மேன்மை அடைய விரும்பின் அரிய குணங்கள் உடையவனாக உயர் - தகவு, தருமதீபிகை 858

நேரிசை வெண்பா

மேன்மையும் கீழ்மையும் வேறிடத்தில் இல்லையுன்
பான்மையின் உள்ளே படிந்துளகாண் - மேன்மை
அடைய விரும்பின் அரிய குணங்கள்
உடையவ னாக உயர்! 858

- தகவு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மேலான உயர்வும் கீழான இழிவும் வேறு அயலே இல்லை; யாவும் உன் இயல்பிலேயே உள்ளன; ஆகவே அரிய குணங்களை உரிமையுடன் அடைந்து பெரியவனாய் உயர்ந்து கொள்ளுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மரத்தின் வளர்ச்சி அதன் வேரிலிருந்து வருகிறது; மனிதனின் உயர்ச்சி அவனுடைய மன நீர்மையிலிருந்து விளைகிறது. மனம் செம்மையானால் மனிதன் நன்மையாளனாய் நலம் பல பெறுகிறான்; அது புன்மையானால் அவன் புலையாய் இழிவுறுகிறான். உயர்வுக்கும் தாழ்வுக்கும் மனமே மூல காரணமாயுள்ளது. அது சுத்தமானால் நித்திய முக்தியை நேரே பெறலாம்.

நினைவுகள் நல்ல நெறிகளில் பழகிவரின் அந்த மனம் புனிதமாய்ப் பொலிந்து வருகிறது; அதனையுடைய மனிதனும் மகானாய் மகிமை தோய்ந்து வருகிறான். நல்ல வாசனையால் மலரின் மேன்மையை அறிகிறோம்; அதுபோல் உள்ளப் பண்பால் ஒருவனுடைய உயர்வினை உணர்ந்து கொள்கிறோம். பண்பு படிந்து வரின் இன்பம் சுரந்து வரும். சீவ ஒளியால் மனம் சிறந்து திகழும்.

The mind is the atmosphere of the soul. - Joubert

உயிரின் வெளி உயிர்ப்பே மனம் என இது குறித்துள்ளது

A good mind possesses a kingdom. - Seneca

நல்ல மனம் ஒரு இராச்சியத்தையுடையது என செனிகா என்பவர் இவ்வாறு கூறியிருக்கிறார், இனிய நீர்மைகளோடு பழகி மனதைப் புனிதமாய் வைத்துக் கொள்ளுபவன் அரிய பல நன்மைகளையும் அதிசய மேன்மைகளையும் அடைந்து கொள்கிறான்.

மனித சமுதாயத்தை மாண்போடு பாதுகாக்க நேர்ந்த அரசன் புனிதமான இனிய நீர்மைகள் தோய்ந்தவரின் அவனுடைய ஆட்சி யாண்டும் மதிப்பாய் மாட்சி மிகுந்து வரும்.

ரகு, ககு, சிபி՝முதலிய மன்னர்களை எண்ணுந்தோறும் அவருடைய புண்ணிய நீர்மைகள் நம் கண் எதிரே தோன்றி எண்ணரிய இன்பங்களை விளைக்கின்றன. சீவர்களுக்கு இதம் செய்து அவர் ஆண்டு வந்துள்ள ஆண்மைகள் அரச குலங்களுக்கு யாண்டும் மேன்மை ஒளிகளாய் மேவியுள்ளன.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு.
(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;
மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

இரவி தன்குலத்(து) எண்இல்பல் வேந்தர்தம்
பரவு நல்ஒழுக் கின்படி பூண்டது,-
சரயு என்பது தாய்முலை அன்னதிவ்
உரவு நீர்நிலத்(து) ஓங்கும் உயிர்க்கெலாம்! 12

