைந்து முந்தியடித்து ஓடி சமையலறை மேடைமீது ஒரு பாலித்தீன் கவரை வைத்தான்....
திறந்து பார்த்தேன்... உள்ளே ஆட்டுக் கறி ....
"அக்கா! இன்னைக்கு எங்க வீட்ல பக்ரீத்கு ஆடு குர்பானி குடுத்தாங்க.... அதான் வாப்பா , டீச்சர்க்கு மொதல்ல அவங்க சமைக்கறதுக்கு முன்னாடி கறி குடுத்துட்டு வாடானு சொன்னாங்க, அதா ஓடிவந்தேன்" குதித்தபடியே சொல்லி முடித்தான்...
" அடப்போடா... இப்பதா சமையல முடிச்சேன், கறிய இப்ப என்ன பண்ண... நீயே பிரியாணி பண்ணி கொண்டுவந்திருக்லாம்ல? " ஆதங்கத்துடன் சொன்னேன்... அதற்கு முதல் காரணம் அப்போது அதை எடுத்து வைக்க எங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் கிடையாது... அடுத்து , அவர்கள் வீட்டு பிரியாணிக்கு தனி சுவையும் மணமும் உண்டு....
" அக்கா! அதுல்லக்கா, நாங்க குர்பானி குடுத்தத பகிர்ந்து குடுக்கணும், அதனாலதா கறியா எடுத்துட்டு வந்தேன்" என்று சொல்லியபடியே, காலை நீட்டியபடி தரையில் அமர்ந்தான் ...
" என்னடா, உக்காந்துட்ட? வீட்டுக்கு போல? வீட்ல உங்க வாப்பா தேட மாட்டாங்க...? வினவியபடியே நானும் கீழே அமர்ந்தேன்....
" இல்லக்கா, நா இங்கதா வந்திருக்கேனு அவங்களுக்கு தெரியும், என்ன தேட மாட்டாங்க... நீங்கவேற தனியா இருக்கீங்க, டீச்சர் வரவரைக்கும் இங்கையே இருக்கேன்" ஏதோ பெரிய மனிதன் தோரணையில் பேசினான் அந்த வாண்டு...

என் அம்மாவின் நான்காம் வகுப்பு மாணவர்களில் என்னிடம் அதிகம் ஒட்டிக் கொண்டவன் உதுமான் அலியார்..... மெலிந்த உருவம், நல்ல சிவந்த நிறம், கண்கள் எப்போதும் கருவண்டுபோல துறுதுறுப்பு ... எப்போதும் சிரித்த முகம் ...கிட்டத்தட்ட களத்தூர் கண்ணம்மா குட்டிக் கமல் போல சாயல் ... சளைக்காமல் பேசுவான் .... களைப்பின்றி குறும்பும் செய்வான் .... நெல்லை மேலப்பாளையத்திலிருந்து சமீபத்தில் தான் , சென்னையில் குடியேறி இருந்தது அவர்கள் குடும்பம்...அவன் நெல்லை வாசம் மாற பேச்சு வழக்கால் , எனக்கு அவன்மீது தனி பாசம்....

அப்பாடா , நமக்கு ஒரு நல்ல பேச்சுத்துணை கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் , பாக்கி வைத்த சோறையும் பொங்க குக்கரை அடுப்பில் வைத்தேன்... லேசாக ஆவி வந்தவுடன் வெயிட்டையும் போட்டுவிட்டு, வாண்டுவுடன் நானும் தரையில் வந்து அமர்ந்தேன்....

எப்போதும் என்னிடம் கதை கேட்கும் வாண்டு, இன்று எனக்கு கதை சொல்லத் தொடங்கினான் ... சரியான சினிமா பைத்தியம்... வடசென்னை பிரைட்டன் தியேட்டரில் திரையிடப்படும் ஒரு படத்தையும் பாக்கி வைப்பதில்லை....
(ஒருமுறை இருபது காசு நாணயங்களையும் வண்ண நெகிழிக் கயிற்றையும் பயன்படுத்தி சிறு சிறு மோதிரங்கள் செய்து ., என் அம்மாவின் மாணவர்களுக்கு பரிசளித்தேன்... உதுமான் அதைப் பெற்றுக் கொண்டு, "அக்கா இந்தக் காச என்கிட்ட கொடுத்திருந்தா 1.20க்கு மேட்னிஷோ ஒருதலை ராகம் சினிமா பார்த்துப்புட்டு ஒரு ஐஸ்கிரீமும் வாங்கி சாப்டுருப்பேன், இப்டி காச வம்பாக்கியிருக்கீகளே" என்று அங்கலாய்த்துக் கொண்டான்.)

