அந்த ஒருநாள்

அந்த ஒருநாள்
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
புவியே நீயும் பிறந்தன்று பொழிவாய் எப்படி இருந்தாயோ
அந்த எழிலை ஒருமுறை நான் அவசியம் காணும் வரம் வேண்டும் , .
கொடுக்கப் பிறந்த உன்னழகை கொத்திப் பறிக்கும் மானிடனை
இரியராக(ஆசிரியராக) நான் மாறி எண்ணற்ற பிரம்படி தரவேண்டும் ..

உண்டியே இங்கு இல்விடினும் ஒற்றைச்சொட்டு நீர்கூட
கொண்டி(கொள்ளை) நடக்கா நாளாக குறிப்பு நானும் பதியவேண்டும்.. .
வேயே(மூங்கில்) விரும்பிக்கேட்டாலும் விதையளவுகூட மாசற்ற
சுத்தமான உயிர்வளியை சுவாசித்துணரும் மார்பு வேண்டும். .
கொண்டல்(மேகம்) நிறைய கருத்தங்கு கொண்டு வருகின்ற நீர்த்துளியை
அன்னாந்து நானே சுவைத்துவிட அழகாய் எனக்கொரு நா வேண்டும்..

ஓசோன் மண்டலம் ஒருதுளியும் ஓட்டையின்றி வடிகட்டி
ஆதவன் வெளிவிடும் ஏனல்(கதிர்)தனை அனுபவித்துணரும் உடல் வேண்டும்..

புவியே உன்மேல் முளைவிட்ட முதல் செடியின் வருகத்தை(இலை)
கறுழ்(தாக்குதல்) நேரா தடவலுக்கு கைவிரல் எனக்கு தரவேண்டும்..

நேமி(கடல்)யே நீயும் நாள்முழுக்க நிறுத்தி வைத்திடு உன்அலையை
எண்ணெய் மேலே உருளையாய் எந்தன் படகுப் பயணம் வேண்டும்..

உவலை(துன்பம்) என்பது சிறுஉயிர்க்கும் ஒருநாள் முழுக்க நேராமல்
கவலை என்பதை மறந்து விட்ட கலக்கம் இல்லா மனம் வேண்டும்..

அசையும் உயிர்கள் அனைத்தையுமே அசையா நிலையில் நிறுத்தி விட்டு
அந்த ஒருநாள் நான் மட்டும் குந்தமாய் (குதிரையாய்)ஓடும் கால் வேண்டும்..

வேட்டம்(வேட்டை) எங்கும் நிகழாமல் விருப்ப உணவு கிடைத்துவிட
கூட்டமாக அனைத்துயிரும் கூடல் காணும் கண் வேண்டும்..

ஏதமில்லா(குற்றமில்லா)ச் செய்திதனை எல்லா ஊடகமும் நாள்முழுக்க
சாதனையாக ஒளிபரப்பும் சங்கதி புவியில் நிகழவேண்டும்..

👣👣👣👣👣👣👣👣👣👣👣👣

எழுதியவர் : க.செல்வராசு (28-Jul-21, 2:47 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : antha orunaal
பார்வை : 111

மேலே