- ஆற்றுப் படலம், பால காண்டம், இராமாயணம்

சரயுநதி கோசல தேசத்தில் உள்ளது. தண்ணீர் எப்பொழுதும் கண்ணியமாய் அதில் நிறைந்து செல்லும்; பயிர்களும் உயிர்களும் அதனால் செழித்துக் களித்து வந்தன. அந்தத் தேசத்தை ஆண்ட அரசர்களுடைய குண நீர்மைகள் போல் அந்நதி நீர் இருந்தது எனக் கவிநாயகன் குறித்திருப்பது சுவை சுரந்துள்ளது. சிறந்த குணநலங்கள் நிறைந்த அளவுதான் அரசன் உயர்ந்தவனாய் ஒளிபெற்று விளங்குகிறான். அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், தூங்காமை, கல்வி, துணிவு, இன்சொல், இரக்கம், ஒழுக்கம், அடக்கம், உறுதி, பொறுதி, நீதி, மானம், வீரம் முதலியன அரசனின் இயல்பான நீர்மைகள் என இறைமாட்சியுள் தேவர் இசைத்துள்ளமை ஈண்டு எண்ணி யுணரவுரியது.

The king-becoming graces,
As justice, verity, temperance, stableness,
Bounty, perseverance, mercy, lowliness,
Devotion, patience, courage, fortitude! - Macbeth 4, 3

தயை, நீதி, சத்தியம், தன்னடக்கம், உறுதி, ஈகை, விடாமுயற்சி, இரக்கம், பணிவு, தெய்வபக்தி, பொறுமை, தைரியம், வீரியம் என்பன அரசனை அணிசெய்யும் பண்புகளாம் என இது குறித்துள்ளது. எந்த நாட்டிலும் அரசன் எவ்வாறு இருக்க வேண்டும் என மேலோர் கருதியுள்ள குணநலங்களையும் குறிப்புகளையும் இதனால் உறுதியாய் இங்கே உணர்ந்து கொள்கிறோம்.

வையம் உவந்து வாழ வழி காட்டியாய் வந்துள்ளமையால் அரசன் உயர்குண சீலனாய் ஒளி நீட்டியிருக்க வேண்டும்.

தான் நல்ல நீர்மையாளனாயிருந்த போதுதான் மாந்தரை வேந்தன் நன்கு பாதுகாத்து நாட்டைச் சீர்மையோடு ஆளமுடியும். உள்ளம் செம்மையாய்த் திருந்தியுள்ளவனுக்கு உலகத்தைத் திருத்தமாய் ஆளும் வல்லமை தானாகவே வந்து சேருகிறது.

மனத்தின் நன்மையே மன்னனுக்கு மன்னிய மகிமைகளை அளித்து வருகின்றன. அகத்தைச் சுத்தமாய் வைத்திருப்பவன் அதிசய சக்திகளை விரைந்து அடைந்து கொள்கிறான். உலக மாந்தர் எவரும் வியந்து புகழும்படி அவன் உயர்ந்து திகழ்கிறான். உயர்வெல்லாம் உள்ளப் பண்பால் உளவாகின்றன.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

எண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்
1அண்ணிய ரகன்றவர் திறத்து 2மாணையான்
நண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்
தண்ணியன் வெய்யனந் தானை மன்னனே! 17 நகரச் சருக்கம்

கலி விருத்தம்
(தேமா கூவிளம் புளிமா கூவிளம்)

கற்ற நூலினர் கலந்த 1காதலா
லுற்ற போழ்துயிர் கொடுக்கு 2மாற்றலாற்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற 3மாண்பினர் சுடரும் வேலினாய்! 24 சீயவதைச் சருக்கம், சூளாமணி

சுரமை நாட்டு மன்னனுடைய மாண்புகளை இவை வரைந்து காட்டியுள்ளன; அரிய பண்புகளால் பெரிய மேன்மைகள் பெருகி வருகின்றன

இனிய நீர்மையால் உயர்ந்து எவ்வுயிர்க்கும் இதம் புரிந்து வருகிற மன்னன் யாண்டும் மனித தெய்வமாய் மருவி மிளிர்கிறான்;

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jul-21, 3:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 72

மேலே