அன்று அவன் சமீபத்தில் பார்த்த "வண்டிச்சக்கரம் " படக்கதையில் நடிகர் சுருளிராஜன் நடித்த நகைச்சுவை காட்சிகளை மட்டும், அப்படியே எனக்கு நடித்துக் காட்டிக் கொண்டிருந்தான் ... நானோ மெய்மறந்து அதை ரசித்துக் கொண்டிருந்தேன் ..... அடுப்பில் வைத்த குக்கர் மறந்தே போய்விட்டது.... அது பலமுறை விசில் அடித்து என்னை எச்சரித்து, பின்னர் நீர் வற்றிப் போனதால் , அதுவும் அடங்கிப்போனது.....

வீடே நிசப்தமாக இருக்க... அவனோ கதையை தொடர்ந்தான்...

காட்சியில் , சுருளிராஜன் ஒரு துணிக்கடைக்குள் திருடச் செல்ல, கடை மூடப்பட்டு உள்ளேயே இருக்க வேண்டிய நிலை... அடுத்த நாளும் கடை ஊழியர்கள் போராட்டத்தால் தொடர்ந்து கடை திறக்காமல்போக... உள்ளே அகப்பட்டுக்கொண்ட சுருளிராஜன் பசியில் துணிக்கடையில் உள்ள டை மற்றும் பஞ்சுகளை உண்ணும் காட்சியை அவன் மோனோ ஆக்டிங் செய்துக்காட்ட, நான் அடக்க முடியாமல் வயிறு குலுங்க சிரித்துக் கொண்டிருக்க.. திடீரென்று சமையலறையிலிருந்து பெரிய ஆட்டபாம் வெடியொத்த சத்தம்... இருவரும் சப்த நாடியும் ஒடுங்கி ஸ்தம்பித்து ஒரு நொடி நிற்க... உதுமான் சட்டென சுதாகரித்துக் கொண்டான் ....
சமையலறையை நோக்கி ஓட முயன்ற என்னை முதலில் சட்டென தடுத்து, அவன் முந்திக் கொண்டு எட்டிப் பார்த்தான் ... நான் அவனை பின்னுக்கு இழுத்து முன்னே சென்றேன் ... எங்கள் பிரஷர் குக்கர் , நீர் வற்றி வெடித்து சிதறி, அடிபாகம் கருகிய நிலையில் தரையில் கிடக்க, மூடி அஷ்ட கோணத்தில் வளைந்து ஒரு பக்கம் அண்ணாந்து கிடக்க, காய்ந்து தீய்ந்த சோறு சமையலறை மேல் சுவரில் தெறித்து ஒட்டிக் கொண்டிருக்க, மொத்த சமையலறையும் போர் முடிந்த யுத்தபூமியாய் காட்சியளித்தது... மெல்ல அடிமேல் அடிவைத்து அடுப்பை நெருங்கி தீயை அணைத்தேன்...
நல்லநேரம் , பெரியதாய் எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று நான் நிம்மதி பெருமூச்சுவிட... உதுமான் , இலேசாக கிசிகிசுக்கும் குரலில்,
"அக்கா! டீச்சர் வந்தா ஒங்கள நல்லா வைவாகல்ல... மொதல்ல ஒலைய வையுங்க, டீச்சர் வந்தா நா ஏதாவது சொல்லி சமாளிக்கிறேன்" என்று சொன்னான் ... நடந்த விபரீதத்தைக் கண்டு அவன் சிறிதும் பதறவேயில்லை..... ஆனால் கடைசிவரை உடனிருந்து சமையலறையை சீர்படுத்த பெரிய மனிதன்போல் உதவி செய்தான் ... எப்போதும் சிறுபிள்ளைத்தனமாய் குறும்புகள் செய்யும் உதுமான் , அன்று உண்மையில் பொறுப்பான பெரிய மனிதன் தோரணையில் நடந்துக் கொண்டது உண்மையில் எனக்கு பெரிய ஆச்சரியத்தைத் தந்தது....

(சிறிது நேரத்தில் வீடு திரும்பிய என் சகோதரர்கள் பதட்டப்பட்டார்கள்.... ஆனால் அம்மா, எனக்கும் உதுமானுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற மனநிம்மதியில் , சமையலறையில் ஏற்பட்ட சேதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.... அப்பா எனக்கு எடுத்துவந்த சந்தன நிறத்திலான ஹரேரா ஆடையை அணியவைத்து அழகு பார்த்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்ததோடு அமைதியாகிவிட்டார்... ஆகமொத்தம் அன்று எனக்கு எந்த ஏச்சும் விழவில்லை )

ஒவ்வொரு பக்ரித் வரும்போதும் அந்த சுட்டி வாண்டு உதுமான் அலியார் நினைவுகள் வந்து நிழலாடும்.... எங்கிருந்தாலும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று நெஞ்சம் உடன் வாழ்த்தும்!

எழுதியவர் : வை.அமுதா (23-Jul-21, 12:13 pm)
பார்வை : 74

மேலே