நொய்யாம் உலகிற்கு நோய் - யூகி, தருமதீபிகை 849

நேரிசை வெண்பா

ஆண்டகைமை இல்லாத ஆண்மகனும், ஆய்ந்தமைந்த
நாண்டகைமை இல்லாத நங்கையும்; - தூண்டியும்போய்ச்
செய்யா வினையாளும்; தேற்றமிலா மந்திரியும்
நொய்யாம் உலகிற்கு நோய்! 849.

- யூகி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உறுதியான ஆண்மையில்லாத ஆடவனும், உரிமையான நாணம் இல்லாத பெண்ணும், சரியாக வேலை செய்யாத வினையாளும், தெளிவான அறிவில்லாத மந்திரியும் உலகத்திற்கு இளிவான நோய்களாம்; அவரை ஒழிய விடுவது நலமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இனிய குணங்களும் அரிய செயல்களும், உயிரினங்களை உயர்நிலைகளில் நிறுத்தி ஒளிபுரிந்து வருகின்றன; தன்மைகள் தோய்ந்த அளவே நன்மைகள் வாய்ந்து நலம் பல காண்கின்றன. கூர்ந்துணரும் அறிவும் ஓர்ந்து செய்யும் வினையும் மனிதனை உயர்ந்தவன் ஆக்கி அருளுகின்றன. மேலோர் கீழோர் என்பன எல்லாம் விவேகங்களாலும் வினைத்திறங்களாலும் விளைந்து வந்துள்ளன. அறிவும் ஆற்றலும் அதிசய ஏற்றங்களை அருளுகின்றன.

மனித இனம் இருவகை நிலையில் மருவியுள்ளது. ஆண்மை, பெண்மை என அமைந்து அது கேண்மை கிளர்ந்து வருகிறது.

ஆண்மகன் அருந்திறலாண்மைகளோடு அரிய வினைகளைச் செய்து பெரிய மேன்மைகளை அடையவுரியவன். பெண்மகள் திருந்திய பண்போடு நாணம் பேணி மானம் காத்து மனைவாழ்வு புரிய உரியவள். இருபாலும் இவ்வாறு சரியாக அமையின் அந்த நாடு எவ்வழியும் செவ்வையாய்ப் பெருமேன்மைகளை அடைந்து விளங்கும். சிறந்த நீர்மைகள் நிறைந்து சீர்மைகளாகின்றன.

உறுதி ஊக்கங்களோடு முயன்று வருபவன் உயர்ந்து வருதலால் அவனை உலகம் உவந்து புகழ்ந்து கொண்டாடுகின்றது.

This world belongs to the energetic. - Emerson

ஊக்கி முயல்பவர்க்கு இவ்வுலகம் உரிமையாகிறது என்னும் இது ஊன்றி உணரவுரியது. உள்ளத்தின் முயற்சி அளவே உலகத்தில் உயர்ச்சி விளைகிறது. ஊக்கம் வர ஆக்கம் வருகிறது.

உரிய கடமைகளை உறுதியோடு செய்வது பெரிய தருமம் ஆகிறது. ஆணுக்கு அழகு ஆள்வினை ஆற்றல்; பெண்ணுக்கு அழகு மரியாதையோடு மனைவாழ்வு போற்றல்; வினையாளுக்கு அழகு யாதும் ஏவாமல் உரிமையோடு வேலை செய்தல்; மந்திரிக்கு அழகு எதையும் தெளிவாக உணர்ந்து தேசத்துக்கு இதம் புரிதல்; உரிய கடமைகளைச் செய்பவர் பெரியவராகின்றார்.

தக்க தன்மைகளை இழந்துவிடின் மிக்க புன்மைகள் விளைந்து விடும். கருமங்களையே தருமங்கள் தழுவியுள்ளன;

மந்திரியிடம் தெளிந்த அறிவில்லையானால் அந்த அரசு பல வகையிலும் நிலை குலைந்து இழிந்து படும். அரசன் செல்வக் களிப்பில் மூழ்கி அல்லது புரிய நேர்ந்தால் அவனுக்கு நல்ல நீதிகள் கூறி உள்ளத்தைத் திருத்தி உயர்ந்த வழியில் செலுத்த வேண்டியவன் அமைச்சனாதலால் தக்க அறிவும் மிக்கவுறுதியும் விநய சாகசங்களும் அவனிடம் பெருகியிருக்க வேண்டும். அவ்வாறு மருவியிருந்த அளவுதான் அவன் மதிப்பு மிகுந்து ஆட்சியை மாட்சியாய் நடத்தி யாண்டும் மகிமைகளை விளைத்தருளுவன்.

வேந்தன் விழுமிய நிலையில் வாழ்வது சேர்ந்த மந்திரியின் மதியூகத்தாலேயாம். கூர்ந்து ஆராய்ந்து தேர்ந்து தெளிகின்ற அந்த விவேகம் குன்றினால் வேந்து நிலைகுன்றி வெந்துயர் நேர்ந்து விடும். மந்திர முறையில் மனுமுறை மருவியுள்ளது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

சுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை
தந்திர மறிந்து ஆழ்வான் ஆழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்
மந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்த்து
தந்திரந் தப்பி னாற்போற் றன்னையே 1தபுக்கு மன்றே 13

- மந்திரசாலைச் சருக்கம், சூளாமணி

அரசவாழ்வு அமைச்சனுடைய அறிவு ஆலோசனைகளால் நெறியே அமைந்து வருகிறது; ஆகவே அவனது யூகமும் யோசனையும் தெளிவும் தேற்றமும் உடையனவாய் ஒளி பெற்றிருக்க வேண்டும்; வழுவினால் அழிவு தோய்ந்து விடும் என இது விளக்கியுள்ளது. தந்திரம், உபாயம், காரணம்; காரியங்களைக் கருதி ஆராய்ந்து முடிவு கூறுவதில் பிழைகள் நேரலாகாது, எவ்வழியும் செவ்வையாகத் தெளிந்து சொல்லுவதே நல்லது. தெளிவான மொழி ஒளி விழியாய் உய்தி தருகிறது.

நேரிசை வெண்பா

செறிவுடைத் தார்வேந்தன் செவ்வியல பெற்றால்
அறிவுடையார் அவ்வியமும் செய்வர் - வறிதுரைத்துப்
பிள்ளை களைமருட்டும் தாயர்போல் அம்புலிமேல்
ஒள்ளியகாட் டாளர்க்(கு) அரிது!. 323

- பழமொழி நானூறு

பெற்ற தாயர் பிள்ளைகளைத் திருத்திப் பேணுதல் போல் உற்ற அமைச்சர் உரிய அரசரை நெறிமுறையே பாதுகாப்பர் என முன்றுறையரையர் இங்ஙனம் குறித்திருக்கிறார். அரசுக்கும் அமைச்சுக்கும் உள்ள உறவுரிமையை இதனால் உணர்ந்து கொள்கிறோம். மதியூகி நல்ல மாதாவாய் மருவியுள்ளான்.

பெரிய இராச்சியத்தைப் பேணிவரும் பொறுப்பு பெருகி வந்துள்ளமையால் அமைச்சன் அரிய பல கலைகளை ஆய்ந்து அறிவு நிலையில் உயர்ந்து நிற்கின்றான். மதிநுட்பமே மந்திரிக்கு அதிசய ஆற்றல்களை அருளியுள்ளது. எதையும் நுணுகியுணரும் யூகம் உடையவன் எங்கும் பேரறிவாளனாய்ப் பெருகி வருகிறான்.

Discretion is the perfection of reason, and a guide to us in all the duties of life. - Bruyere

மதியூகம் அறிவின் நிறைவாயிருக்கிறது; வாழ்க்கையின் கடமைகள் எல்லாவற்றிலும் நமக்கு அது வழிகாட்டியாயுள்ளது என புரூயர் என்பவர் இங்ஙனம் தெளிவாய்க் காட்டியுள்ளார்.

The better part of valour is discretion, in which better part I have saved my life. - Shakespeare

வீரத்தின் சிறந்த பாகமே விவேகம், அதில் எனது சீவியத்தைச் செவ்வையாய்ப் பேணி வருகிறேன் என்னும் இது இங்கே காணவுரியது. மதிநலம் வாழ்வை மகிமைப் படுத்தி வருகிறது.

தனிமனிதன் வாழ்வில் விவேகம் இவ்வளவு பாதுகாப்பாயுள்ளது; ஆகவே பலகோடி மக்களுடைய வாழ்வை வளமாய்ப் பேணியருளவுரிய ஆட்சியாளரிடம் அது எவ்வளவு நலமாய் இசைந்திருக்க வேண்டும்! என்பது ஈண்டு எளிது தெளிவாம்.

இத்தகைய புத்தி சாதுரியம் உடையவர்களையே உத்தம மந்திரிகளாக அரசன் உவந்து கொள்ள வேண்டும். மதியூகம் மருவாதவரை மருவினால் அதிதுயரம் ஆகுமாதலால் அவரைத் தமராகத் தழுவலாகாது. உயர்ந்த விவேகிகளை உறுதித் துணையாய்க் கொண்டால் அந்த ஆட்சி எந்த வகையிலும் சிறந்து விளங்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jul-21, 8:29 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

சிறந்த கட்டுரைகள்

மேலே